மோடி பிரதமர் ஆவார் என 2008லேயே சொன்ன சோ!

அத்தியாயம் - 47
மோடி பிரதமர் ஆவார் என 2008லேயே சொன்ன சோ!

 “தமிழ் நாட்டில் எத்தனை அறிவாளிகள் இருக்கிறார்கள் என்று ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, “ சோ சாருடைய துக்ளக் வாசகர்கள் எத்தனை பேரோ அத்தனை அறிவாளிகள்!” என்று பதிலும் சொன்னார் எங்கள் தமிழ்ப் பேராசிரியர் புரொபசர் ராமு.

1980ஆம்  வருடம் லயோலா கல்லூரியில் தமிழ் மன்றத்தின் துவக்க விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர்கள் கல்கி ஆசிரியர்  ராஜேந்திரனும், துக்ளக் ஆசிரியர் சோவும். எங்கள் பேராசிரியர் தன் வரவேற்புரையில்தான் சோவைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டார்.

அரங்கத்தில் ஒரே கைத்தட்டல்தான். அன்று ஒரு கல்லூரி மாணவனாக  அங்கே அமர்ந்திருந்த எனக்கு பிற்காலத்தில் அதே கல்கி ராஜேந்திரன் அவர்களால் நான் ஒரு பத்திரிகையாளனாக உருவாக்கப்படுவேன் என்றோ, அதே சோ சாரை நான் பேட்டி காண்பேன் என்றோ நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

சோவுக்கு  கல்கி மீது எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு. அவர் கல்கியில் நிறைய எழுதி இருக்கிறார். கல்கிக்கு பேட்டி என்றால், தட்டிக் கழித்ததில்லை. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவரை சந்திக்க நேரம் கேட்டு காலையில் துக்ளக் அலுவலகத்துக்கு டெலிபோன் செய்தால் பெரும்பலும் அவரேதான் டெலிபோனை எடுப்பார். விஷயத்தைச் சொன்னதும், “நேரே எல்லாம் வரவேணாம்! இப்பவே சொல்லிவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு, மடமடவென்று கேட்கும் விஷயம் குறித்து தன்னுடைய கருத்துக்களைச் சொல்லிவிடுவார். 

மனுஷர் காலையில் நாலரை மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார்.  எழுந்த உடனே காப்பி.  அதுவும் டிகாஷன் அதிகமாக, பால் குறைவாக படு ஸ்டிராங்கான காப்பி.  சில சமயங்களில் மறுபடியும் தூக்கம் வருமானால், படுத்துத் தூங்கிவிட்டு  ஆறுமணிக்கு மீண்டும் எழுந்திருப்பார்.  தூக்கம் வரவில்லையெனில் படிப்பார்; அல்லது துக்ளக்குக்கு எழுதுவார். இது கூட  அவரே ஒருமுறை கல்கி பேட்டியில் சொன்னதுதான்.

சோ  ரொம்ப வித்தியாசமானவர். அவர் டி.டி.கே. கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், சட்ட ஆலோசனைகளுக்கு நடுவே, நேரம் கிடைக்கிறபோது நாடகம் எழுதுவார்; நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது, இடையில் சட்ட ஆலோசனை தொடர்பான விஷயங்களையும் பார்ப்பதுண்டு. படப்பிடிப்புக்கு இடையில் துக்ளக்குக்கு  எழுதுவார். “இப்படி வேலை பார்த்ததால் என்னால் எதிலும் சிகரங்களைத் தொடமுடியாமல் போயிருக்கலாம்” என்று வெளிப்படையாகவே அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார் அதே பேட்டியில்.

1955ல் ஆரம்பிக்கப்பட்டது “விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்” என்ற நாடகக் குழு. அந்தக் குழுவில் இருந்த நடிகர்கள் ஏறத்தாழ எல்லோருமே விவேகானந்தா கல்லூரியில் படித்தவர்கள் என்பதால் நாடகக் குழுவுக்கு இந்தப் பெயர். சுமார் 35 வருடங்களில் 29 நாடகங்களை நாலாயிரத்துக்கும் அதிக தடவைகள் மேடை ஏற்றிய சோவின் விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் குழு 1990ல் நாடக மேடைக்கு குட் பை சொன்னது. என்ன காரணம்?  “குழுவில் எல்லோருக்கும் வயதாகிவிட்டது. ஆரம்பித்தபோது குழு உறுப்பினர்களின் சராசரி வயது 20  இப்போது 56. எல்லோருக்கும் இப்போது வாழ்க்கையில் வெவ்வேறுவிதமான கமிட்மென்ட்ஸ். எனவேதான் குட் பை முடிவு.

