

போக்குவரத்து நெரிசல் மற்றும் பல்வேறு சவால்கள் இருந்தாலும், பன்னாட்டு வல்லுநர்களின் மதிப்பீட்டில் உலகின் டாப் 20 இரவு நேரப் பொழுதுபோக்கு நகரங்களில் 17வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ள அந்தப் பெருமைமிகு நகரம் எது? டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களை ஓரம் கட்டிவிட்டு உலக அரங்கில் இந்தியாவின் கொடியைப் பறக்கச் செய்த அந்த விந்தையான நகரம் குறித்த முழுமையான சுவாரஸ்யத் தகவல்களைத் தொடர்ந்து படியுங்கள்!
நம் நாட்டில் தூங்கா நகரம் எதுவென்று கேட்டால், கேள்வியை முடிக்கும் முன்னாலேயே ‘ப்பூ..இது கூடவா தெரியாது? நம்ம மதுரைதான்னு’ பட்டென்று பதில் தெறித்து விழும். இப்ப மட்டும் இல்லீங்க! சிலப்பதிகாரக் காலத்திலிருந்தே அந்தப் பட்டம் மதுரைக்குத் தானென்றும், அப்பவே பகல் அங்காடிகளுக்கு ‘நாளங்காடி’ என்றும் இரவு நேரக் கடைகளுக்கு ‘அல்லங்காடி’ என்றும் பெயர் சூட்டியிருந்த வரலாற்றையும் விலாவாரியாகச் சிலர் விளக்க முற்பட்டு விடுவர்.
சிம்மக்கல், யானைக்கல், கறிமேடு பகுதிகளில் இன்றைக்கும் இரவு நேரத்திலும் டீக்கடைகளும், சிற்றுண்டிக் கடைகளும் மூடப்படுவதே இல்லையாம். மார்க்கட்டுகள் அருகிலிருப்பதால் இரவு நேரத்தில்தான் அதிக வியாபாரமே நடக்கிறதாம். அங்குள்ள பல கடைகளுக்குக் கதவே இல்லையாம்!
’டோர்லெஸ் ஷாப்ஸ்’! கதவிருக்கும் சில கடைகளில் கதவுகளுக்கு வேலையே இல்லையாம். மூடப்படும் போதல்லவா கதவுகளுக்கு வேலை. இரவு இரண்டு மணிக்குக் கூட சூடான கொத்து பரோட்டாவும், வெங்காயக் குடல் குழம்பும், ஆவி பறக்கும் இட்லியும், அகங்குளிர வைக்கும் பொங்கலும் கிடைக்கும் இடம் ஒன்று உண்டென்றால், அது அந்த மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரைதான்!
இப்படித் தூங்கா நகரமாக அது ஜொலித்தாலும், இரவு நேர இனிய பொழுது போக்கு நகரங்களில் அது இடம் பெறவில்லை. அந்த கேடகிரியில் இடம் பிடித்த நமது தென்னிந்திய நகரம் ஒன்றுண்டு.
'டைம் அவுட்’ நிறுவனமும் ‘இன்ட்ரெபிட்’ டிராவல் நிறுவனமும் இணைந்து உலகில் இரவு நேர இனிய பொழுது போக்குக்கு உகந்த 20 நகரங்களைத் தேர்வு செய்துள்ளார்கள். இது இந்த ஆண்டிற்கான (2026) தேர்வாம்.
இரவில் இயங்கும் பப்புகள், கேளிக்கை விடுதிகள், வணிக வளாகங்கள், மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டும், அவற்றின் தரம், பாதுகாப்பு, எல்லோரும் எளிதில் அணுகக் கூடிய குறைவான கட்டணம், சமூக, கலாசாரப் பண்புக்குள் இயங்கும் தன்மை, எல்லா இனத்தவரும், எவ்வகை மதத்தினரும், எந்த நாட்டினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பன்முகத் தன்மை ஆகியவற்றை அளவு கோலாகக் (Yard Stick) கொண்டு இந்த ஆய்வினை நடத்தியுள்ளார்கள்.
அனுபவ ரீதியான கருத்துக்களைப் பெற வேண்டி உள்ளூர் மக்களிடமே விபரங்களைக் கேட்டறிந்து, சேகரித்துள்ளனர். அவற்றை அடிப்படையாகக் கொண்டு பன்னாட்டு வல்லுனர்களின் மதிப்பீட்டுக்குப் பிறகு முடிவை அறிவித்துள்ளனர்.
நமது இந்திய நாடு என்றதும், முண்டியடித்துக் கொண்டு நமது மூளையில் தோன்றும் நகரங்கள், தலைநகரான டெல்லியும், வணிகத் தலை நகரான மும்பையுந்தான்! அதைத் தொடர்ந்து அந்தக் காலத்தில் மெட்ரோபாலிடன் சிட்டீஸ் என்றழைக்கப்பட்ட கொல்கத்தாவும், சென்னையுந்தான்.
அப்பொழுதெல்லாம் நான்கு நகரங்களே முக்கியமாகப் பேசப்பட்டன. டெல்லி, பம்பாய், கல்கத்தா மற்றும் மெட்ராஸ். ஆனால் இந்த நான்கில் எதுவுமே இரவு நேர இனிய பொழுது போக்கு லிஸ்டில் இடம் பெறவில்லை! ஆனால் அந்த நகரம் 17 வது இடத்தைப் பெற்று வரலாற்றில் இடம் பிடித்து விட்டது.
பூங்கா நகரம், சிலிகான் பள்ளத்தாக்கு, தகவல் தொழில் நுட்ப நகரம் என்றெல்லாம் மாற்றுப் பெயர்களையும் தாங்கி நிற்கும் அந்த நகரத்தில் போக்குவரத்து, குப்பை டிஸ்போசல் போன்றவற்றில் பிரச்னைகள் இருந்தாலும், இரவு நேர இனிய பொழுது போக்கின் உலகின் 20 நகரங்களில் 17 வது இடத்தில் வந்து அசத்தியிருக்கிறது.
ஆய்வு முடிவின்படி, இரவு நேர இனிய பொழுது போக்கில் முதலிடத்தைத் தட்டிச் சென்றுள்ள நகரம் தாய்லாந்தின் பாங்காக்! இரண்டாவது இடம் ஜெர்மனியின் பெர்லினுக்கு. அமெரிக்காவின் நியூயார்க் சிடி மூன்றாவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நான்காவதாகவும், ஐந்தாவதாக பிரேசில் நாட்டின் சர்போலா நகரமும் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் தேர்ச்சி பெற்றுள்ள ஒரே இந்திய நகரம் நம் அருகாமையில் உள்ள பெங்களூருதான்!
வாசகர்கள் உலகின் முன்னணி நகரங்களின் நவீன பொழுதுபோக்குத் தரநிலைகள் பற்றிய தெளிவான புரிதலைப் பெறுவதுடன், இந்தியாவின் பெருமைமிகு பெருநகரங்கள் உலக அளவில் எங்கு நிற்கின்றன என்ற வியக்கத்தக்க உண்மைகளை அறிந்துகொள்வதற்கான வழியைப் பெறுகிறார்கள்.