Christmas Island red crabs
Christmas Island red crabs

நண்டுகளுக்கு ஒரு மேம்பாலம்! செந்நிற நண்டுகளின் வாழ்க்கையின் மர்மம்!

Published on
Kalki Strip
Kalki Strip

அப்போதுதான் பேய் மழை பெய்து ஓய்ந்திருந்தது!

அடர்ந்த காடு. கதிரவன் வெளியே வரட்டுமா வேண்டாமா என தயங்கும் அதிகாலை வேளை.

ஏதோ 'சர, சர' என்ற சப்தம் அந்தக் காட்டின் நிசப்தத்தை மெதுவாய் கலைத்தது.

ஒரு செந்நிற கம்பளம் மெதுவாய் அக்காட்டில் இருந்து பரந்து விரிந்து கடற்கரையை நோக்கி நகரத் தொடங்கிற்று. இது என்ன மாயம்?

அருகில் சென்றுதான் பார்ப்போமே.

அட, அந்த செந்நிறத்தை தந்தது மையும் அல்ல.... மந்திரமும் அல்ல.

அவைதான் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு செந்நிற நண்டுகள் (Christmas Island red crabs). 43.7 மில்லியன் நண்டுகள் இத்தீவு வாசிகள்!ஆஸ்திரேலியாவின் சனத்தொகையை விட (25.9 மி) ஏறத்தாள இரண்டு மடங்கு என்று வைத்துக்கொள்ளுங்களேன்! இவை இத்தீவிற்கு தனித்துவமானவை.

இவை ஜிகார்கோய்டியா (Gecarcodea) எனும் நிலநண்டு பேரினங்களுள் அடங்கும் உயிரினங்கள். இவை ஆஸ்திரேலியாவின் கோகோஸ் தீவுகளிலும் வாழ்ந்தாலும் கிறிஸ்மஸ் தீவுதான் இவைகளின் ஹெட் ஆபீஸ்!

அது சரி, இந்த கிறிஸ்மஸ் தீவு எங்குதான் இருக்கிறதாம்?

பூமிசாத்திர வகுப்பினுள் நுழைவோமா?

இத்தீவு ஆஸ்திரேலியாவை சேர்ந்ததானாலும் புவியில் ரீதியாக அமைந்திருப்பது என்னவோ ஜாவா - சுமத்திரா தீவுகளில் இருந்து 320 கி.மீ தொலைவிலும் சிங்கப்பூரில் இருந்து 1327 கி.மீ தொலைவிலும் ஆகும்.

மாமியாருடன் கோபித்துக் கொண்ட மருமகள் போல் ஆஸ்திரேலிய கண்டத்திலிருந்து தள்ளி நிற்கும் இத்தீவு, 135 சதுர கி.மீ பரப்பளவையே கொண்டது. சனத்தொகை ஏறக்குறைய 2500. இவர்களில் 21% சீனர்களும் மற்றும் மலாய சக இந்தியர்களே இம்மண்ணின் மைந்தர்கள். 1643ல் கிறிஸ்மஸ் தினத்தன்று பெயர் சூட்டப்பட்டதால் இப்பெயரே ஒட்டிக் கொண்டது.

1887ல் இங்கு தூய பாஸ்பேட் உப்பு (phosphate of lime) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விடுவார்களா வெள்ளையர்கள்? 1888 இலேயே பிரித்தானிய முடியாட்சியுடன் இத்தீவு இணைக்கப்பட்டது. மலேசியா - சிங்கப்பூரில் இருந்து தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டு 1899ல் பாஸ்பேற் சுரங்க வேலைகள் தொடங்கப்பட்டன. இத்தாதுப்பொருள் பசளை மற்றும் வெடிமருந்து உற்பத்திக்கான மூலப்பொருள் என்பதால் இரண்டாம் உலகப்போரின் போது 1942ல் இத்தீவு ஜப்பானியர் வசமானது. மூன்று வருடங்களின் பின் மீண்டும் பிரித்தானியர் இங்கு கொடியேற்றினர்.

1958ல் ஆஸ்திரேலியாவுடன் பிரித்தானியா செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தின் கீழ் சிங்கப்பூருக்கு $20 மில்லியன் நஷ்ட ஈட்டை வழங்கி அஸ்திரேலியா கிறிஸ்மஸ் தீவை தனதாக்கிக்கொண்டது.

1990களில் இந்தோனேசியாவில் இருந்து அனேகம் அகதிகள் கிறிஸ்மஸ் தீவை வந்தடைய ஆரம்பித்தனர். 1,404 கி.மீ கடல் பயணத்தில் இங்கு வந்துவிடலாம் என்பதால் இது ஒரு பிரபலமான பாதையானது. கிறிஸ்மஸ் தீவை எட்டும் வேட்கையில் ஆழ்கடலுக்கு இரையானேர் அனேகம். இது ஒரு சோகச் சரித்திரமே.

