
‘கர்ம வீரர்’ காமராஜர் காலத்தை இன்னும் உலகம் ஞாபகம் வைத்துக் கொண்டு போற்றுவதற்குப் பல காரணங்கள் உண்டு!
கல்வி, நீர்ப்பாசனம் என்று மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் அத்தனையையும் பார்த்துப் பார்த்துச் செய்த பரிசுத்த மனிதர் அவர். ஏழைகளின் துயர் துடைக்கும் ஏவலனாகத்தான் அவர் செயல்பட்டார்.
அவரின் குன்றாத ஆர்வத்தைக் குறைவின்றி நிறைவேற்ற, அவரின் கீழ் பணி புரிந்த அதிகாரிகளும் அவரைப் போலவே ஓய்ச்சல், ஓய்வின்றி உழைத்தனர். பலன்?
பல அணைகள்; பள்ளிக் கூடங்கள்; பசி போக்கித் துயர் துடைக்கும் பல தொழிற்சாலைகள்; இன்றைக்கோ, தடுப்பணைகள் கட்டக்கூடத் தடுமாறுகிறோம்!
காலங்கடத்தி, திட்டச் செலவைப் பல மடங்காக்கி, பொதுப் பணத்தை வீணடிக்கிறோம். மேட்டூரில் நீர் திறந்த பிறகு கடை மடைப் பகுதிகளில் அவசரம் அவசரமாக மராமத்து வேலைகளை, அரையுங்குறையுமாக மேற்கொள்கிறோம். எவ்வளவோ எந்திரங்கள் இன்றைக்குப் பயன்பாட்டுக்கு வந்து விட்டன. இருந்தும் ஏனோ எந்தப் பணியும் திட்டமிட்டபடி குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் செய்து முடிக்கப்படுவதில்லை.
அறுபது ஆண்டுகளுக்கு முன், சாத்தனூர் அணையைத் திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே பொதுப் பணித்துறையினர் செய்து முடித்து, முதலமைச்சர் காமராஜரின் பாராட்டினையும் பெற்றுள்ளனர்!
15-11-1957 தேதியிட்ட அரசுக்கடிதம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது:
"சாத்தனூர் அணை குறிப்பிட்ட காலத்திற்கு ஓராண்டு முன்னதாகவும், ஒதுக்கப்பட்ட தொகையில் பல லட்சங்கள் மிச்சப்படுத்தியும் முடிக்கப்பட்டதைக் காணும்போது அங்குள்ள பொறியியல் கலைஞர்களின் திறமை நன்கு புலப்படுவதைக் காணலாம். இதைக் கட்டி முடிப்பதற்கு காரணஸ்தர்களான பொறியியற் கலைஞர்களையும், ஏனைய சம்பந்தப்பட்ட தொழிலாளிகளையும் நான் மனதாரப் பாராட்டுகின்றேன்."
எத்தகைய அரசாங்கம்! எவ்வளவு கடமையுணர்வு கொண்ட பணியாளர்கள்!
இன்றைய நிலையோ இதயத்தை அறுக்கிறது. வடக்கிலிருந்து தெற்கு வரை, பாலப் பணிகள் பல வருடத் தாமதத்திற்குப் பிறகே முழுமை பெறுவது ஒரு புறம் என்றால், திறப்பு விழா காணாமலே பல பழுதாகிப் போவதும், முதல் வெள்ளத்திலேயே முழுதாகப் பாலங்கள் உடைந்து போவதும் சர்வசாதாரணமாகி விட்டது!
’ஆற்றில் போட்டாலும் அளந்து போடு’ என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். நம் ஒப்பந்ததாரர்களோ பாலமாகக்கட்டி நமது பணத்தை ஆற்றில் மிதக்க விடுகிறார்கள். என் சித்தப்பா ‘காசைக் கரியாக்காமல் வெடி வாங்கிக் கொளுத்துங்கள்!’ என்று விளையாட்டாகச் சொல்வார்! ஃபைனல் பார்ம் கரிதானே!