

வயது என்பது வெறும் எண்ணர்தான் என்பதைத் தன் ஒவ்வொரு அடியிலும் நிரூபித்து வருபவர் ஜப்பானைச் சேர்ந்த யுய்சிரோ மியுரா (Yuichiro Miura). கடும் பனி மற்றும் ஆபத்துகள் நிறைந்த இமயமலை எவரெஸ்ட் சிகரத்தில், தனது 80வது வயதில் நான்காவது முறையாக ஏறி உலகை வியக்க வைத்த இந்த சாதனையாளரின் உத்வேகம் தரும் வாழ்க்கைப்பயணம் குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கடும் பனியில் இமயமலை மீது ஏறுவது என்பது கற்பனையில் கூட செய்து பார்க்க முடியாத காரியம்.
ஆனால் தனது எண்பதாவது வயதில் நான்காவது முறையாக இமயத்தில் மவுண்ட் எவரெஸ்ட் மீது ஏறி வெற்றிச் சாதனை படைத்தார் ஒரு ஜப்பானியர் என்றால் நம்ப முடிகிறதா?
அவர் பெயர் யுய்சிரோ மியுரா (Yuichiro Miyura).
மிக பிரம்மாண்டமான சாதனைகளைப் படைக்க வயது ஒரு பொருட்டல்ல என்று நிரூபித்திருக்கும் இவரை உலகம் மதிப்புடனும் வியப்புடனும் பார்க்கிறது.
1932ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் தேதி ஜப்பானில் ஆமோரி என்ற இடத்தில் பிறந்த இவருக்கு இப்போது வயது 94.
இவரது தந்தையாரான கெய்ஸோ மியுரும் ஒரு மலையேறும் வீரர் தான்.
இளமை முதலே மலையேறுவதில் விருப்பம் கொண்ட யுய்சிரோ ஜப்பானில் உள்ள மலைகளை அளக்க ஆரம்பித்தார். தனது 11வது வயதில் ஃப்யூஜி மலை மீது ஏறினார்.
தனது எழுபதாவது வயதில் மவுண்ட் எவரெஸ்ட் மீது ஏறி இதுவரை எவரெஸ்டில் ஏறிய மிக வயதான மனிதர் என்ற சாதனையைப் படைத்தார்.
2008ம் ஆண்டு மீண்டும் எவரெஸ்டில் ஏறினார். பின்னர் 2013ம் ஆண்டு இன்னொரு முறை எவரெஸ்டில் ஏறிச் சாதனை படைத்தார்.
1970ம் ஆண்டு வெளியாகி ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படமான “தி மேன் ஹூ ஸ்கைட் டவுன் எவரெஸ்ட்’ (The Man who skied down Everest) இவர் புகழை உலகெங்கும் பரப்பியது.
இத்தனைக்கும் 2013ம் ஆண்டு எவரெஸ்ட் மீது ஏறுவதற்கு முன் இவருக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பல முறை இதய அறுவை சிகிச்சையோடு பல முறை இடுப்பிலும் அறுவை சிகிச்சையை இவர் மேற்கொண்டார்.
1970ல் எவரெஸ்டிலிருந்து இறங்கும் போது பாரசூட்டை உபயோகித்து முதன் முதலாக இப்படி இறங்கியவர் என்ற சாதனையையும் இவரே படைத்தார்.
உணவை எடுத்துக் கொள்வதில் தீவிர கவனம் செலுத்திய இவர் மனக்கட்டுப்பாட்டிற்காகவும் உடல் திறனுக்காகவும் தியானத்தை விடாது செய்து வந்தார்.
மலையேற்றத்தில் இதயம் நன்கு செயல்படுவதற்காக இதய நாள மண்டல பயிற்சிகளையும் அவர் மேற்கொண்டார். மருத்துவ நிபுணர்களை அடிக்கடி கலந்தாலோசித்து தன் உடல் வலிமை பற்றி அவ்வப்பொழுது அவர் கண்காணித்துக் கொண்டே இருந்தார்.
தனது சாகஸ செயல்களைப் பற்றி அவர் பல புத்தகங்கள் எழுதியதோடு இளைஞர்களையும் தம்முடன் மலையேற அவர் ஊக்குவித்தார். அத்துடன் உலகெங்கும் பயணம் செய்து ஊக்கமூட்டும் உரைகளையும் அவர் பல கூட்டங்களில் பேசி வந்தார்.
அவர் ஒரு போட்டோ கலை நிபுணர் என்பதால் அவ்வப்பொழுது போட்டோக்களை எடுத்து அவற்றை மற்றவர்களுடன் பகிர்வது அவர் வழக்கமானது.
ஏராளமான விருதுகள் அவரைத் தேடி வந்தன. கின்னஸ் ரிகார்டில் அவர் பெயர் பதிவானது.
120 வயது வாழ்வதே என் லட்சியம் என்று கூறும் அவர், “நூறு வயது என்ற இலக்கை வைத்துக் கொண்டால் அதை அடைந்தவுடன் நீங்கள் திருப்தி அடைந்து விடுவீர்கள். நூறு வயதை அடைந்து இன்று வாழ்பவர்களில் பெரும்பாலானோர் படுத்த படுக்கையாகவே இருக்கின்றனர்.
நீடித்த வாழ்வு என்பதில் சுவாரசியமான செயல்களைச் செய்து வாழ்க்கை வாழ்வதற்கே தான் என்று நிரூபிக்க வேண்டும்.” என்று கூறுகிறார். தான் சொன்னபடியே வாழ்ந்து காட்டி வரும் அவர் நீண்ட வருடங்கள் க்ளார்க் மெமொரியல் இண்டர்நேஷனல் ஹை ஸ்கூல் பிரின்ஸிபாலாகப் பணியாற்றி வந்தார்.
அவரை சந்திக்க வரும் பத்திரிகையாளர்கள் அவருடன் சிறிது நேரம் பேசினாலேயே பிரமித்துப் போகிறார்கள் – அவரது அறிவையும் ஆற்றலையும் கண்டு.
‘இருபது வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் நீங்கள் ஏறி நின்றால் உங்களது வாழ்வியல் (Physiological age) வயது 90’ என்று கூறும் இவர், ‘இந்தக் கணக்குப்படி பார்த்தால் நீங்கள் 90 வயதில் எவரெஸ்ட் மீது ஏறினால் உங்கள் வயது 160’ என்று கூறிச் சிரிக்கிறார்.
யுய்சிரோ மியுரா எவரெஸ்ட் மீது ஏறி வென்ற தேதிகளும் வயதும் பின்வருமாறு:
முதல் தடவை: 1970 மே, 6 – வயது 37
இரண்டாவது தடவை 2003 மே 22 – வயது 70
மூன்றாவது தடவை 2008 மே 26 – வயது 75
நான்காவது தடவை 2013 மே 23 – வயது 80
துடிப்புடன் வாழ்ந்து வரும் இவரிடம் உலகம் கற்றது ஏராளம்; கற்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளன!
வயது ஒரு தடையல்ல என்பதை உணர்ந்து, உடல் மற்றும் மன உறுதியுடன் உங்கள் லட்சியங்களை எட்டிப்பிடிக்கத் தேவையான அசாத்திய ஊக்கத்தையும், கடின உழைப்பிற்கான உத்வேகத்தையும் இந்தச் சாதனைப் பயணம் உங்களுக்குத் தரும்.