அகதிகளுக்கான ஒரு முகாமும் இங்கு அமைக்கப்பட்டு அது 2007ல் நிரந்தரமாக மூடப்பட்டது. குடிவரவு காரணத்திற்காக மட்டும் கிறிஸ்மஸ் தீவு ஆஸ்திரேலியாவின் ஒரு பிரதேசம் அல்ல என்று வேறு அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. அண்மைக்காலங்களாக ஆஸ்திரேலிய அரசின் கடுமையான எல்லைக்கட்டுப்பாட்டு போக்கால் கடல் மார்க்க அகதிகள் வருகை முற்றாக முடிவிற்கு வந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஆசியாவின் நம்பர் 1 பணக்கார கிராமம்! எங்கே தெரியுமா?
Christmas Island red crabs

கிறிஸ்மஸ் தீவிற்கு ஆஸ்திரேலிய நகரங்களில் இருந்து விமானத்தில் போய் வர ஆஸ்திரேலிய டாலர் $ 1,650 வரை செலவாகும் என்பது ஒரு குறுஞ்செய்தி!

அட, செந்நிற நண்டுகளைப் (Christmas Island red crabs) பற்றி மறந்தே விட்டோமே?

கிறிஸ்மஸ் தீவின் மத்தியில் உள்ள காடுகளே இவைகளின் சாம்ராஜ்ஜியம். அங்குள்ள காய்ந்த சருகுகள், சிறு பூச்சி இனங்கள், பழங்கள், விதைகள், நத்தைகள் மற்றும் இறந்த எலி போன்ற சிறு பிராணிகள் ஆகியவையே இவர்களின் 'மெயின் மெனு'.

அது சரிதான், நமது மெனுவில் இந்த நண்டுகளை சேர்த்தால் என்ன எனும் உங்கள் ஆசையில் மண்ணைப் போடும் செய்தியும் உண்டு!

Christmas Island red crabs
Christmas Island red crabs

இவற்றின் சதை 96% நீரை கொண்டுள்ளதாலும் விரும்பத்தகாத வெடுக்கு மணத்தை கொடுப்பதாலும் மனிதர்கள் இவற்றை உண்பதில்லை. 'பார்த்தால் பசி தீரும்' டைப் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!

இவர்களுக்கு தென்னை நண்டு (coconut crab), மஞ்சள் எறும்பு ஆகியவற்றை விட வேறு எதிரிகள் இல்லாததாலேயே தனிக்காட்டு ராஜாக்களாக பல்கிப்பெருகுகின்றனர்.

இவை வாழ்வதற்கு ஈரளிப்புத்தன்மை அவசியம். இதனாலோயே காட்டு மர நிழலில் சிறு குழிகளைத் தோண்டி அதனுள் ஒரு ஆனந்த சயன நிலையில் வாழ்க்கையை கழிக்கின்றன.

20 முதல் 30 ஆண்டுகள் வரை வாழும் இந்நண்டுகள் வருடத்திற்கொரு முறை சட்டையை மாற்றுவது போல் தம் ஓட்டைக் கழற்றி தோற்றத்தை புதுப்பித்துக் கொள்கின்றன.

இதையும் படியுங்கள்:
திடீரென நகரும் செம்மண் பாலைவனம்! 12,000 ஏக்கரில் ஒரு அதிசயம்! தேரிக்காட்டின் மர்மம்!
Christmas Island red crabs

ஆக்டோபர் நவம்பர் மாத மழை காலம் முடிந்து நிலம் ஈரமாக உள்ள காலங்களிலேயே கடலை நோக்கிய இடப்பெயர்ச்சி தொடங்கும். தமது இனப்பெருக்கத்திற்கான முதல் படி இது.

உருவத்தில் சிறிது பெரிதான ஆண் நண்டுகளே கடற்கரையை நோக்கிய தம் பயணத்தை முதலில் ஆரம்பிக்கும். இந்த நடை பயணத்திற்கான காலத்தை நிர்ணயிப்பது நிலவுதான். வானத்தில் மூன்றாம் பிறை தோன்றியதும் இவர்களின் தேன்நிலவு ஆரம்பமாகும். இந்நாளை நண்டுகள் எவ்வாறு கணித்து உணர்ந்து கொள்கின்றன என்பது விஞ்ஞான அறிவிற்கும் அப்பாற்பட்டதொன்று! இது மட்டுமல்ல. தமக்கு அருகே உள்ள கடற்கரையை நோக்கி நேரே நடக்காமல் கிறிஸ்மஸ் தீவின் வடமேற்கில் உள்ள குறிப்பிட்ட கடற்கரையை நோக்கியே இவை பயணிக்கும்.

