சிரிப்புச் சிறுகதை - தாறுமாறு ராஜா!

ஓவியம்: பிரபுராம்
ஓவியம்: பிரபுராம்

போர்க்களத்தி்லிருந்து செம ஓட்டம் மன்னன்  கஜபதிக்கு மூச்சிரைத்தது.

அரசமரத்தடியில் கொஞ்ச நேரம் மூச்சு வாங்கி இளைப்பாறினான்.

செல்லில் தோழன் மந்திராஜனைக்கூப்பிட, “ஆஃப் பண்ணுங்க மன்னா” என்று கண் முன்னால் நின்றான் நண்பன்.

“எப்படி? மந்திரராஜா இவ்வளவு சீக்கிரம்?” கஜபதி வியப்பாய் கேட்க, 

“இதிலென்ன அதிசயம்? போர் ஆரம்பித்து ஐந்தாவது நிமிடம் நீங்க ஓடிவர ஆரம்பிச்சிடுவீங்க. உங்க ஓ்ட்ட வேகம் நானறிவேன். இந்த மறைவிடம் 3கி. மீ.  நீ்ங்க ரீச்சாக ஆறே நிமிடம் தானாகும்…”

“முன்னாடியெல்லாம் ஏழு நிமிடமாகும்” மன்னன் முகத்தில் பெருமிதம். 

“அத்தனை பயிற்சி!. வாரா வாரம் ஓடறீங்க. புறமுதுகு ரேஸில் இது ஒரு ரெகார்டு மன்னா. வரலாறு பேசும்” கை கொடுத்தான்.

“சரி மூடிக்க. வழக்கம் போல மாலை ஆறு மணி வரை ஆடு புலி ஆட்டம் ஆடிட்டு களைப்பா அரண்மனை திரும்புவோம்.”

“ஓ.கே. ஓ.கே” ஆட்டத்தை ஆரம்பி. என்ன பந்தயம்?

மன்னன் யோசிக்க,   “என்ன யோசனை  மன்னா?”                

“நான் போர்க்களத்தில் இழந்த கிராமங்களை விட, உம்மிடம் ஆடுகளத்தில் இழந்ததுதான் அதிகம்.”

“ஆனாலும் அடுத்த நாட்டு மன்னன் ஒல்லி ராஜா தொட்டதுக்கெல்லாம் சண்டைக்கு வரான்.”

“நீர் தொட்டது அவர் நாட்டு பெண்  மந்திரியை. சும்மா விடுவானா?’’

“அப்படியா?”

“இதிலென்ன அல்ப சந்தோஷம்?சரி போர் முடிவு என்ன?”

“இந்நேரம் தோத்திருப்போம். தோல்வியை ஒப்புக்கொண்டு நான்கு    கிராமங்களை நேற்றே எழுதிக்கொடுத்து விட்டேன் நம்ம தூதன் கடிதத்தை கொடுத்து மேட்டரை முடிச்சிருப்பான்”

“மன்னா ஆடு புலி ஆட்டத்திலும் தோற்றுவிட்டீர்.”

“ஆமாய்யா. போரில் கூட நான்கு    கிராமங்களைத்தான் தோற்றேன். உம்மிடம் ஆறு கிராமங்களை தோற்று விட்டேன்.”

“விடு மன்னா உன் ராஜ்யமே புறம்போக்கை வளைத்துப் போட்டு உஷார் பண்ணினதுதானே. அதனால் தானே ’புறம்போக்கு ராஜா’ எனப் புகழப்படுகிறாய்”

“ரொம்ப புகழாதே நண்பா!” மன்னன் கூச்சத்தில் நெளிய,

“இதென்ன மன்னா சின்னப் பை?” மந்திரராஜன் வினவ,

“நேற்று சிங்கத்தோடு சண்டை போட்டபோது அதன் மொத்தப்பல்லையும் பிடுங்கிட்டேன்” கம்பீரமாய் சொன்னான் மன்னன் கஜபதி.

இதையும் படியுங்கள்:
சிவபெருமானைப் போற்றும் ‘நமசிவாய’ என்ற மந்திரச் சொல்லின் பொருள் என்ன?
ஓவியம்: பிரபுராம்

“சும்மா அந்தப்புர அழகிகளிடம் விடற பீலாவை என்னிடம் விடாதே. இது உன்னோட ஸ்டெப்னி பல்செட் தானே!”

“அதான் தெரியுதுல்லே. இப்பவெல்லாம் வேகமா நடந்தாலே பல்செட் கழண்டுக்குது. அதை விடு மாலையில் அரண்மணையில் இது எதிரியின் பல்லைக்கழட்டிட்டேன்னு உதார் விடுவேன். நீயும் சேர்ந்து கை தட்டனும்.”

“மன்னா இவ்வளவு பெரிய பொய்க்கு கை தட்டினால் கையில் குஷ்டம் வரும். நான் மாட்டேன்” சங்கடப்பட்டான் மந்திரராஜன்.

“அடம் பிடிக்காதேய்யா! ஒரு மன்னனா இருந்துக்கிட்டு பொய் சொல்லலைனா எப்படி?”

“அதுக்குனு பொய்யிலேயே புழங்கறதா. சரி வா மன்னா 5  மணியாச்சு இருட்டினா பயப்படுவே. நேரத்துக்கு வீடு போய்ச்சேருவோம்.”

