தானங்களில் சிறந்த தானம் அன்னதானம் என்பது முன்னோர் வாக்கு. 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்கிறது மணிமேகலை. அப்படியான அன்னதானத்தை தினமும் கொடுப்பது சாத்தியமா? என்ற கேள்வி இங்கு நம்மில் பலருக்கும் இருக்கிறது. ஏதாவது விஷேசங்களுக்கோ அல்லது பிறந்தநாளைக்கோ நம்மில் பலரும் ஆசிரமங்கள் மற்றும் வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உணவளிப்போம்... ஆனால் நம் ஊரில் உள்ள அரசுப் பள்ளிகளில் தினமும் மதியம் உணவளிப்பது பெருமிதத்துக்குரிய விஷயம். இதன் பின்புலம் தெரியுமா?
'இளமையில் கல்' என்று இளம்வயதில் பெரும் கல்வியின் முக்கியத்துவத்தை நமக்கு வலியுறுத்திய ஔவையார் அம்மையார் தான், 'இளமையில் வறுமை கொடிது' என்கிறார். இளம் வயதில் வறுமையின் பிடியில் வாடும் குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்கிற உயரிய நோக்கோடு உருவாக்கப்பட்டது தான் இந்த மதியஉணவு திட்டமாகும்.
பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்த ஏழைப் பிள்ளைகளுக்கு நண்பகல் வேளையில் உணவளிக்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை செய்ய அவரை தூண்டியது என்ன? பார்ப்போம்....
"காமராஜர் அவர்கள் முதல்வராய் இருந்த காலத்தில், ஒரு மதிய வேளையில் சுற்றுப்பயணம் செய்துகொண்டு வரும்பொழுது, அந்த சாலையை ஒட்டிய ஒரு வயல்வெளியின் ஓரமாக ஒரு சிறுவன் மாடு மேய்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார். காரை நிறுத்தி வண்டியிலிருந்து இறங்கிய காமராஜர், அச்சிறுவனை அழைத்து 'பள்ளிக்குச் செல்லவில்லையா?' என்றுக் கேட்டுள்ளார். அதற்கு அச்சிறுவனோ, 'ஐயா, நான் பள்ளிக்கூடத்துக்கு போனால் எப்படி சோறு கிடைக்கும். மாடு மேய்தால்தான் எனக்கு சோறு' என்று கூறியுள்ளான்.
இந்த நிகழ்வினால் பெரிதும் மனம் உடைந்த காமராஜர், சிறிதும் யோசிக்காமல் எந்த தயக்கமும் இன்றி கையில் எடுத்தார் மதியஉணவு திட்டத்தை. அது தான் பள்ளி செல்லும் வயதில் உள்ள பெரும்பாலான பிள்ளைகளை அன்றைய காலகட்டத்தில் பள்ளிக்கு கொண்டுவர பெரும் உறுதுணையாய் இருந்தது. நாம் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, தன் பிள்ளைகளுக்கு ஒரு வேளை உணவு கிடைத்தால் போதும் என பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பிய பெற்றோர்கள் ஏராளம்.
இன்று ஒரு தலைமுறையையே வறுமையின் அடையாளமற்றவர்களாய் மாற்றிய கல்வியை, இலவசமாய், அனைவருக்குமானதாய் மாற்றிய பெருமை நம் பெருந்தலைவர் அவர்களுக்கும் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த திட்டத்திற்கும் சேரும்.
ஏனென்றால், படிக்கும் நோக்கோடு சென்றவர்களை விட சாப்பிடும் எண்ணத்தோடு சென்றவர்களே அதிகம். ஆனால், தொடர்ந்து செல்ல செல்ல மாணவர்கள் படிப்பின் தேவையையும், அதனால் ஏற்படும் விளைவையும் உணர்ந்து கற்க தொடங்கினர். இதன் விளைவே இன்று நம் தமிழகமானது அதிகம் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கையில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
சத்துணவுத் திட்டம்:
காமராஜர் தொடங்கிய திட்டம் நடைமுறையில் இருந்தாலும், வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில், 1982 ஜூலை 1 தொடங்கப்பட்டது தான் 'முதலமைச்சர் சத்துணவுத் திட்டம்'. தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் இத்திட்டத்தால் பயன் பெற்றனர். இத்திட்டம் 1984இல் உயர்நிலை வகுப்பு வரை உயர்த்தப்பட்டது. முதலில் கிராமப்புறக் குழந்தைகளுக்கும், பின்னர் நகர்புறக் குழந்தைகளுக்கும் படிப்படியாய் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதற்குப் பின்னர் முதியவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
சத்துணவுத் திட்டத்திற்கு அரசுக்கு ஆண்டிற்குப் பல கோடி ரூபாய் செலவாகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் அரிசி 100 கிராம், பருப்பு 15 கிராம், எண்ணெய் 5 கிராம் என அளவு வரையறுக்கப்பட்டுள்ளது. இவற்றை அரசே வழங்குகிறது. மேலும், காய்கறி, விறகு, மளிகைப் பொருட்களுக்குத் தேவையான பணத்தையும் தலைக்கு இத்தனை ரூபாய் வீதம் அரசு வழங்குகிறது.
ஏழைச் சிறுவர்கள் இத்திட்டத்தினால் பெரும்பயன் அடைகின்றனர். இது பள்ளிக்கு வரும் பிள்ளைகளின் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. இத்திட்டத்தினால் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். இத்திட்டம் இந்தியா முழுவதும் கொண்டுவரப்பட வேண்டும் என்பது அன்னை தெரசாவின் விருப்பம்.
ஒரு நல்ல திட்டம் எவ்வாறு ஒரு தலைமுறையையே நல்வழிப் படுத்தும் என்பதற்கு இந்த திட்டம் இன்றளவும் சாட்சியாய் விளங்குகிறது. இவ்விரு திட்டங்களையும் செயல்படுத்திய பெருந்தலைவர்கள் இருவரும் மண்ணை விட்டு மறைந்தாலும், அவர்களின் செயல்திட்டங்கள் உள்ளவரை உயிர்ப்புடன் நினைவில் நிற்பர். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பர்.