முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 40க்கு 40 வெற்றி ரகசியம்!

M.K.Stalin
M.K.Stalin

டைபெற்று முடிந்துள்ள 18வது நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுள்ள வெற்றி தனித்தன்மையானது. இது, தமிழக முதல்வர் இதற்கு முன்பு பெற்ற வெற்றிகள் எல்லாவற்றையும் விட பெருமைக்குரிய மகத்தான வெற்றியாகும்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே தேசிய அளவில் உள்ள எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைத்து, ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கி பாஜகவுக்கு எதிராகக் கட்டமைத்து, இன்று தேசிய அளவில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றியை பெறுவதற்கு அடித்தளமாக விளங்கியவர் மு.க.ஸ்டாலின். அதுமட்டுமின்றி, கூட்டணிக் கட்சிகள் கட்டுப்கோப்பாக இணைந்து செயல்படுவதற்கும் ஊக்கம் தந்து உறுதுணையாக விளங்கியவர் மு.க.ஸ்டாலின்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஒவ்வொரு முறையும், ‘இந்தியாவைக் காப்போம்’, ‘உரிமைகளை மீட்கும் ஸ்டாலினின் குரல்’ எனும் தலைப்புகளில் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்து, அவற்றை பொதுமக்களிடையே பேசுபொருளாக மாற்றி இந்தியா கூட்டணி வெற்றி பெற வழிவகுத்தார். தமிழ்நாட்டில் உள்ள கூட்டணிக் கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, தமிழ்நாடு+புதுவை மாநிலங்களில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஏறத்தாழ 50 சதவிகித தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கெல்லாம் மிகவும் பெருந்தன்மையுடன் பகிர்ந்தளித்தார். அவற்றுள்ளும் எளிதாக வெற்றிபெறக்கூடிய தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கினார். மிகவும் கடுமையாக முயன்றால்தான் வெற்றி பெற முடியும் என்றிருந்த தொகுதிகளை எல்லாம் திமுகவை போட்டியிடச் செய்தார்.

2004ம் ஆண்டிற்குப் பிறகு புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு அனைத்துத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து புதிய சாதனை படைத்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன்பு தேதிவாரியாக எந்தெந்த நாட்களில் எந்தெந்தத் தொகுதிகளில் பிரச்சாரம் செய்வது என முடிவு செய்து அறிவித்தார். அதேபோல் சிறிதும் ஓய்வு இல்லாமல் தேர்தல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கித் தொய்வின்றித் தொடர்ந்தார்.

திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற 2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தல், 21 தொகுதிகள் சட்டமன்ற இடைத்தேர்தல்கள், ஊரக உள்ளாட்சி தேர்தல்கள், 2021 சட்டமன்ற பொதுத் தேர்தல், 2022ல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், 2024 நாடாளுமன்றத் பொதுத் தேர்தல் ஆகிய 8 தேர்தல்களில் தொடர்ச்சியாக மாபெரும் வெற்றிகளை ஈட்டி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
நார்ஸிச மனப்பான்மை கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள 9 வேறுபாடுகள்!
M.K.Stalin

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் திமுக அரசு நிறைவேற்றிய கட்டணமில்லா பேருந்து திட்டம், 1 கோடியே 15 லட்சம் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மகளிர்க்கும் மாணவர்களுக்கும், மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம், படித்த இளைஞர்களுக்கு பல்வேறு தொழில் திறன் பயிற்சிகள் அளித்து வேலை வாய்ப்புகள் பெற வழிவகுத்திடும், நான் முதல்வன் திட்டம், மக்களைத்தேடி அதிகாரிகள் சென்று அவர்களின் குறைகளைக் குறிப்பிட்ட நாட்களில் தீர்த்து வைக்கும் மக்களுடன் முதல்வர் திட்டம், பசியோடு பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் சத்தான காலை உணவுத் திட்டம்; மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம் / நீரிழிவு நோய்க்கான மருந்துகளைக் களப்பணியாளர்கள் இல்லங்களுக்கே சென்று வழங்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் முதலான சிறப்பான திட்டங்களை எல்லாம் மக்களிடம் துல்லியமாக எடுத்துரைத்ததோடு செயல்படுத்தியும் வைத்தார்.

ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு நாளும் வேட்பாளர்களையும் தொண்டர்களையும், தொடர்பு கொண்டு தொகுதி நிலவரங்களைக் கேட்டறிந்து தொய்வின்றி ஊக்கமுடன் தேர்தல் பணிகளை ஆற்றிட அறிவுரைகள் வழங்கி உற்சாகப்படுத்தினார்.

இதுபோன்று முதலமைச்சரின் தீவிர பணிகளின் வாயிலாக நடைபெற்று முடிந்துள்ள மக்களவை தேர்தலில், ‘நாற்பதும் நமதே’ என்று கூறிய முழக்கம் மெய்பட்டு; 40க்கு 40 என்ற வெற்றி இலக்கை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கண்டு புதிய வரலாற்றுச் சாதனையை கண்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com