காலை உணவும் கல்வியும்

காலை உணவும் கல்வியும்
Published on

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில்  மதுரையில் தொடங்கி வைத்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவதென்பது நீண்ட காலமாகவே நடைமுறையில் இருந்துவருகிறது. 1922லேயே சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் சோதனை முயற்சியாக இந்தத் திட்டம் துவங்கப்பட்டது. இளமையில், வறுமையோடும், பசியோடும் இருப்பது கொடுமையானது. பல மாணவர்கள் பசித்த வயிறோடு பள்ளிக்கு வருகின்றனர். வறுமை காரணமாக கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காகவே மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார்

1956ல் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு 1982ஆம் ஆண்டு இந்தத் திட்டம் மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தப்பட்டது.

அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனால் ஊரகப் பகுதிகளில் துவங்கப்பட்ட இந்தத் திட்டம் “சத்துணவுத் திட்டம்” என அழைக்கப்பட்டது. சுமார் 60 இலட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. 15,500 மேற்பட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் நியமனம், குழந்தைகள் காப்பகங்கள் உதவியாளர், சமையல்காரர்கள் என்று ஏறத்தாழ ஒரு லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன.

அரசுப் பள்ளிகளில் கல்வி பெறும் குழந்தைகளை அனைவருக்கும் மதிய உணவு வழங்கிய முதல் மாநிலம் தமிழ் நாடு. இதை தொடர்ந்து  இப்போது  காலை உணவு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில், பல பெற்றோர் கூலி வேலைக்கு செல்பவர்களாக இருப்பதால், அவர்களது குழந்தைகள் காலையில் சாப்பிடாமலே பள்ளிக்கு வருகின்றனர். அதிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதால், பலர் மயக்க நிலைக்கு செல்கின்றனர் என கள ஆய்வில் தெரியவந்ததால், இத்திட்டத்தை முதல்வர் கொண்டு வந்துள்ளார். முதல்கட்டமாக, மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்திற்காக ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும்  இந்த காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்  பெரிதும் உதவும்.  காலையில் குழந்தைகளுக்கு உணவு தயாரித்துக் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் எண்ணற்ற கிராமப்புற பெற்றோர்களுக்கு இந்தத் திட்டம் ஒரு வரப் பிரசாதம்

திட்டத்தை தொடங்கி வைத்து  உரையாற்றிய முதலமைச்சர் சொன்ன இந்த  வார்த்தைகள் வரலாற்றில் பேசப்படும் , "பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு பசியோடு பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடாது இன்று எண்ணியதாலேயே காலை உணவு திட்டத்தை செயல்படுத்தினேன். உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு எவ்வாறு கனிவோடும் அக்கறையோடும் உணவு வழங்குகிறீர்களோ, அதைவிட கூடுதல் கவனத்தோடு கனிவோடும் உணவு வழங்கப்படவேண்டும்.

. கல்வி நம் போராடி பெற்ற உரிமை. படிப்பு ஒன்று தான் உங்களிடம் இருந்து யாராலும் அபகரிக்க முடியாத சொத்து. நீங்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். படித்துதான் ஆக வேண்டுமா? படிக்காத நபர்களும் வாழ்வில் முன்னேறி இருக்கிறார்கள். குறிப்பாக இந்த படிப்பைதான் படிக்க வேண்டுமா? வேற படிப்பே இல்லையா? என்று கூறுபவர்களை முட்டாளாக பாருங்கள்.

நீங்கள் படித்து அறிவார்ந்த சமூகமாக முன்னேற வேண்டும். எந்த சூழ்நிலையிலும் எந்த காரணத்திற்காகவும் கல்வியை விட்டு விடாதீர்கள். விலகிச் செல்லவும் நான் விடமாட்டேன்" என்று பேசியிருப்பது  அவர் இந்த திட்டத்தின்பால் கொண்டிருக்கும்  உண்மையான அக்கறையைக் காட்டுகிறது. 

நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும்  பல மக்கள் நல திட்டங்களுக்கு தமிழகம் தான் முன்னோடி. அதுபோல் இந்த திட்டமும்  ஒரு நாள் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் அறிமுகமாகும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com