இன்று 74வது பிறந்த நாள் காணும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசியல் சரித்திரத்தில் தனி முக்கியத்துவம் பெற்றிருக்கிறார் என்றால் அது மிகையில்லை. குஜராத் மாநிலம் வாத் நகரில் தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி-ஹீராபென் தம்பதியருக்கு மகனாய் பிறந்தார் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி.
செப்டம்பர் மாதம் 17, 1950 அன்று பிறந்த இவர் சிறுவயது முதலே தேசிய உணர்வு கொண்டிருந்தார். தனது எட்டாவது வயதிலேயே ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரிய சேவா ஸ்வயம் சேவக்) என்ற தேசிய மற்றும் பொதுநல சேவை அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். ரயில் நிலையத்தில் தனது தந்தையார் நடத்தி வந்த டீக்கடையில் பணியாற்றி தந்தையின் சுமையைக் குறைத்த அருமைப் புதல்வர் இவர். குஜராத் பல்கலை கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுநிலை பட்டம் பெற்றார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆன்மிகம் மற்றும் தேசியம் இணைந்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட அரசியல் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியில் 1987ம் ஆண்டு சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார். அடுத்த எட்டு வருடங்களில் குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் அந்தக் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற தம் உழைப்பை நல்கினார். அதன் மூலம் அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தது.
2001ம் ஆண்டு முதல்வர் சேசுபாய் படேல் பதவி விலக, நரேந்திர மோடி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து நான்கு தேர்தல்களிலும் பாஜக வெற்றி வாகை சூட, மோடி தன் முதல்வர் பதவியில் சுமார் பதினாறு ஆண்டுகள் நீடித்தார். அகில இந்திய அளவில் 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தான் போட்டியிட்ட வாரணாசி, வடோதரா ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று இன்று வரை பாரதப் பிரதமராக நீடிக்கிறார்.
கர்ம வீரர் காமராஜர் போல இவரும் தம் உறவினர் யாரையும் - தாயார் உட்பட - தம் பதவி காலத்தின்போது உடன் வசிக்க அனுமதிக்கவில்லை. அவர்களுக்கு எந்தச் சலுகையும், எந்த சந்தர்ப்பத்திலும் வழங்கவில்லை. தன்னுடைய பிரதமர் பதவிக் காலத்தில் பல புரட்சிகரமான செயல்களில் வெற்றிகரமாக ஈடுபட்டார் நரேந்திர மோடி.
நாட்டுக்குள் போக்குவரத்து உள் கட்டமைப்பை மேம்படுத்தியது, நேரடியான அந்நிய முதலீடுகளை ஈர்க்க, விதிகளை தளர்த்தி, தாராளமயமாக்கியது, இறைச்சிக்காக பசுக்களைக் கொல்வதைத் தடுக்க சட்டம் இயற்றியது, பண மதிப்பிழப்பை அறிவித்து கறுப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தியது, சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தி, உள்ளூர் நுகர்வு வரிகளின் குழப்பமான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தியது, இதனால் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தினார்.
முத்தலாக் நடைமுறையை சட்டமியற்றி ஒழித்தது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 360ஐ ரத்து செய்து, அதன் சுயாட்சியை நீக்கி, நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்தது, கோவிட்-19 கிருமித் தொற்றால் உலகமே அசைவற்று நின்று கையைப் பிசைந்து கொண்டிருந்தபோது, நம் நாட்டிலேயே தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்து அந்த நோயைக் கட்டுப்படுத்தியது (நம் நாட்டில் மட்டும் என்றில்லாமல், பல வெளி நாடுகளுக்கு அந்த மருந்தை இலவசமாக அனுப்பி வைத்து அவர்களையும் காத்தது) பாராளுமன்றத்திற்கான புதிய கட்டடம் நிர்மாணித்தது, விவசாயத் துறையை தாராளமயமாக்க சட்டம் இயற்றப்பட்டது.
400 ஆண்டுகால பிரச்னையான ராமர் கோயில் உருவாக்கத்தை நிறைவேற்றியது, விளையாட்டைப் பொறுத்தவரை உலக அரங்கில் பாரதத்தின் பெருமையை நிலைநாட்டும் வீரர்களைக் கொண்டாடியது, ராணுவ சிப்பாய்களை நேரில் சென்று சந்தித்து பண்டிகை கால வாழ்த்துகளைத் தெரிவித்து அவர்களுடைய தியாகத்துக்கு உரிய மரியாதை செலுத்தியது என்று பல சாதனைகளால் வலிமையான பிரதமாகத் திகழ்கிறார் நரேந்திர மோடி.
அந்த சாதனையாளருக்கு இன்று பிறந்த நாள். அரசியல் காழ்ப்புணர்ச்சிகள், உலக அளவில் பிரபலமடைவதால் ஏற்படும் பொறாமை, எரிச்சல் என்று பல எதிர்மறை அலைகள் அவரைத் தாக்கினாலும், ‘தன் கடன் தேசப் பணி செய்து கிடப்பதே’ என்ற உயரிய நோக்கில் செயல்பட்டுவரும் அவருக்கு கல்கி குழுமம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறது!