இது…
ஏழைகளின் இரும்புக்குதிரை!
பள்ளிசெல்லும் குழந்தைகளின்
பக்குவ நண்பன்!
காற்றிலும் மழையிலும்
கடினச் சாலைகளிலும்
ஏற்ற இறக்கங்களிலும்
எப்பொழுதும் இதன்ஓட்டம்!
இதற்கு…
காற்றோடும் கூட
கனிந்த தொடர்புண்டு!
நீரோடும் கூட
நெருங்கிய உறவுண்டு!
முன்னதை உள்ளடக்கி
முன்னேறும் இதுவோ…
பின்னதைப் போலவே
பெரும் இறக்கத்தில்
பெருமையுடன் ஓடிவரும்!
நம்மிந்தியத் திருநாட்டில்
ஏகப்பட்ட ஏழைகளின்
வாழ்க்கை நகர்ந்திடவே
வழிசெய்யும் இதன்உழைப்பு!
வசதிமிகப் படைத்தோர்
வளமாக வாழ்ந்திடவே
இதன்உதவி நாடிடுவர்
ஏறியே மகிழ்ந்திடுவர்!
ஸ்காட்லாந்து போலீசும்…
நெரிசல் நேரங்களில்
நீண்ட சாலைகளில்
இதனுதவி கொண்டே
இறுக்கத்தைத் தவிர்த்திடுவர்!
இப்பொழுது புரிகிறதா
இது எதுவென்று!
சின்ன வயதில்…
குரங்குப் பெடல்போட்டு
கொஞ்சிக் கொஞ்சியே
உன்னுடனே ஊர்சுற்றி
உறவாடி மகிழ்ந்ததெல்லாம்
நெஞ்சில் நிழலாடி
நிம்மதியை அசைபோடும்!
சைக்கிளே! நீயும்
சாதாரண எந்திரந்தான்!
மனித சக்தியுடன்
கூட்டணி சேர்ந்துகொண்டே
குவலயத்தை ஆளுகிறாய்!
இரண்டு சக்கரத்தால்
இவ்வுலகைச் சுற்றிவர
என்றைக்கும் எங்களுக்கு
இனிதாய் உதவிவரும்
சைக்கிளே உனக்கு
சாஷ்டாங்க நமஸ்காரம்!
உண்மையை நீ
உணர்வாயா முழுமையாய்!
பள்ளி கல்லூரிக்கு…
பல்பொருளும் வாங்கிவர…
அகால நேரத்திலும்
அன்புடைய காதலியரை
பார்த்துப் பேசிடவே…
பணிக்குச் சென்றிடவே…
மருத்துவமனை…கோர்ட்என்று
சென்று திரும்பிடவே…
எல்லாத் தருணங்களிலும்
நீயிருப்பாய் மக்களோடு!
பலரின் இறுதிஊர்வலத்திலும்
உன்னுடனே கலந்துகொள்வர்!
நள்ளிரவில் வலியெடுத்த
கர்ப்பிணி மனைவியை…
உடனடியாய் ஹாஸ்பிடலில்
சேர்த்திட உதவிடும்
சேவை உனதன்றோ!
பிறப்பிலும் உன்பங்கு…
இறப்பிலும் உன்தொடர்பு…
சைக்கிளே நீதான்
சர்வத்திலும் பங்குபெறும்
உயர்ந்த வாகனம்!
உலகே இதையறியும்!