
வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்பவர்கள் 'கல்ச்சுரல் டிஃபரென்ஸ்' என்பதை கண்டிப்பாக சமாளித்து தாண்டி தான் வரவேண்டும். சில பேருக்கு அது சற்று எளிதாக இருக்கலாம். ஆனால் பலருக்கு இடியாப்ப சிக்கல்தான். 'ஆமாம், இல்லை' என்று தலையை ஆட்டுவதிலிருந்து 'ம்' கொட்டுவது வரை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு அர்த்தங்கள். சில உடல் மொழிகளை புரிந்து கொள்வது ரொம்ப சுலபம். ஆனால் சில வார்த்தைகளின் வெவ்வேறு அர்த்தங்களை தெரிந்து கொள்ளாவிட்டால் நம் பாடு திண்டாட்டம் தான்.
ஜெர்மனியில் எனக்கு நடந்த சுவாரஸ்யமான விஷயத்தை இங்கு பகிர்கிறேன்.
ஒரு முக்கியமான விஷயமாக என்னுடைய ஆடிட்டரிடம் தொலைபேசியில் விபரங்களை சொல்லி உடனே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி, பார்க்க சென்றிருந்தேன். பிராங்க்ஃபர்ட்-ல் நான் இந்தப் பக்கம் என்றால் அவர் நேர் எதிர்பக்கம். அவர் அலுவலகம் சென்று சேர்ந்திட ஏறத்தாழ 35 நிமிடங்களானது. காலை ஏழே முக்கால் மணிக்கே சென்று விட்டபடியால் கால் மணி நேரம் வெளியே காத்திருந்தேன். ஜெர்கின் போட்டிருந்தும் குளிர் நெஞ்சை பிளந்தது. மஃப்ளர் கொண்டு வந்திருக்கலாமோ என்று தோன்றியது. சரியாக 8:00 மணிக்கு கதவு திறந்தது.
உள்ளே நுழைந்தேன்.
பொதுவாக ஜெர்மனியில் அனைவருமே பிளாக் காஃபி நிறைய அருந்துவார்கள். எல்லா அலுவலகங்களிலும் காபி மெஷின் இருக்கும். காஃபி, எஸ்பிரஸோ, சாக்லேட் காஃபி என எது வேண்டுமானாலும் மிஷினில் பட்டனை அழுத்தி எடுத்துக் கொள்ளலாம். அங்கும் அது இருந்தது.
உள்ளே சென்றதும் அவரைப் பார்த்து கைகுலுக்கி இருக்கையில் அமர்ந்தேன்.
"காஃபி வேண்டுமா?" என்றார்.
'இப்பொழுதுதான் குடித்தேன்' என்றேன்.
இது வழக்கமாக நாம் நம் ஊரில் சொல்வது தான். தெரிந்தவர் வீட்டுக்கு சென்றால் 'இப்பொழுது தான் குடித்தேன்' என்போம். அவர் சற்று கட்டாயப்படுத்தினாலும் 'இல்ல, வேண்டாம்' என்றவுடன் அடுத்த விஷயங்களை பேச ஆரம்பிப்போம். அது போல் தான் நானும் பழக்க தோஷத்தில் சொன்னேன். ஆனால் அங்கு நடந்த விஷயமே வேறு.
உடனே அவர் என்னைப் பார்த்து கேட்டார்,
"ஏன் அடுத்த காஃபி உடனடியாக குடிக்க கூடாதா?"
அவரின் பார்வையும், உடல் மொழியும் அந்த வார்த்தைகளின் ஏற்ற இறக்கமும் கோபத்தின் தொடக்கமாக இருந்தது.
சில நொடிகளிலேயே முழு கோபமும் அவர் முகத்தில் வந்து ஒட்டிக் கொள்ள கம்ப்யூட்டரை பார்த்து திரும்பிக் கொண்டார்.
முந்தைய தடவைகளில் அவரை பார்க்கப் போகும்போது 'நான் அடிக்கடி காஃபி குடிப்பேன்' என்று அவர் சொன்னது எனக்கு அப்பொழுதுதான் ஞாபகத்துக்கு வந்தது.
நான் சொன்ன 'இப்பொழுதுதான் குடித்தேன்' என்ற வார்த்தைகள், அடிக்கடி காஃபி குடிக்கும் அவரை கிண்டல் செய்வது மாதிரி எடுத்துக் கொண்டார்.
என்னுடைய பதில் "வேண்டாம்" என்றிருந்திருந்தால் அங்கு எந்த பிரச்சனையும் இருந்திருக்காது.
"நான் உங்களை கிண்டல் செய்யவில்லை, எங்கள் ஊரில் இப்படித்தான் பதில் சொல்வோம்" என்றேன். "ம்" என்று கேட்டுக் கொண்டே கம்யூட்டரை பார்த்துக் கொண்டிருந்தவர், சாதாரண நிலைக்கு வர சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டார்.
மெதுவாக திரும்பி என்னை பார்த்து புன்னகைத்தார். நான் கொண்டு போயிருந்த டாக்குமெண்ட்களை வாங்கி மேலோட்டமாக பார்த்தவர், அடுத்து சீரியசாக கேட்ட கேள்வி - "இந்தியாவில் அடுத்தடுத்து இரண்டு காஃபி குடிக்கக் கூடாதா?"
எனக்கு சிரிப்பு வந்து விட்டது.
அதற்கு அப்புறம்தான் புரிந்தது, அவருடைய மனைவியின் பிறப்பிடம் சீனா. அங்கு மனித உரிமைக்கு நிறைய கட்டுப்பாடுகள்! அவர் அந்த மாதிரி இந்தியாவையும் நினைத்து விட்டார். பிறகு விளக்கினேன்.
ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. எப்பொழுதும் எதிராளி கேட்கும் கேள்விக்கு சரியாக பதிலை சொல்ல வேண்டும்!