

-Article written in English by Zai Whitaker
-Tamil Translation by Priyanka R
முதலைப்பண்ணைக்கு வருகை தரும் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய முதலைகள், முதலைப் பண்ணையின் நட்சத்திர ஜோடியான ஓடின் (ஆண்) மற்றும் ஃபிரேயா(பெண்) உப்புநீர் முதலைகளாகும்.
1983 ஆம் ஆண்டு சென்னை முதலைப்பண்ணையில், பெண் உப்புநீர் முதலையான ஃபிரேயா முட்டையிட்ட போது, அது ஓர் அரியதொரு நிகழ்வாக கருதப்பட்டது. ஏனெனில் இந்தியாவிலுள்ள விலங்கியல் பூங்காக்களிலே உப்புநீர் முதலைகள் இனப்பெருக்கம் செய்து முட்டையிட்டது அதுவே முதல்முறையாகும்.
அன்றிலிருந்து இன்றுவரை, வருடந்தோறும் சுமார் 60 முட்டைகளை ஃபிரேயா இட்டு வருகிறது. உப்புநீர் முதலையான ஓடின், சதுப்புநிலக் காடுகளான சுந்தரவனக் காடுகளிலிருந்து பெறப்பட்டது. இதற்கு தற்போது சுமார் 60 வயதாகிறது. முதலைப் பண்ணையிலுள்ள அனைத்து உப்புநீர் முதலைகளுக்கும் ஓடினே தந்தையாகும். ஓடின் மற்றும் ஃபிரேயா இருக்கும் செயற்கை வாழ்விடப் பகுதியானது (Enclosure) பகுதியானது, அதன் இயற்கை வாழ்விடத்தை ஒத்தவாறு, அகன்ற நீர்த்தொட்டியையும் அதை ஒட்டி அடர்ந்த தாழைச்செடிகளுடைய புதர்போன்ற பகுதியையும் கொண்டிருக்கும்.
முதலைகள், ஆமைகள், பாம்புகள் மற்றும் பல்லிகள் உட்பட அனைத்து ஊர்வனவகைகளும் குளிர்இரத்தப் பிராணிகளாகும். இவை, தம் சுற்றுப்புறத்தின் வெப்பநிலைக்கேற்றவாறு, தன் உடலின் வெப்பநிலையை மாற்றிக்கொள்ளக் கூடியவை.
முட்டையிடும் காலங்களில் பெண் உப்புநீர் முதலைகள் மணலை திரட்டி, குவியலாக அமைத்து அதனுள் முட்டையிடும். பின்னர், அதன் மீது ஏறி அமர்ந்து அதன் முட்டைகளை பாதுகாக்கும். வெள்ளப்பெருக்கு காலங்களின்போது, முட்டைகளை பாதுகாக்க இவ்வகையான கூடுகட்டும் முறை உதவுகிறது.
பெண் உப்புநீர் முதலைகள் தன் கூட்டை கட்டுவதற்கு, தமது முன்னங்கால் மற்றும் பின்னங்கால்களைப் பயன்படுத்தி, மண் மற்றும் உலர்ந்த இலைதழைகளை சிறுகுவியலாகச் சேர்க்கும். சில நாட்களுக்குப் பிறகு, இவை முட்டையிடத் தயாரானதும், குவியலின்மீது ஏறி ஒரு சிறிய பள்ளத்தைத்தோண்டி அதனுள் தன் முட்டைகளை இடும்.
முதலைகள் அதன் தாடைகளின் மூலம் கூட்டின் வெப்பநிலையை சரிபார்ப்பதாகவும், வெப்பநிலையை சீராக வைப்பதற்கு, தங்கள் வாயில் தண்ணீரைக் கொண்டு சென்று கூட்டின்மீது தெளிப்பதாகவும் சில உயிரியிலாளர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் இதற்கு உறுதியான சான்றுகள் இல்லை.
முதலைகள் பொதுவாக இரண்டு வகையான கூடுகளை அமைக்கின்றன. உப்புநீர் முதலைகள், மார்லெட் மற்றும் நியூ கினியா முதலைகள் போன்றவை Mound nests எனப்படும் மணல்மேடுகளில் கூடு கட்டும் வகையைச் சேர்ந்தவை. மற்ற 23 வகை முதலையி னங்களில் பெரும்பாலானவை, ஆற்றங்கரை அல்லது மணற்பாங்கான இடங்களில், ஆழமான பள்ளங்களைத் (Hole nests) தோண்டி அதனுள் முட்டையிடுகின்றன.
மணல்மேடுகளில் கட்டப்படும் கூடுகளை எளிதில் காண இயலும் என்பதால், படகுகள், ஹெலிகாப்டர் அல்லது டிரோன்கள் மூலம் அவற்றின் எண்ணிக்கையை கணக்கிட முடியும்.
முட்டையிடும் காலங்களில், உப்புநீர் முதலைகள் சதுப்புநில முதலைகளைவிட (Mugger crocodiles) ஆக்ரோஷமாக காணப்படும். இவை, கடலில் சுமார் 300 கி.மீ வரை நீண்ட தூரம் பயணிக்கக்கூடியவை. மேலும், அதிகளவு உடல்பருமனைக் கொண்டிருந்தாலும் வேகமாக நகரக்கூடியவையாகும்.
