நாழிகை வட்டில்: பழங்கால மன்னர்கள் டைம் பார்க்கப் பயன்படுத்திய ரகசியச் சாதனம்!

sand clock and Nazhigai Vattil
Nazhigai Vattil
Published on
Kalki Strip
Kalki

நாம் நேரத்தைத் தெரிந்து கொள்ள கடிகாரத்தைப் பயன்படுத்துகிறோம். பழங்காலத்தில் நாடாண்ட மன்னர்கள் நேரத்தைத் தெரிந்து கொள்ள பயன்படுத்திய ஒரு சாதனமே 'நாழிகை வட்டில்' என்றழைக்கப்பட்டது. நாழிகையைக் கணித்துச் சொல்பவர் 'நாழிகைக் கணக்கர்' என்று அழைக்கப்பட்டார். இதைப் பற்றி இந்த பதிவில் நாம் சற்று விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

பழங்காலத்தில் மக்கள் தங்களின் நிழலை அளந்து நேரத்தைத் தெரிந்து கொண்டனர். சிலர் புல்லை நிறுத்தி அதன் மூலம் நேரத்தைக் கணக்கிட்டு அறிந்தனர். சில கோவில்களில் சூரிய ஒளியைக் கொண்டு நேரத்தை அளக்க கருவிகள் அமைக்கப்பட்டன.

நாடாளும் மன்னர் தனது ஒவ்வொரு பணியினையும் இன்ன நாளில் இன்ன நாழிகையில் முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து செயல்படுவார்கள். காலம் காட்டும் கருவிகள் இல்லாத அக்காலத்தில் காலத்தை அறிந்து கொள்ள ஒரு கருவியை வடிவமைத்தனர். இக்கருவியே 'நாழிகை வட்டில்' என்றழைக்கப்பட்டது.

அரண்மனைகளில் நாழிகைக் கணக்கர் சரியாக நேரத்தை நாழிகை வட்டில் மூலமாகக் கணக்கிட்டு மணி ஓசை மூலம் அறிவித்தனர். நாழிகைக் கணக்கர் நாழிகை வட்டிலை கூர்ந்து கவனித்து  ஒரு நாழிகைக்கு ஒரு முறை மணி அடித்து நேரத்தை அறிவிப்பார்கள்.

நாழிகை என்பது இருபத்தி நான்கு நிமிடங்கள் கொண்ட ஒரு கால அளவாகும். பழங்கால மக்கள் தற்போது நம் பயன்படுத்தும் ஒரு மணி நேரக் கணக்கினைப் போல நாழிகை என்ற கால அளவைப் பயன்படுத்தினர். ஒரு நாழிகை என்பது இருபத்தி நான்கு நிமிடங்களாகும்.  இதன்படி இரண்டரை நாழிகை என்பது ஒரு மணி நேரம். அறுபது நாழிகை என்பது ஒரு நாளாகும்.

இதையும் படியுங்கள்:
எல்லோரா குகைச் சுவர்களின் (Ellora caves) ஓவியங்கள் வழியே ஒரு ஆன்மீகத் தேடல்!
sand clock and Nazhigai Vattil

பழங்காலத்தில் மன்னர்கள் தங்கள் அரண்மனை, போர்ப் பாசறை முதலான இடங்களில் நேரத்தைக் கணக்கிட்டு அறிய நாழிகை வட்டிலை பயன்படுத்தியுள்ளனர். வட்டில் ஒன்றில் நீரை நிரப்பி அதில் ஊசி முனை அளவுள்ள ஒரு சிறு துளையின் வழியாக வட்டிலில் உள்ள நீரை சிறிது சிறிதாகக் கசியவிட்டு கசியும் நீரை அளந்து காலத்தைக் கண்டறிந்தனர்.

நாழிகை வட்டில் மூலம் பகல் மட்டுமல்லாது இரவிலும் துல்லியமாக நேரத்தைக் கணக்கிட்டு அறிந்தனர். நாழிகை வட்டில் 'குறுநீர்க்கன்னல்' என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

வட்டிலில் இருந்து கசியும் நீரை அவ்வப்போது அளந்து நாழிகையினை அறிவிப்பதற்கென்றே சிலர் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். இவர்கள் 'நாழிகைக் கணக்கர்' என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் அரசனுக்கு நேரத்தைத் துல்லியமாக அறிவிக்கக் கடமைபட்டவர்கள்.   

அவர்கள் இதில் தவறு செய்தால் அரசரின் செயல்களில் சிக்கல்கள் எழலாம் என்பதைக் கருத்தில் கொண்டு சிறு தவறும் செய்யாத சிறந்த நாழிகைக் கணக்கர்களைத் தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டது. 

'பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள்,

தொழுது காண் கையர் தோன்ற வாழ்த்தி 

எறி நீர் வையகம் வெவீஇய செல்வோய்! நின் 

குறுநீர்க் கன்னல் இனைத்து என்று இசைப்ப'

முல்லைப்பாட்டு 55-58

இதையும் படியுங்கள்:
The little girl in red: தைவான் மக்கள் சொல்ல பயப்படும் கதை!
sand clock and Nazhigai Vattil

“பகைநாட்டு எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் பாசறைக்கு நாழிகைக் கணக்கர் குறுநீர்க் கன்னலோடு வந்து நாழிகையினை அறிந்து வரையறுத்து அரசன் முன் கைகூப்பித் தொழுதவாறே கடந்து போன நாழிகை இவ்வளவு என்பதை ஒவ்வொரு பணித் தொடக்கத்திலும் அறிவுறுத்திக் கொண்டே இருப்பர்” என்பதே இப்பாடலின் பொருள்.

நாழிகை வட்டில் பற்றிய செய்திகள் மணிமேகலையிலும் நாழிகைக் கணக்கர் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரம், முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி முதலான சங்க இலக்கிய நூல்களில் இடம் பெற்றுள்ளன. நமது முன்னோர்கள் எவ்வளவு மதிநுட்பம் உடையவர்கள் என்பதை நாம் சங்க இலக்கியப் பாடல்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com