

ஜப்பான் அதிக மக்கள் தொகை மற்றும் நகரமயமாக்கலை (Urbanization) சமாளிக்க மலைகளை அழித்து, நிலத்தை சமன் செய்துள்ளது. உயரமான கட்டடங்களை கட்டியுள்ளது. மேலும் கடல் பகுதிகளை மீட்டெடுத்துள்ளது. இது நிலப்பரப்பை மாற்றியமைத்து அதிக நகரமயமாக்கல் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வாழ்விட இழப்பு மற்றும் வனவிலங்கு அழிவுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக நதி நீர்நாய் போன்ற உயிரினங்கள் இதனால் அழிந்து போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலைகளை அழித்து நகரமயமாக்கலுக்கான காரணங்கள் என்ன தெரியுமா?
ஜப்பான் உண்மையிலேயே ஒரு விசித்திரமான நாடு. அங்கு இடம் இல்லையென்றால் இருக்கும் இடத்திற்குள் மக்கள் வாழ்வதில்லை. மாறாக இயற்கையின் வடிவத்தையே மாற்றி தங்களுக்குத் தேவையான இடத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். போருக்கு பிந்தைய காலங்களில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு இடமளிக்க நிலம் தேவைப்பட்டது. மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக மலைகளை அழிக்கின்றனர்.
நகரங்களை விரிவுபடுத்தவும், புதிய கட்டுமானங்களை உருவாக்கவும் இயற்கை நிலப்பரப்புகள் மாற்றி அமைக்கப்பட்டன.
செயல்படுத்தப்பட்ட முறைகள்:
மலைகளை அகற்றி நிலத்தை சமன் செய்து, கட்டுமானத்திற்கு ஏற்ற நிலங்களாக மாற்றினர். ஜப்பானின் புகுவோகா(Fukuoka) நகரின் புறநகர் பகுதியில் புதிய குடியிருப்பு எழுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு எங்கு பார்த்தாலும் காட்டுப்பன்றிகளும், மூங்கில் காடுகளும் காணப்பட்ட இடத்தில் இன்று சமதளமாக்கப்பட்ட நிலமும், நவீன வீடுகளும் காட்சியளிக்கின்றது. இப்படி ஜப்பான் தனது 70% மலைகளை அகற்றி அல்லது செதுக்கி, நிலத்தை சமம் செய்து கட்டுமானத்திற்கு ஏற்ற இடங்களாக மாற்றி வருகிறது. மலைகளை உடைத்து அந்த மண்ணைக் கொண்டு பள்ளமான பள்ளத்தாக்குகளையும், கடல் பகுதிகளையும் நிரப்பி நிலத்தை உருவாக்குகின்றனர்.
போருக்குப்பின் பெருகிவரும் மக்கள் தொகைக்கு இடம் அளிப்பதற்கு மிக உயரமான கட்டிங்களைக் கட்டியது. செங்குத்து வளர்ச்சியை ஊக்குவித்து, குறைந்த நிலப்பரப்பில் உயரமான கட்டிடங்களை எழுப்பி அதில் அதிக மக்களை குடியேற்றினர். நிலநடுக்கம் மற்றும் சூறாவளிகளைத் தாங்கும் வகையில் அதிநவீன பொறியியல் கணக்கீடுகளுடன் இந்த நிலங்கள் உருவாக்கப்படுகின்றன.
கடல் பகுதிகளை நிரப்பி, புதிய நிலங்களை உருவாக்கி நகர விரிவாக்கத்திற்கு பயன்படுத்துகின்றனர். நாகசாகிக்கு அருகில் உள்ள புறநகர் பகுதியில் காணப்பட்ட 40 மீட்டர் உயரத்தில் இருந்த பெரிய மலையை செதுக்கி, உடைத்து அங்கிருந்து எடுக்கப்பட்ட மண்ணை அருகில் இருந்த கடலில் கொட்டி சமதளமாக்கினர். மீனவர்கள் படகு நிறுத்திய இடத்தில் இன்று பிரம்மாண்டமான வணிக வளாகமும், சாலையும் காணப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட விளைவுகள்:
மலைகளையும் காடுகளையும் அழித்ததால், பல உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டன.
ஜப்பானிய நதி நீர்நாய் போன்ற தனித்துவமான இனங்கள் வாழ்விட இழப்பால் முற்றிலும் அழிந்து போயின.
நிலப்பரப்பின் இயற்கையான வடிவத்தை மாற்றுவது சுற்றுச்சூழலில் நீண்ட கால தாக்கங்களை ஏற்படுத்தியது.
ஜப்பானின் புவியியல் அமைப்பு காரணமாக, இது நிலநடுக்கம் மற்றும் சுனாமி அபாயங்களை அதிகரிக்கிறது.
ஜப்பான் நிலப்பரப்பை மாற்றி அமைப்பதன் மூலம் நகரமயமாக்கலை மேற்கொண்டது. இது மக்கள் தொகை நெருக்கடிக்கு தீர்வாக இருந்தாலும் கடுமையான சுற்றுச்சூழல் தாக்கங்களைக் கொண்டுள்ளது.