
பிறப்பிக்கும் ஆணைகளால்
பிறந்திடுமா நற்கதியும்!
உத்தரவுகளைச் செயலாக்க
உரியமுறை நடவடிக்கை
எடுக்க வேண்டியவர்கள்
ஏகமாய்த் தூங்குகையில்
ஏழை எளியவர்கள்
எல்லாச் சிரமங்களையும்
ஏற்பதை அன்றி
எப்பொழுதுதான் விடிவோ?
சாலைகளின் ஓரங்களில்
சப்தம் ஏதுமின்றி…
இருளை அணைத்தபடி…
எமனின் தூதர்களாய்…
தடுப்புச் சுவரில்லா
தண்ணீர்நிறை கிணறுகளை
அடையாளம் காட்டிடவும்
ஆங்கெதுவும் இல்லாமல்…
ஆட்கள் இறந்ததுமே
ஆணை பிறப்பிக்கும்
அரசின் முடிவுகளால்…
எந்தப் பயனுமே
இங்கு விளையவில்லை!
சாத்தான் குளத்தருகே
மீரான்குளம் கிராமத்தில்…
வேனில் வந்தவர்கள்
விபரம் அறியாமல்…
கிணற்றினுள் விழுந்து
விட்டார்கள் இன்னுயிரை!
ஐந்துபேர் உடல்களை
ஆயாசப்பட்டே எடுத்ததாய்
தீயணைப்புத் துறையினர்
திணறிச் சொல்கின்றார்!
அதிகாரிகள் வந்தார்கள்…
அப்புறப் படுத்தினார்கள்!
அரசும் நிவாரணத்தை
அறிவித்து ஓய்ந்தது!
தலைமைச் செயலாளர்
ஆணையொன்றை அவசரமாக…
மாவட்ட ஆட்சியர்க்கு
அனுப்பி விட்டார்!
-தடுப்புச் சுவரில்லா
கிணறுகள் தமக்கு
உடனே அதனை
நிறுவுக என்றே!
நிறுவினார்களா என்றுபார்க்க
ஏனோ மறக்கின்றனர்!
முப்பதாண்டுகள் முன்னால்…(1995)
வெள்ளக்கோவில் அருகினிலே…
மாந்தபுரம் தன்னிலே…
பழனியைச் சேர்நத
கலிக்கநாயக்கன் பட்டி
கூலித் தொழிலாளர்கள்…
எண்பத்தொன்பது பேர்
லாரியில் பயணிக்க…
அறுபதடி ஆழக்கிணற்றில்
ஐம்பதடி உயரத்தண்ணீரில்
வீழ்ந்தது வாகனம்!
முப்பது பேருயிர்
மொத்த நீரில்
மூழ்கியே போனது!
நிவாரணம் அறிவித்து…
ஆணை ஒன்றை…
அப்பொழுதும் பிறப்பித்தார்கள்!
அத்தனை கிணறுகளுக்கும்
தடுப்புச்சுவர் உடனடியாகக்
கட்ட வேண்டுமென்று!
கட்டியிருந்தால் காவுபோயிருக்குமா
பலவுயிர் இன்று?
ஆணைகளைக் கண்காணிக்க…
ஆணித் தரமான…
குழுவொன்று தேவை!
ஆணைகள் உடனே…
குழுவையும் நியமித்தால்…
நல்லது நடக்கும்!
ஆணைகளை நிறைவேற்ற
காலக் கெடுவையும்
கட்டாயமாக்க வேண்டும்!
இறந்தோர் குடும்பமே
இழப்பின் வலியை
முழுதாய் உணரும்!
கவுன்சிலர்கள் விஏஓவென்று
அடிமட்டம் அறிந்தபலரும்…
சாலையோரச் சங்கதிகளை
தெளிவாய் அறிவர்!
சிரமமே இல்லை…
தடுப்புச் சுவரில்லா
கிணறுகளைக் கண்டறிய!
ஐயா அதிகாரிகளே!
மனது வையுங்கள்!
எவ்வளவு விரைவில்
இதனை நிறைவேற்ற
முடியும் என்று
முழுமூச்சாய் செயல்படுங்கள்!
இனியொரு வாகனம்
இந்தியா தன்னில்
கிணற்றில் இறங்காமலிருப்பதை
உங்களால் மட்டுமே
உறுதிசெய்திட இயலும்!