
நகரில் சாலையோர சிற்றுண்டி கடைகள் நாளுக்கு நாள் பெருகி வருவதையும், அவற்றின் முன்னால் இளம் பருவத்தினர் நின்றபடி அந்த உணவு வகைகளை வாங்கி உண்பதையும் காண முடிகிறது.
பசியிலிருந்து மீள வேண்டிய அத்தியாவசியத் தேவை, அதிக செலவு செய்ய முடியாத பணப் பற்றாக்குறை என்ற காரணங்களால் அப்படி அந்த கையேந்தி பவன்களை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றால், அது தவிர்க்க முடியாததுதான். ஆனால், வெறும் நா ருசிக்காக அப்படி குழுமும் சில இளைஞர்களைக் காணும்போது, இவர்கள்தான் எவ்வளவு எளிதாக நோயை வரவழைத்துக் கொள்கிறார்கள் என்று வருத்தமாகத்தான் இருக்கிறது.
குறிப்பாக இளைஞர்களைக் கவரும் வகையில், ‘நல்ல உடல் ஆரோக்கியத்துக்கு விதவிதமான சூப்புகள், அசைவ உணவுகள்’ என்றெல்லாம் பலகையில் எழுதி வைத்து வியாபாரம் செய்கின்றன சில சாலையோர சிற்றுண்டி கடைகள். இவை தவிர, வடநாட்டு அறிமுகங்களான, பானி பூரி, பேல் பூரி, மசாலா சுண்டல், பனீர் சமோசா என்றெல்லாமும் களை கட்டுகின்றன. இனிப்பும், புளிப்பும், காரமும் சேர்ந்த புது சுவை இந்த இளைஞர்களை அடிமை படுத்துகின்றன என்றால், அவை தயாரிக்கப்படும் போது எழும் வாசனை, தொலை தூரத்தில் சென்று கொண்டிருப்பவர்களையும் சுண்டி இழுக்கத்தான் செய்கிறது.
கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால், சில குடும்பங்களில் பெற்றோரே தங்கள் பிள்ளைகளை இப்படி சாலையோர உணவுக் கடைகளுக்கு மறைமுகமாக அனுப்பி வைக்கிறார்கள் என்பதும் புரிகிறது. அதாவது, ‘‘எம்புள்ளைக்கு இந்த இட்லி, தோசை, பொங்கல்லாம் கொஞ்சமும் பிடிக்காதுப்பா. அவன் சாப்பிடறதெல்லாம் பிட்ஸா, பெர்கர், ஸான்ட்விச்தாம்ப்பா...’’ என்று போலிப் பெருமை அடித்துக் கொள்கிறார்கள். ஆனால் தினம் தினம் விலை அதிகமுள்ள பிட்ஸாவையும் பெர்கரையும் அந்தப் பிள்ளைகளால் சாப்பிட முடியுமா? ஆகவே விலை குறைந்த, ஆனால் அதே சுவை உள்ளதாகத் தோன்றும் பண்டங்களைத் தரும் சாலையோர கடைகளை நாடுகிறார்கள்.
பாக்கெட் மனி பெற்றுக் கொள்ளும் சில சிறுவர்கள், மாலை நேரங்களில், பள்ளிக்குட்டத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பும்போது, சாலையோர உணவுக் கடைகளால் ஈர்க்கப்படுகிறார்கள். ஒருமுறை ருசி கண்டுவிட்ட பிறகு தொடர்ந்து அந்தக் கடைகளை நாடுகிறார்கள். அதே கடையில் உடன் உணவருந்தும் நண்பர், ‘‘நீங்க சைதாப்பேட்டை ரயில்வே லைனுக்குப் பக்கத்ல இருக்கற கடையில செட் தோசை-வடகறி சாப்பிட்டிருக்கீங்களா, செம டேஸ்ட்டுங்க,’’ என்று வர்ணிக்கும்போது, உடனேயே சைதாபேட்டையை நோக்கி தன் ரசனையைத் திருப்புகிறார், இவர். இப்படி நா ருசிக்கு அடிமையாகி வெவ்வேறு கடைகளுக்கு மாறி மாறி புதுப்புது உணவு வகைகளை உட்கொண்டு, அவை வெவ்வேறு வகையான எண்ணெய், மற்றும் மாவினால் தயாரிக்கப்படுகின்றனவா, அதனால் உடனேயே ஏதேனும் நோய்க்கு ஆளாகிவிடுகிறார்கள்.
அதோடு, நேரம் தப்பியும், அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடுவது, விலை குறைவாக இருக்கிறதே என்பதற்காக, எந்தக் கடையிலும் வாங்கி சாப்பிடுவது என்பது போன்ற பழக்கங்களால், சிறிய வயதிலேயே உடல் பருமன், இதய நோய், நீரழிவு நோய், மனநோய், பார்வைக் கோளாறு, ஏன் புற்று நோய்கூட வருவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். இதற்கு நகரில் உள்ள சில மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் இளைஞர்களை உதாரணமாகக் காட்டுகிறார்கள். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாவதுதான் பெருங்கவலை.
இளைஞர்களின், குறிப்பாக மாணவர்களின் இந்த நிலையை உத்தேசித்தே, ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் ஒரு மருத்துவ அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்; அவர் மாணவர்களின் உடல்நலத்தைக் கண்காணிக்க வேண்டும், தக்க அறிவுரைகளை அவர்களுக்குக் கூற வேண்டும் என்ற யோசனையும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.