பேரறிஞர் அண்ணா, தாய்த் தமிழிலும், பிரிட்டிஷ் ஆங்கிலத்திலும், அனைவரையும் கவரக்கூடிய விதத்தில் பேசக் கூடியவர் என்பது உலகறிந்த உண்மை! அந்தப் பேச்சாற்றலை மனித நேயப் பண்புகளுக்கே பெரிதும் பயன்படுத்தி, எல்லோர் உள்ளங்களிலும் இடம் பிடித்த 'இறவா மனிதர்' அவர் என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள். இதோ ஓர் உதாரணம்!
ஒரு முறை, உலக கிறிஸ்தவ மதத் தலைவர் போப்பாண்டவரைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. ’ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேசலாம்’ என்று கூறப்பட்டது! அண்ணாவும் அந்த 5 நிமிடங்களில் ‘மகாத்மா காந்தி பிறந்த இந்திய நாட்டின் கடைக்கோடி மாநிலமான தமிழகத்தைச் சேர்ந்தவன்’என்று ஆரம்பித்து, தமிழ் மொழி மற்றும் தமிழகத்தின் சிறப்புக்களை சுருக்கமாகக் கூற, அவர் பேச்சால் ஈர்க்கப்பட்ட போப், ’அருமையாகப் பேசுகிறீர்கள்.. தொடர்ந்து பேசுங்கள்’ என்க, சுமார் 55 நிமிடங்கள் அண்ணா பேசினார்!
அவர் பேச்சில் சொக்கிப் போன போப், முடிவில், ’உங்களுக்கு என்ன வேண்டும்? கேளுங்கள் தருகிறேன்’ என்றார்! 'எதைக்கேட்டாலும் தருவீர்களா?’ என்ற அண்ணாவைப் பார்த்து, ’நிச்சயமாகத் தருகிறேன், கேளுங்கள்,’ என்றார் போப்!
உடனே அண்ணா, ’அதிகமாக ஒன்றுமில்லை. எங்கள் நாட்டின் கோவா பகுதியை, போர்ச்சுகல் நாட்டினர் ஆக்கிரமித்திருந்தனர். ஆக்கிரமிப்பை அகற்றி விட்டாலும், அதனை எதிர்த்துப் போராடிய ‘மோகன் ரானடே’ வை இன்னும் லிஸ்பன் சிறையிலேயே வைத்துள்ளனர். அவரை விடுவிக்கச் செய்ய வேண்டும். அதுவே எனது அன்பான வேண்டுகோள்,’ என்றாராம்!
வாக்களித்தபடி, போப் அவரை விடுவிக்க ஆவன செய்தார்! விடுதலையாகி டில்லி வந்த ரானடேயை, இந்திரா காந்தி வரவேற்க, அவர், ’அண்ணா எங்கே?’ என்று கேட்டாராம். அண்ணா இறந்து விட்ட செய்தியைக் கூறிய இந்திரா, ’அவர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரன் இருக்கிறார்.
அண்ணாவின் சார்பாக அவர் உங்களுடன் கோவா வருவார்!’ என்க, ’கோவாவுக்கா? கோவா மக்களே என்னை மறந்து விட்டாலும், என்னை மறக்காமல் என் விடுதலைக்கு வித்திட்ட அண்ணா சமாதிக்கல்லவா நான் முதலில் செல்லவேண்டும்?’ என்று கூறி விட்டு, சென்னைக்கு வந்து அண்ணா சமாதியில் அழுது புரண்டாராம் மோகன் ரானடே!
தனக்கென எதையும் கேட்காமல், ஒரு நியாயமான போராளியின் விடுதலைக்காக போப்பாண்டவரிடம் வேண்டுகோள் விடுத்து சாதித்த, அண்ணாவின் மனித நேயப் பண்பை என்னென்பது? அதனாலல்லவோ அவர் அனைவர் மனத்திலும் இன்றும் வீற்றிருக்கிறார்!