வனப்பகுதிகளில், பறவைகள், நரிகள், கீரிகள் மற்றும் உடும்புகள் போன்ற பல்வேறு விலங்குகளுக்கு முதலை முட்டைகள் இரையாகின்றன. குட்டிகள் பொரிப்பதற்கு தயாரானவுடன், அவை “நியுக்! நியுக்!” என ஒலி எழுப்பி முட்டையிலிருந்து வெளியே வர முயற்சிக்கும். பின்னர், மூக்கின் மீது தற்காலிகமாக வளர்ந்திருக்கும் Eggtooth எனப்படும் முட்டைப்பற்கள் மூலமாக ஓட்டைக் கிழித்து குட்டிகள் வெளியேறும்.
சதுப்பு நில முதலைகள் (Mugger crocodiles) முட்டைகளை ஒவ்வொன்றாகத் தன் வாயில் எடுத்து, பொரிப்பதற்கு ஏதுவாக, மெதுவாக உருட்டுகின்றன. முதலைக்குட்டி வெளியே வந்தவுடன் அவற்றை மிக கவனமாக, அருகிலுள்ள நீர்நிலைக்கு எடுத்துச்சென்று அவற்றை பாதுகாக்கும். சில சமயங்களில் ஆண்முதலைகளும் இச்செயல்களில் ஈடுபடுகின்றன. அளவில் மிகச்சிறியதாக இருப்பதால், பறவைகள் மற்றும் கீரிகளுக்கு இரையாகாமல் இருக்க, பொரித்த பின்னரும் குட்டிகள் பெற்றோரின் அருகிலேயே இருக்கும்.
ஓடின் மற்றும் ஃபிரேயா பிறக்கும்போது சுமார் 18 செ.மீ நீளம் இருந்தன. ஆனால், தற்போது 4 மீட்டருக்கு மேல் நீளமும், சுமார் 300 கிலோ எடையும் கொண்டிருக்கின்றன. ஊர்வனவற்றிலேயே மிகப்பெரிய உயிரினமான உப்புநீர் முதலைகள், சுமார் 7 மீட்டருக்கும் மேல் வளரக் கூடியவை; ஒரு டன்னுக்கு மேல் எடையுடையவை. சதுப்புநில முதலைகளைப் போலன்றி, இவை குறுகிய தாடைகளை கொண்டிருக்கும். அவற்றிற்கு இருக்கும் பின்கழுத்து பிடரிச்செதில்கள் (Nuchal scales) உப்புநீர் முதலைகளுக்கு இல்லை. இச்செதில்கள் தலை மற்றும் கழுத்தை இணைக்கும் இடத்தில் உள்ளதால், அப்பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கின்றன.
உப்புநீர் முதலைகளுக்கு உப்புத்தன்மையை தாங்கும் திறன் இருப்பினும், அவற்றின் வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் நன்னீர் தேவைப்படுகிறது. குட்டிகள் உப்புத்தன்மையை தாங்கும் திறனுடன் பிறப்பதில்லை, இருப்பினும், அவை வளர வளர இத்திறன் அதிகரிக்கிறது. மேலும், உடலின் அதிகப்படியான உப்பை வெளியேற்றுவதற்கு இதன் நாக்கில் Salt glands எனப்படும் சிறப்புச் சுரப்பிகள் உள்ளன.
ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் ஒவ்வொரு வருடமும், உப்புநீர் முதலைகளின் தாக்குதலுக்கு மனிதர்கள் ஆளாகின்றனர். முதலைகள் வாழும் நீர்நிலைப் பகுதிகளில் குளிப்பதும் , நீந்துவதும் மற்றும் துணி துவைப்பதுமான செயல்களில் ஈடுபடுவதே, இதற்கு முக்கிய காரணமாகும்.
இப்போது சொல்லுங்கள், முதலைகள் உண்மையிலேயே சுவாரஸ்யமான விலங்குகள் அல்லவா? நீங்கள் அடுத்தமுறை முதலைப் பண்ணைக்கு வருகைதரும் போது, ஓடின் மற்றும் ஃபிரேயாவின் Enclosure முன் நிற்கும்போது, இந்த சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி யோசித்துப் பாருங்கள்.
ஒருவேளை அவை ஒன்றாக சூரிய ஒளியில் வெயில் காய்ந்துகொண்டிருக்கலாம் அல்லது சச்சரவுக்கு பின்னர் கோபித்துக் கொண்ட காதல் தம்பதிகள் போல் எதிர் எதிர் திசைகளில் படுத்துக்கொண்டிருக்கலாம். ஏனென்றால் புகழ்பெற்ற கிரேக்க கதாபாத்திரங்களான, காதலும் வெறுப்பும் கலந்த உறவைக் கொண்டிருந்த ஃபிரேயா மற்றும் ஓடின் ஆகியோரின் பெயரால்தானே இவை அழைக்கப்படுகின்றன.