ஆயுஷ் மருத்துவப் படிப்புகள் - என்னென்ன வாய்ப்புகள்? மாணவர்களே, இத தெரிஞ்சுக்கோங்க!

Ayush Medical Courses
Ayush Medical Courses
Published on

பிளஸ்2 முடித்த பிறகு மாணவ, மாணவிகள் பலரும் அடுத்து என்ன படிக்க வேண்டும், எந்தப் படிப்பில் வேலைவாய்ப்பு அதிகம் என்பதில் குழப்பமாகவே உள்ளனர். ஒருசில மாணவர்கள் பெற்றோர்களின் வழிகாட்டுதலை ஏற்று தங்களது மேற்படிப்பைத் தொடர்கின்றனர். சில மாணவர்கள் மட்டும் மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்து நீட் தேர்வுக்காக பயிற்சி மேற்கொள்கிறார்கள். ஆரோக்கிய நலனை கருத்தில் கொண்டு யுனானி, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யோகா மற்றும் நேச்சுரோபதி போன்ற ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கு தற்போது பலரும் முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். அவ்வகையில் ஆயுஷ் மருத்துவப் படிப்புகள் தொடர்பான வழிகாட்டுதலை இப்போது பார்ப்போம்.

ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்:

நவீன மருத்துவப் படிப்புகளைப் போலவே ஆயுஷ் மருத்துவப் படிப்புகளில் சேரவும் நீட் தேர்வில் தகுதி மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாகும். இதில் ஆயுர்வேதம் (B.A.M.S.), சித்த மருத்துவம் (B.S.M.S.), ஹோமியோபதி (B.H.M.S.) மற்றும் யுனானி (B.U.M.S.) ஆகிய 4 ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கு மட்டும் நீட் தேர்வெழுதி தகுதி மதிப்பெண்களைப் பெற வேண்டும்.

யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவப் படிப்புக்கு (B.N.Y.S.) நீட் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை. இந்தப் படிப்புக்கு பிளஸ்2 மதிப்பெண்களின் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் 6 அரசு கல்லூரிகளும், 20 சுயநிதி கல்லூரிகளும் ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்காக செயல்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஆயுர்வேதம் படிப்புக்கும், சென்னையில் யுனானி படிப்புக்கும், பாளையங்கோட்டை மற்றும் சென்னையில் சித்த மருத்துவப் படிப்புக்கும், மதுரையில் ஹோமியோபதி படிப்புக்கும், சென்னையில் யோகா மற்றும் நேச்சுரோபதி படிப்புக்கும் அரசு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சித்த மருத்துவப் படிப்பு பயில தமிழ் பாடமும், யுனானி படிப்புக்கு உருது பாடமும் கட்டாயம். கிட்டத்தட்ட 5.5 ஆண்டுகள் கல்லூரி படிப்பில், முதல் 4.5 ஆண்டுகள் கல்லூரியிலும், அடுத்து வரும் ஓராண்டு உள்தங்கு பயிற்சி மருத்துவக் கல்லூரியிலும் பயிற்சி பெற வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ராணுவ மருத்துவக் கல்லூரிகளில் நர்சிங் படிப்பு; பெண்களுக்கு வாய்ப்பு!
Ayush Medical Courses

பிளஸ்2 தேர்வில் வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் பாடங்களை எடுத்து படித்த மாணவர்கள், நீட் தேர்வில் எடுத்த தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் அரசு கல்லூரிகளிலும், சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும், நிர்வாகப் பிரிவு இடங்களிலும் சேரலாம். சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1.25 லட்சமும், நிர்வாகப் பிரிவு இடங்களில் ரூ.2.50 லட்சமும் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால், அரசுக் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும். ஆயுஷ் மருத்துவ மாணவர்களுக்கு ஆண்டுதோறும் அரசு உதவித்தொகையும், விடுதி வசதியும் கிடைக்கும்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் ஆயுஷ் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகும். மேலும் விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தை மாணவர்கள் பார்வையிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com