அந்த சமயத்தில் சோவை சந்தித்தபோது, ஜாலியாக அவரது மேடை உலக அனுபவங்கள் பலவற்றைப் பகிர்ந்துகொண்டார். அந்த பேட்டியில் அவர் சொன்ன சில சுவையான விஷயங்கள் சிலவற்றை நினைவு கூற விரும்புகிறேன்.

“ஈஸ் காட் டெட்?” என்று டைம் பத்திரிகையில் ஒரு கவர் ஸ்டோரி வெளியானது. அந்தத் தலைப்பு சோவுக்கு மிகவும் பிடித்துப் போக, அதே தலைப்பில் இவர் ஒரு நாடகம் எழுதிவிட்டார். சோவின் நாடகங்கள் பலவற்றுக்கு ஆங்கிலத் தலைப்புகள்தான்,. உதாரணம்: ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு, டோன்’ட் டெல் எனிபடி, மைண்ட் ஈஸ் எ மங்கி, ஒய் நாட்?,  ஒரு நாடகத்துக்கு அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர் சோ தன் நாடகங்களுக்கு இப்படி ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பது தவறு என்று பேசிவிட்டார். உடனே சோ, “ எனது அடுத்த நாடகத்துக்கு ஆங்கிலத் தலைப்பு வைக்கப்போவது இல்லை.  ஒரு லத்தீன் தலைப்பு இப்போதே ரெடி!” என்று சொல்லி, சோ அறிவித்த தலைப்புதான் “கோவாடிஸ்” (எங்கே போகிறாய்?” என்று பொருள்)

கோவாடிஸ்தான் சோவின் முதல் அரசியல் நையாண்டி நாடகம். இந்த நாடகத்தின் அரங்கேற்ற நாள் வரை நாடகத்துக்கு போலிஸ் அனுமதி கிடைக்கவில்லை. கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அரங்கத்தில் சீன் மற்றும் மைக் செட் நிர்மாணித்தாகிவிட்டது; நடிகர்கள் மேக்-அப் போட்டுக்கொள்ள துவங்கிவிட்டனர். பர்மிஷன் வந்தபாடில்லை. சோ மைக் பிடித்து பிரச்னையை ஆடியன்சுக்கு சொல்லிவிட்டார். அதன் பிறகு ஒரு வழியாக ஏழேகால் மணிக்கு பர்மிஷன் கிடைத்தது. அப்புறம்  நாடகம் துவங்கியது.

ஒரு ஊரில் சம்பவாமி யுகே யுகே நாடகம். நாடகத்தில் புருஷோத்தமன் என்ற லஞ்ச ஊழல் பேர்வழியான அரசு அதிகாரி பற்றிய வசனத்தில், “வனஜா விஹார் என்பதற்கு பதிலாக அவன் தன் வீட்டுக்கு லஞ்சா விஹார்னு பேர் வெச்சிருக்கலாம்” என்று வரும்.  இந்த வசனத்துக்கு ஒரே கைத்தட்டல். ஆரவாரம் அடங்க வெகு நேரமானது. அப்புறம்தான் விஷயம் தெரிந்தது.  அந்த ஊரில் புருஷோத்தமன் என்று ஒரு லஞ்சம் வாங்கும் அதிகாரி இருப்பதும், அவன் வீட்டுக்கு வனஜா விஹார் என்று பெயர் என்பதும். ஆனால், இது எதேச்சையாக நிகழ்ந்தது.

நாடகத்தைப் பொறுத்தவரை சோவுக்கு சில சென்டிமென்ட்ஸ் உண்டு. மைலாப்பூரில் ஒரு குறிப்பிட்ட கடையில்தான் நாடகம் எழுதுவதற்கு நோட்டுப் புத்தகம் வாங்குவார்; அதை கபாலீசுவரர் கோயிலில் கொண்டு போய் வைத்து வணங்கிவிட்டு எழுதத் துவங்குவார்.  எழுதி முடித்தவுடன் மறுபடி கபாலீசுவரர் கோயிலில் வைத்து நமஸ்காரம்.  அதன் பின்தான் ரிகர்சல்  ஆரம்பமாகும். முன்பு மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ். அதன் பிறகு கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில்தான் நாடக அரங்கேற்றம்.