“சுடுகாடு வழியா போவோம்.”

’போர்க்களத்தில் கொஞ்ச நேரம் நின்றிருந்தால் தன்னால போயிருப்பே’ என தனக்குள் நினைத்து “பின் இப்பவே வா? அதுக்கு நாளிருக்கு மன்னா” என்றான் மந்திரராஜன்.

“அங்கே போய் ஒரு பெரிய மண்டை ஓடை எடுத்து… “

“புரியுது மேலே நான் சொல்றேன். எதிரியின் மண்டை ஓடு போரில் கைப்பற்றியது என அரசபையில் வைப்போம்.”

“ஆமாம் சரித்திரம் முக்கியம் நண்பா! நான் புறமுதுகு காட்டி ஓடியது வருங்காலத்துக்கு தெரியவா போகுது?”

“இப்பவெல்லாம் செல்லில் படம் எடுத்து நெட்டில் உடனே போட்டுடறான். சரி மன்னா மானம் உனக்கு புதுசா போகப்போறதில்லை. இதையும் டிரை பண்ணி பாத்து டுவோம்”. என்று சுடுகாட்டு வழி போக,

ஒரு பெரிய மண்டை ஓடை மந்திரராஜன் எடுத்து தர, “ஐயோ! கிட்டே காட்டாதே. நீயே கொண்டு வா” என்றார் மன்னர்.

அரண்மணை வாசலில் பெரிய வரவேற்பு.

“களம் பல கண்ட சிங்கமே!” என்று ஒரு புலவர் பாட கஜபதி சிரிக்க, மந்திராஜன் “கொஞ்சம்கூட வெட்கமே இல்லாம ரசிக்கறான் பாரு” என்று திட்டினான்.

“பலே ஏற்பாடு நண்பா புகழ்ந்தான் கஜபதி”

“அவையோரே பார்த்தீரா போரில் வென்று, எதிரி நாட்டு மன்னனின் மண்டை ஓடை எடுத்து வந்துள்ளேன்” கஜபதி பெருமையாய் காட்ட,

அவையில் ஒரே சிரிப்பு. ’வெட்கம் வெட்கம்’ என முழக்கம்.

மஹாராணி கஜானா ஓவென்று அழுதபடி ஓடிவர, பதறிய கஜபதி “என்ன வெற்றி வாகை சூடி வரும் மன்னனை இப்படியா வரவேற்பது?. சொல் கஜானா என்ன விஷயம்?”

“எதிரி நாட்டு மன்னன்…நம்ம இளவரசி பொன்வண்டை கடத்திக்கிட்டு போயிட்டான்.. நீங்க போரில் தோற்று விட்டீர்களாமே!”

“யார் சொன்னது. நான் தான் வெற்றி பெற்றேன்”. மண்டை ஓடை எடுத்து காட்டி “பார்.” என்று பயங்கரமாய் சிரிக்க,

“அப்ப இளவரசி பொன்வண்டை கடத்தியது யார்? எதிரியோட டூப்பா. புளுகாதீங்க. நீங்க புறமுதுகு காட்டி ஓடி வந்தது, மரத்தடியில் ஆடு புலி ஆட்டமெல்லாம் ஆடியது எல்லாம் அரண்மனையில் லைவ் டெலிகாஸ்ட் ஆயிடிச்சு” குண்டைத்தூக்கிப்போட்டாள் கஜானா.

“எப்படி?” கஜபதி அசராமல் கேட்க,

“உங்களோட உறைவாளில் கேமராவை வச்சிட்டேன் பாத்தீங்களா கேமரா உடையாம லஞ்ச் பாக்ஸ் மாதிரி பத்திரமா இருக்கு.”

இதையும் படியுங்கள்:
அபிஷேக எண்ணெய்யை அருந்தும் அதிசய லிங்கம்!
ஓவியம்: பிரபுராம்

“எங்கே வாளை எடுத்தால்தானே! ஓடி ஓடி மன்னருக்கு காலில் தான் வலி” மந்திராஜன் பல்டி அடித்து கட்சி மாற,

“துரோகி” கஜபதி முறைத்தான்.

“முடிஞ்சா வந்து சண்டையிட்டு பொன்வண்டை மீட்டுப்போனு அரண்மனைக் கதவில் நோட்டீஸ் ஒட்டிட்டு போயிருக்கான் எதிரி. என்ன செய்யப்போகிறீர்கள்?” கஜானா அழுதபடி கேட்க,

“ஹாஹ்ஹா எதிரி நாட்டு மன்னன் போரில் ஜெயித்திருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் தோற்று விட்டான். விடு இளவரசி. பொன்வண்டை அவன் தலையிலேயே கட்டி விடுவோம். போன வாரம் இவளுக்கு வச்ச சுயம் வரத்துக்கு எந்த மன்னனும் வரல. மேலும் எதிரி நம்ம மாப்பிளை ஆயிட்டா சண்டைக்கு வரமாட்டான். எப்படி என் ராஜதந்திரம்?” கர்வமாய் கேட்டான் கஜபதி.

சபையே ஏளனமாய் கொக்கரிக்க, சிறிதும் கண்டுக்காமல் மன்னன் கஜபதி டயர்டாய் இருக்குனு தூங்கப்போனான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com