அசத்தல் அம்மாக்கள்! அவர்களுக்கு மரியாதை!

அசத்தல் அம்மாக்கள்! அவர்களுக்கு மரியாதை!
Updated on

மிழ் சினிமாவில் மட்டுமில்லை, ஒட்டு மொத்தமாகவே “அம்மா சென்டிமென்ட்” எப்போதுமே ஒர்க் அவுட் ஆகும் என்பது சென்னை மியூசிக் அகாடமி அரங்கில் நடைபெற்ற “தாய்மைக்கு வணக்கம்” ஏன்ற நிகழ்ச்சியின் மூலமாக நிரூபணமாகியது! நிரூபித்தவர் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி! 

கடந்த பத்தாண்டுகளாக, சாதனை புரிந்த பல்வேறு துறையினரது அம்மாக்களையும் பாராட்டி கௌரவித்து வருகிறார் முரளி. அந்த வகையில் இந்த வருடம் பதினோறாவது “தாய்மைக்கு வணக்கம்” நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. மணிப்பூரில் தீவிரவாதிகள் தாக்குதலின்போது, தனி ஒரு வீரராக நான்கு தீவிரவாதிகளை துவம்சம் செய்து அசோக சக்ரா விருது பெற்ற கர்னல் ஸ்ரீராம் குமாரின் தாய் லோகநாயகி நிகழ்ச்சியின் துவக்கத்தில் கௌரவிக்கப்பட்டார்.

பாடகி சைந்தவிவின் தாய் ஆனந்தி ஸ்ரீவத்சன், கண் டாக்டர் விஜய் சங்கரின் தாய் கீதா சங்கர் (மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மனைவி),  சுஹாசினி மணிரத்னத்தின் தாய் கோமளம்,  பெங்களூரு தொழிலதிபர் சுபோத் சங்கரின் தாய் கல்யாணி சங்கர், கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் தாய் லட்சுமி சங்கரன்,  ஊடகத்துறையைச் சேர்ந்த சுபஸ்ரீ தணிகாசலத்தின் தாய் மீனாட்சி, மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவனின்  தாய் நீதிபதி (ஓய்வு) பிரபா ஸ்ரீதேவன்,  கோவை எஸ்.எஸ்.வி.எம். கல்விக் குழுமத்தின் தலைவர் மணிமேகலையின் தாய் ராஜாமணி, வயலின் கலைஞர்கள் லலிதா, நந்தினியின் தாய்  சுப்புலட்சுமி,  தொழில்முனைவோர் சித்ரா கணபதியின் தாய் சொற்பொழிவாளர் சாரதா நம்பி ஆரூரான் ஆகியோர் கௌரவிக்கப்பட்டார்கள்.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, அவரது மனைவி கல்யாணி, எழுத்தாளர் சிவசங்கரி , முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி ஆகியோர்  அம்மாக்களையும், அவர்களின் சாதனை வாரிசுகளையும் மாலையிட்டு, நினைவுப் பரிசுகள் அளித்து கௌரவித்தார்கள். நூற்றாண்டினை நெருங்கிக் கொண்டிருக்கும் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் மற்றும் பாஷ்யம் ஐயங்கார் இருவரும் அனைவரையும் அட்சதை தூவி, ஆசி வழங்கினார்கள்.

அடுத்து சாதனை வாரிசுகள்  தங்கள் அம்மாக்களை அறிமுகப்படுத்தினார்கள்.  சைந்தவி, நெல்லை ஜெயந்தா  இருவரும்  முந்தைய தாய்மைக்கு வணக்கம் நிகழ்ச்சிகளில் இறைவணக்கம், பாடவும், தொகுத்து வழங்கவும் கலந்துகொண்ட தருணங்களில் எதிர் காலத்தின் தங்களுடைய அம்மாக்களுக்கும் இது போன்ற கௌரவம் கிடைக்குமா என ஏங்கியதைக் குறிப்பிட்டு, தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள்.

இசைக்கவி ரமணன் பேசுகையில்’ தேசம் என்பது வெறும் மண்ணல்ல; தாய் என்பவள் வெறும் பெண்ணல்ல” என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சியின்போது கௌரவிக்கப்பட்ட அத்தனை பேர்களின் குலதெய்வக் கோவில்களிலிருந்தும்  வரவழைக்கப்பட்ட பிரசாதங்கள், காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து வரவழைக்கப்பட்ட அம்மனுக்கு சாத்திய பட்டுப்புடைவைகள், திருப்பதி லட்டு பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்ட நேரங்களில் அம்மாக்களின் கண்களின் ஓரத்தில் ஆனந்தக் கண்னீர் துளிர்த்தது குறிப்பிடத் தக்கது.

கண் டாக்டர் விஜய் சங்கர், அனைவரையும் கண்தானம் செய்ய வலியுறுத்தினார். திருமணமாகி, தான் பெற்றெடுத்த முதல் குழந்தையான விமலஹாசனை மூன்றே மாதத்தில் பறிகொடுத்துவிட்டு, தன் மாமியர் பெற்றெடுத்த கமலஹாசனை தன் குழந்தையைப் போல வளர்த்தவர் என் அம்மா கோமளம்” என்று கூறி நெகிழ்ந்தார் சுஹாசினி.

ஒரு அம்மாவாக அளவில்லா பாசத்தையும், ஒரு குருவாக அதீத கண்டிப்பும் காட்டி வளர்த்தவர் எங்கள் அம்மா என்று குறிப்பிட்டனர் வயனிஸ்ட்கள் லலிதாவும், நந்தினியும்.

இப்படி ஒவ்வொரு பிரபலமும் தங்கள் அம்மாவைப் பற்றிப் பேசியபோது தானும் கண்கலங்க, அம்மாக்களும் நெகிழ்ந்து போனார்கள்.

“என் அம்மா எல்லோருக்கும் தமிழ் கற்றுக் கொடுத்தார். எனக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்தார்” என்று தன் மகள் சித்ரா சொன்னபோது அம்மா சாரதா நம்பி ஆரூரானின் கண்களில் அருவியாய்க் கொட்டியது ஆனந்தக் கண்ணீர்!

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய தெய்வயானை மணிகண்டனின் அபாரமான இணைப்புரையைப் பாராட்டதவரில்லை.

logo
Kalki Online
kalkionline.com