சோ குழுவினர் நாடகம் போடுவதை நிறுத்திக் கொண்டாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு, டிவி வரதராஜன், சோவிடம் அனுமதி பெற்று அவரது “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?” நாடகத்தை மேடை ஏற்றினார்.  அதன் பிறகு சோவையே ஒரு கதாபாத்திரமாக்கி துக்ளக் சத்யா எழுதிய “துக்ளக் தர்பார்” என்ற நாடகத்தையும் மேடை ஏற்றினார்.

சோ, ராஜ்யசபை எம்.பி.ஆக நியமிக்கப்பட்ட சில காலம் கழித்து, அவரை பேட்டி கண்டபோது “துக்ளக்கில் நிறைய விஷயங்களை நானே எழுதுவதால், பத்திரிகை வேலைகளையும்  கவனித்துக் கொண்டு, பாராளுமன்றத்துக்கும் போய் வருவது கஷ்டமாக இருக்கிறது.  பாராளுமன்றம் நடக்கிற போது கூட பத்திரிகை வேலைகளுக்காக வாராவாரம் சென்னை வரவேண்டி உள்ளது.” என்று கூறினார்.

அவரை பா.ஜ.க. அரசுதான் ராஜ்ய சபைக்கு எம்.பி.ஆக நியமித்தது என்றபோதிலும் அவர் பா.ஜ.கவை கிண்டலடிக்கத் தவறவில்லை.

அந்தப் பேட்டியில் ஒரு கேள்வி:

“வாஜ்பாய் அரசுக்கு தலைவலிகள் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில் ஐந்து வருடங்கள் ஆட்சி நீடிக்குமா?”

இதற்கு சோ அவர்களின் பதில் : “எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் இவர்கள்தான் பணிந்து போவதற்குத் தயாராக இருக்கிறார்களே!

எமர்ஜென்ஸி பற்றி அத்வானி ஒரு முறை “பத்திரிகையாளர்களுக்குத் துணிச்சல் இல்லை; இந்திரா காந்தி குனியச் சொன்னால், பத்திரிகையாளர்கள் தவழ்கின்றனர்” என்றார். அதேபோலத்தான் இன்று கூட்டணிக் கட்சிகள் குனியச் சொன்னால், பா.ஜ.க. தரையில் விழுந்து தவழ ஆரம்பித்துவிடுகிறது” என்று பதில் கூறினார்.

சிவாஜி கணேசனுக்கு தாதா சாஹிப் பால்கே விருது வழங்கப்பட்ட சமயத்தில் அவரை சந்தித்துப் பேசுவதற்காக போக் ரோடு சிவாஜின் வீட்டுக்குப் போயிருந்தேன். நான் போன சமயம் சிவாஜி ரொம்ப ஜாலி மூடில் இருந்தார். அவரை பார்க்க வந்திருந்த ரஜினியின் பெண்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா இருவரிடமும், “ என்ன இவ்ளோ ஒல்லியா இருகீங்க? உங்க அப்பன் உங்களுக்கு சாப்பாடே போடுறதில்லையா?” என்று கேட்டு கிண்டல் செய்தார். சிவாஜிக்கு  வாழ்த்துக்கள் சொன்னதும், “ இதோ இருக்கானே குரங்குப் பய!  இவன் சொல்லித்தான் எனக்கு இந்த அவார்டு கொடுத்திருக்காங்க! இல்லாட்டி என்னப் பத்தி வடக்க இருக்கறவங்களுக்கு ஞாபகம் இருக்குமா என்ன?” என்று தனது நன்றி கலந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, பக்கத்தில் நின்று கொண்டிருந்தவரை சுட்டிக் காட்டினார்  சிம்மக்குரலோன். அவர் வேறு யாருமில்லை! “சோ”தான்!

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு துக்ளக் ஆண்டு விழாவுக்குப் போய்விட்டு வந்து, கேள்வி பதில் நிகழ்ச்சியின்போது கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு சோவின் பதிலை சிறு கட்டுரையாக எழுதினேன்.

கேள்வி: “சோவுக்குப் பிறகு துக்ளக்கை நடத்தப்போகும் வாரிசு யார்?”

