
டிஜிட்டல் தொழில்நுட்பம் நாம் செய்யும் வேலை மற்றும் தகவல் பரிமாற்றத்தில் தொடர்ந்து புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, 700 மில்லியனுக்கும் அதிகமான இணையப் பயனாளர்களைக் கொண்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியான இணையம் (Internet) உலகளவில் மக்களின் வாழ்க்கையை மாற்றி, உடனடித் தகவல் தொடர்பு, தடையற்ற பரிவர்த்தனைகள் போன்ற இணையற்ற சேவைகளை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக ஆக்கியுள்ளது.
ஆனால், அதே இணையத்தில்தான் சைபர் கிரைம் மோசடிகள் தொடர்ந்து நடைபெற்றும் வருகின்றன. குறிப்பாக, இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு நிமிடமும் ரூ.1.3 லட்சம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை நிதியை சைபர் கிரைம் மோசடிகள் மூலம் மக்கள் இழக்கின்றனர். இதில் வெறும் 20 சதவீதம் மட்டுமே மீட்கப்படுகிறது.
சைபர் கிரைம் குற்றவாளிகள் புதுப்புது யுக்தியைக் கையாண்டு இணைய பயன்பாட்டாளர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது, புதிய மோசடி ஒன்று சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ் அப் மூலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சைபர் குற்றவாளிகள் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் கூடிய லிங்க், pdf டாக்குமெண்டை உங்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்புகின்றனர்.
இதுபோன்ற "புத்தாண்டு வாழ்த்துக்களுடன் உள்ள லிங்கை கிளிக் செய்து கார்டைப் பெறுங்கள்" என்ற குறுஞ்செய்தியையும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். இவை APK கோப்பு வகை தீம்பொருளுடன் (APK File ile type malware) மறைமுகமாக இணைக்கப்பட்டிருக்கும்.
(இங்கு malware என்பது ஒருவருடைய கணினி அமைப்பை அழிக்க, சேதப்படுத்த அல்லது பயனர்களின் அனுமதி இன்றி கணினி அல்லது மொபைல் போன்களில் உள்ள தரவுகளை அணுகுவதற்கு வடிவமைக்கப்பட்ட மென்பொருள் அல்லது ஆப்ஸாக (Apps) இருக்கலாம்.)
இந்த வாழ்த்துக்களுடன் கூடிய லிங்கை நீங்கள் ஒரே ஒரு கிளிக் செய்தால் போதும், நீங்கள் வைத்திருக்கும் ஒட்டுமொத்த டிவைஸ்களையும் உங்கள் அனுமதி இல்லாமல் சைபர் கிரைம் குற்றவாளிகள் ஹேக் செய்துவிடுவார்கள்.
அதன்பிறகு, உங்கள் மொபைல் டேட்டா (data), கேலரி, உங்கள் தொடர்பு எண்கள் முதல் வங்கிக் கணக்கு விவரங்கள் வரை திருடப்பட்டு, நீங்கள் நிதி மோசடியில் சிக்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.
மேலும், வாட்ஸ்அப் மூலம் குற்றவாளிகள், புத்தாண்டு வாழ்த்துக்கள் மட்டுமின்றி, அரசு திட்டங்கள், வங்கி திட்டங்கள் மற்றும் உங்கள் தொழில்முறை சார்ந்த லிங்க் மற்றும் pdf டாக்குமெண்ட்களை அனுப்பியும் மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.
இதுபோன்ற லிங்க் மற்றும் டாக்குமெண்டுகள் உங்கள் வாட்ஸ்அப் குரூப் மூலமாகவோ அல்லது நீங்கள் மொபைலில் பதிவு செய்து வந்திருக்கும் தொலைபேசி எண்களில் இருந்தோ அல்லது அறிமுகமில்லாத எண்களில் இருந்தோ வரலாம்.
இந்த மோசடியில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க :
முதலில் உங்கள் வாட்ஸ்அப் செயலியில் உள்ள செட்டிங்கில் ஆட்டோ டவுன்லோடு அம்சத்தை இடைநிறுத்திவையுங்கள். இதன் மூலம் உங்கள் அனுமதியில்லாமல் வாட்ஸ்அப் செயலியில் இருந்து வரும் எந்தவொரு தகவல்களும் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய முடியாது.
அறிமுகமில்லாத புதிய தொலைபேசி எண்களில் இருந்தும், நீங்கள் பதிவு செய்து வைத்திருக்கும் தொலைபேசி எண்களில் இருந்தும் இதுபோன்ற வாழ்த்துக்கள் அல்லது தகவல்கள் வந்தால் அவற்றைப் புறக்கணித்து விடுங்கள்.
வாட்ஸ்அப்பில் வருகின்ற லிங்க் மற்றும் டாக்குமெண்டுகளை புதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
அனுப்பியவர்கள் உங்களுக்குத் தெரிந்த நபராக இருந்தால், அவர்களைத் தொடர்புகொண்டு விசாரிக்கவும்.
உங்கள் மொபைலில் உள்ள தொடர்பு எண்களில் இருந்தோ, உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்தோ லிங்க் உடன் கூடிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வந்தால், அவர்களிடம் அழைப்பு மேற்கொண்டோ அல்லது நேரில் சென்றோ உங்கள் வாழ்த்துகளை தெரிவியுங்கள். அவர்களுக்கும் இந்த மோசடி பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
முடிந்தவரையில் இதுகுறித்து உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்த புகார்களைத் தெரிவிக்க:
http://cybercrime.gov.in என்ற சைபர் கிரைம் போர்டலில் புகார்களைத் தெரிவிக்கலாம்.
1930 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
அவசரநிலை ஏற்பட்டால், தேசிய காவல்துறை உதவி எண் 112 அல்லது உள்ளூர் காவல்துறையைத் தொடர்பு கொள்ளலாம்.
இறுதியாக, பொதுமக்கள் அனைவரும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர் கொள்ள அரசு, பெருநிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இணைய பாதுகாப்பு குறித்த கல்வி மற்றும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.