

CBI (Central Bureau of Investigation) என்ற பெயரைக் கேட்டால் அனைவருக்கும் ஒவ்வொருவிதமாக அர்த்தங்கள் மனதுக்குள் தோன்றும். இந்தியா முழுக்க அவர்கள் கையாண்ட பிரபலமான வழக்குகளைப் பற்றி தெரியுமா?
இந்தியா முழுக்க பிரபலமாகிய CBI வழக்குகள் (CBI investigation cases): பாதுகாப்பு ஒப்பந்தங்களில் நடந்த ஊழலை அம்பலப்படுத்தி அரசியல் அமைப்பையே உலுக்கிய போபர்ஸ் ஊழல் (Bofors scandal, 1987).
தொலைத்தொடர்பு உரிமங்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பான 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு (2G Spectrum case, 2008).
இந்தியாவின் மிகப்பெரிய பெருநிறுவன மோசடியான சத்யம் ஊழல் (Satyam scam, 2009).
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகளுடன் தொடர்புடைய கோல்கேட் ஊழல் (Coalgate scam, 2012).
குற்றவியல் வழக்குகளைப் பொறுத்தவரை ஆருஷி தல்வார் (Aarushi Talwar) இரட்டைக் கொலை வழக்கு (2008) மற்றும் ஷீனா போரா (Sheena Bora) கொலை வழக்கு (2015) ஆகியவை நாடு முழுக்கப் பெரும் பொதுக்கவனத்தை ஈர்த்தன.
அனைத்திற்கும் நல்ல தீர்ப்பு கிடைத்ததா?:
அனைத்து வழக்குகளும் வெற்றிகரமான தண்டனைகளுடன் முடிவடையவில்லை. சத்யம் ஊழல் (Satyam scam) வழக்கில் அதன் நிறுவனர் ராமலிங்க ராஜு தண்டிக்கப்பட்டார்.
அதே சமயம் 2ஜி அலைக்கற்றை வழக்கு போதிய ஆதாரம் இல்லாததால் குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜா, கனிமொழி எம்.பி தொலைதொடர்பு செயலாளர் மற்றும் பலர் விடுதலையுடன் முடிவடைந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது.
போஃபர்ஸ் ஊழல் (Bofors scandal) பல தசாப்த கால விசாரணைக்குப் பிறகும்; ஒரு முடிவுக்கு வராமல் இப்போதும் உள்ளது.
நீண்ட காலமாக நடந்துவரும் அல்லது செயலில் உள்ள CBI வழக்குகள்:
போஃபர்ஸ் வழக்கு (1987) நீண்ட காலமாக நடந்துவரும் விசாரணைகளில் ஒன்றாகும்; இது இன்றும் சட்ட மற்றும் அரசியல் விவாதங்களில் பேசும் பொருளாக உள்ளது.
கோல்கேட் ஊழல் (2012) தொடர்பான அம்சங்கள் நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில்தான் உள்ளன.
சிபிஐ விசாரணைகள் ஏன் பெரிதாகப் பார்க்கப்படுகின்றன?:
சிபிஐ (CBI), பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Ministry of Personnel, Public Grievances and Pensions) மூலம்; Department of Personnel and Training அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன.
இது முற்றிலும் சுதந்திரமான (Independent) அமைப்பு அல்ல; ஆனால் அதன் நாடு தழுவிய அதிகார வரம்பும், நிபுணத்துவமும் இதை இந்தியாவின் முதன்மை புலனாய்வு அமைப்பாகக் (premier investigative agency) காட்டுகிறது.
இதன் இயக்குனர் (Director), பிரதமர், மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர், இந்தியத் தலைமை நீதிபதி போன்றவர்களால் நியமிக்கப்படுகிகிறார். பொறுப்பேற்பவர்களும் பொதுவாக ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரியாகதான் இருப்பார்.
மாநில காவல்துறையை விட, சிபிஐ அதிக சுதந்திரமானதாகவும், அதிக சக்திகளைக் (resourceful) கொண்டதாகவும் கருதப்படுவதால் அது பெரிதாகப் பார்க்கப்படுகிறது. சிபிஐக்கு நாடு தழுவிய அதிகார வரம்பு (nationwide jurisdiction), மேம்பட்ட தடயவியல் வசதிகள் (advanced forensic facilities) மற்றும் இன்டர்போல் (Interpol) மூலம் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை உள்ளன.
மாநில அமைப்புகளைப் போலில்லாமல் சிபிஐ பல மாநிலங்களில் நடக்கும் குற்றங்கள், உயர் மட்டங்களில் நடக்கும் ஊழல்கள் மற்றும் உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றங்களால் நேரடியாகப் பரிந்துரைக்கப்படும் வழக்குகளைத் தடையில்லாமல் விசாரிக்க முடியும்.