இதற்கு சோவின் பதில்: “ எனக்குப் பின், என் மகன் துக்ளக்கை நடத்துவான் என்கிற நம்பிக்கை எனக்கு சுத்தமாக இல்லை. காரணம், இப்போதே நான் 'துக்ளக்' நடத்திக் கொண்டிருப்பதை பயித்தியக்காரத்தனம் என்று சொல்கிறவன் அவன். இன்று கூட மீட்டிங்கிற்குப் புறப்படுகிறபோது எல்.டி.டி.ஈ. பற்றிப் பேசாதே, அதைப் பற்றிப் பேசாதே, இதைப் பற்றிப் பேசாதே என்று ஏகப்பட்ட புத்திமதிகள்! இவனா எனக்குப் பின் பத்திரிகையை நடத்தப் போகிறான்? என் மகன் வராது போனாலும், எனக்குப்பின், துக்ளக், இதே பாணியில் தொடர்ந்து வரவேண்டும் என்பதே என் விருப்பம். அதற்கான ஏற்பாடுகளை நான் செய்து கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.

சோவின் விருப்பத்தை  திரு.குருமூத்தி அமோகமாக நிறைவேறிவருவது இப்போது துக்ளக்கை பார்க்கும்போது தெரிகிறது.

2008ல், நரேந்திர மோடி  குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, கல்கி சார்பில்  சக நிருபர் ப்ரியனும், நானும் குஜராத்துக்கே நேரில் சென்று, சுற்றுப் பயணம் செய்து, “குஜராத் டுடே” என தலைப்பில் தொடர்ந்து பல கட்டுரைகள், பேட்டிகள் எழுதினோம். அப்போது, மோடி பற்றி சோவையும் பேட்டி கண்டேன். அதன் சில பகுதிகள் இங்கே:

கல்கி : "பா.ஜ.க. வைச் சேர்ந்த பல்வேறு முதலமைச்சர்களிலும் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தனிச்சிறப்பு பெற்று விளங்கக் காரணம் என்ன?"

சோ :  ஏதோ மற்ற கட்சிகளிலெல்லாம் சிறந்த முதலமைச்சர்கள் ஏராளமானவர்கள் இருப்பதுபோலவும், பா.ஜ.க.வில் மோடி ஒருவர் மட்டும்தான் சிறந்தவர் போலவும் ஒரு எண்ணத்தை ஏற்படுத்தும்  உங்கள் கேள்வியே தவறு, கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் மிகச் சிறந்த, வெற்றிகரமான முதலமைச்சர் நரேந்திர மோடிதான்.  இது காங்கிரஸ், பி.ஜே.பி. கம்யூனிஸ்ட்  என்று எல்லா கட்சிகளின் ஆட்சிக்கும் பொருந்தும்.

கல்கி : 2002ஆம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரத்துக்கு மோடிதான் காரணம் என்று இன்னமும் குற்றம் சாட்டப்படுகிறது. குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?"

சோ : கோத்ராவில் ஏதோ கர சேவகர்கள் தாங்களே தீ வைத்துக் கொண்டது போல, பத்திரிகைகளும், டீ.வி. சேனல்களும்  புரளி கிளப்பி, அவதூறு பிரசாரம் செய்ததனால், மக்கள் கோபப்பட்டு கலவரத்தில் இறங்கினார்கள். மீடியாவின் பிரசாரமும் தவறு; மக்கள் கலவரத்தில் இறங்கியதும் தவறு. கலவரத்தை அடக்க மோடி உடனடி நடவடிக்கை எடுத்தார்.  போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் இந்துக்கள்தான். பொதுவாக எந்த முதலமைச்சரும் தங்கள் மாநிலத்தின் கலவரத்தை அடக்க உடனடியாக ராணுவத்தை அழைக்க முன்வரமாட்டார்கள். ஆனால், கலவரம் தொடங்கியதுமே, தாமதிக்காமல் உடனடியாக ராணுவத்தை வரவழைத்தார். எனவே, கலவரத்துக்கு காரணம் மோடி என்ற குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.  அவர் கலவரத்தைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுத்தார் என்பதுதான் சரி.

கல்கி : அகில இந்திய அரசியலில், எதிர்காலத்தில் மோடியின் பங்கு எப்படி இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

சோ : அவர் இன்னமும் குஜராத்தில் செய்ய வேண்டிய பணிகள் இருக்கின்றன. அதன் பிறகு, நிச்சயம் தேசிய அரசியலில் அவர் முக்கியத்துவம் பெறுவார். உடனடியாக இல்லாதுபோனாலும், எதிர் காலத்தில் இந்தியப் பிரதமராவது நிச்சயம்.

மீண்டும் நினைவூட்டுகிறேன்... சோ இப்படிச் சொன்னது 2008ல்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com