இவற்றின் காடுகளில் இருந்து கடலை நோக்கிய பயணங்களில் மனித நடமாட்டமுள்ள சாலைகளையும் வாகனங்களையும் கடந்தே ஆக வேண்டும். இதற்கு வழி செய்யும் வகையில் பல பாதைகள் இந்நாட்களில் மூடப்பட்டிருக்கும். அது மட்டுமா? இவர்கள் கடக்கவென்றே பல இடங்களில் 'நண்டு மேம்பாலங்களை' வேறு அமைத்துள்ளது அரசு.

வீதியை கடக்கும் நண்டுகள் வாகனங்களில் நசுங்கி மரிக்கக்கூடாதே என்பதற்காய் இவைகளை பாதுகாப்பாய் அப்புறப்படுத்த தீவுவாசிகள் கையில் துடைப்பத்துடன் உலாவுவது இந்நாட்களில் சகஜமே. இவற்றின் ஓட்டுகள் தடிப்பானதால் வாகன டயர்களையும் செதப்படுத்தும் அபாயம் உண்டு.

இவை கடலை அடைய ஒரு வாரம் வரை எடுக்கலாம். மதிய வெய்யிலை தவிர்த்து காலையிலும் மாலையிலுமே இவைகளின் நடைபயணம் நடந்தேறும்.

காதலர்கள் கடற்கரையில் உடல் நனைத்து பின் தம் காதலிக்கு கரையில், பாறைகளுக்கு நடுவே, சிறு குழி தோண்டி ஒரு மஞ்சம் அமைப்பதில் பிசியாகி விடுவார்கள். எல்லைச் சண்டைகள் இங்கும் உண்டு.

இதையும் படியுங்கள்:
சுனேய் பூலோ சதுப்பு நிலம் (SUNGEI BULOH WETLAND RESERVE): சிங்கப்பூர் அதிசயம்!
Christmas Island red crabs

அடுத்து வருகைதரும் காதலிகளுடன் சல்லாபித்து கருக்கட்டல் குழிகளில் நடந்தேறும். வந்த வேலை முடிந்ததென்ற திருப்தியில் ஆண் நண்டுகள் மீண்டும் காடுகளுக்கு திரும்பும்.

தாய்மையடைந்த ஒவ்வொரு பெண் நண்டும் ஏறத்தாள 100,000 கரிய நிற முட்டைகளை (சினை) அடி வயிற்றில் சுமந்து இரு வாரங்கள் கடற்கரையிலேயே வாசம் செய்யும்.

அடுத்து வரும் உயர் அலைகள் (high tide) நாட்களில் கடல் அலையில் தம் முட்டைகளை, தம் இரு பெரிய கொடுக்குக் கால்களை உயர்த்தி நடனம் புரிந்து, விடுவிக்கும். அவ்வேளைகளில் முட்டைகளின் செறிவால் கடல் அலைகள் சாம்பல் நிறமாவதுண்டு.

தாய் நண்டுகள் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கிய பெருமையில் மீண்டும் தம் இருப்பிடமான காட்டை நோக்கி நடைபயணத்தை ஆரம்பிக்கும்.

நண்டுச் சினையில் இருந்து 3 - 4 வாரங்களில் செந்நிற நண்டுக்குஞ்சுகள் பொரித்து கடற்கரையே செந்நிறமாக்கும். இந்நாட்களில் கரையை அண்மித்த கடலில் சுறா மீன்களுக்கும் திமிங்கிலங்களுக்கும் ஒரே கொண்டாட்டம்தான்.

கரைதட்டிய குஞ்சுகள் தம் காடு நோக்கிய 9 நாள் பயணத்தை தொடங்கும். இன்னும் நான்கு, ஐந்து வருடங்களில் இக்குஞ்சுகள் வாலிபப் பருவத்தை அடைந்து மீண்டும் வாழ்க்கை வட்டத்தை தொடங்கி வைக்கும்!

இதையும் படியுங்கள்:
நாழிகை வட்டில்: பழங்கால மன்னர்கள் டைம் பார்க்கப் பயன்படுத்திய ரகசியச் சாதனம்!
Christmas Island red crabs

செந்நிற நண்டுகளின் வாழ்க்கை வட்டம் விசித்திரமானது..... மர்மங்கள் நிறைந்தது. அவற்றை கடலை நோக்கி நடக்க உந்தும் சக்தி என்ன? திசை காட்டுவது யார்? பிறந்த குஞ்சுகள் காடு நோக்கி பயணிப்பது எப்படி? எப்போது உயர் அலைகள் வரும் என அறிந்ததெப்படி? செந்நண்டுகள் பற்றிய மிக விரிவான விஞ்ஞான ஆராச்சி கூட இவற்றிற்கு விடை பகரவில்லை!

வாழ்வின் சில மர்மங்கள் வெளிப்படாமலேயே இருப்பதுதான் உலகின் நியதி.

logo
Kalki Online
kalkionline.com