தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியம்

தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியம்

அத்தியாயம் – 45
Published on

ந்தக் காலத்தில் எதைப் பற்றிய தகவல் வேண்டுமானாலும் சிரமமே படவேண்டாம். கூகுள் மாமாவைக் கேட்டால் சல்லிசாக “இந்தத் தகவல் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?” என்று கொண்டு வந்து கொட்டிவிடுவார்.

ஆனால், ஒரு பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலைமை இப்படி இல்லை. தமிழ் சினிமா குறித்த எந்த தகவல் வேண்டுமானாலும் தருவதற்கு ஒரே ஒருவர்தான் இருந்தார். அவர்தான் ‘ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்”.

பத்திரிகை அலுவலகங்களில் ஒரு பழைய சினிமாவின் ஸ்டில் தேவையென்றால், உடனே ஆசிரியர் சொல்லுவார்: "ஃபிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு போன் செஞ்சு கேளுங்க!" ஒரு குறிப்பிட்ட படத்தின் பிரதான வில்லன் நம்பியாரா?அசோகனா? என்று ஒரு பத்திரிகையாளருக்கு சந்தேகம் வந்தால், அதைத் தீர்த்துக்கொள்ள ஆனந்தனுக்குத்தான் போன் செய்வார்கள். சினிமா உலகைச் சேர்ந்த யாருடைய டெலிபோன் எண் தேவை என்றாலும், உதவிக்கரம் நீட்டுபவர் ஆனந்தனேதான்! அவ்வளவு ஏன். " தேவி தியேட்டரில் எத்தனை மணிக்கு சார் மேட்னி ஷோ? ‘தசாவதாரம்’ படம் ரிலீஸ் எப்போ சார்?" என்றெல்லாம்கூட மதியான வேளையில் அவர் சற்று கண் அசரும் நேரத்திலும் சினிமா ரசிகர்கள் அவருக்கு ஃபோன் செய்து, தொந்தரவு செய்த நாட்கள் பல உண்டு. இதை அவரே என்னிடம் மனம் நொந்து சொல்லி இருக்கிறார்.

அவர் பல்லாண்டுகளாக தான் தொகுத்து வைத்திருந்த ஒவ்வொரு தமிழ்ப் படத்தைப் பற்றிய தகவல்களையும் முழுமையாகத் தொகுத்து " சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு" என்ற சுமார் 750 பக்க புத்தகமாக வெளியிட்டார். அது தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்றால் மிகை இல்லை. தனது 90 வயது வரை சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த சினிமாத் தேனீ அவர்.

ஆனந்தனிடம் தகவல்கள் கேட்டுப் பெற்று செய்திகள், பேட்டிகள் வெளியிடுவது பத்திரிகையுலக வழக்கம் என்றாலும், அவரது அனுபவங்களை அவரே சொல்லக்கேட்டு, தொடராக ‘அமுதசுரபி’பத்திரிகையில் எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதற்கு அவர் அளித்த ஒத்துழைப்பு அபாரமானது. ஒவ்வொரு முறையும், அவரது தகவல் சுரங்கத்திலிருந்து கிடைக்கும் விஷயங்கள் வெகு சுவாரசியமாக இருக்கும். சில சமயங்களில், சிலரைப் பற்றி ஆச்சர்யகரமான, அம்பலத்துக்கு வராத தகவல்களையும் கூட “ஆஃப் தி ரெக்கார்டு” ஆக சொல்லுவார். “தனது வாழ்க்கை அனுபவங்கள் முழுமையான ஒரு தொடராக அச்சில் பதிவு செய்யப்படுகிறது” என்ற வகையில் ஆனந்தனுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது அந்தத் தொடர்.

வசதியான குடும்பத்தில் பிறந்தவர் ஆனந்தன். ஐம்பதுகளின் துவக்கத்தில் மகன் ஆசைப்படுகிறான் என்பதற்காக மூவாயிரம் ரூபாய் கொடுத்து புத்தம் புது ரோலிஃப்ளெக்ஸ் கேமரா (ஜெர்மன் தயாரிப்பு) வாங்கிக் கொடுத்தார் ஆனந்தனின் அப்பா ஞானசாகரம். அவர் ஏ,ஜி'ஸ் அலுவலகத்தில் துணை அக்கவுண்டென்ட் ஜெனெரல் ஆக பதவி வகித்தவர். ஆனந்தனின் தாத்தா கிருஷ்ணசாமி முதலியார் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

ஒருநாள் அப்பா வாங்கிக் கொடுத்த புது கேமராவோடு, நியூடோன் ஸ்டுடியோவுக்குப் போனார் ஆனந்தன். “அங்கே ‘ராஜா ராணி’ படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. ஓர் ஓரமாக வயசான ஒருவர் ஈசி சேரில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அருகில் சென்று பார்த்தபோது இன்ப அதிர்ச்சி! தயக்கத்துடன், "உங்களை போட்டோ எடுத்துக் கொள்ளலாமா? என்று தமிழில் கேட்டேன். அவர், என்னை நேருக்கு நேர் பார்த்து, "Of course you can take" என்று ஆங்கிலத்தில் பதில் அளித்தார். அன்று நான் படமெடுத்த முதியவர் (மேக்-அப்பில் இருந்தவர்) யார் தெரியுமா? சிவாஜி கணேசன்!" என்று எண்பது வயதில் கூட உற்சாகத்துடன் பழைய அனுபவங்களை நினைவு கூறுவார்.

‘கெய்ரோ’ திரைப்பட விழாவில் (1959) ‘வீரப்பாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுக் கொண்டு, இந்தியா திரும்பியவுடன், சிவாஜிக்கு சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் , ஒரு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தார் ஆனந்தன். சிவாஜியின் சம்மதம் பெற்றுவிட்ட சூழ்நிலையில், விழாவை நடத்த ஓட்டல் கிடைக்கவில்லை. கடைசியில், சிவாஜியிடம் நிலைமையை விளக்கிச் சொல்லி, தன் வீட்டின் பெரிய மொட்டை மாடியில் ஷாமியானா போட்டு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்துகொள்ள, பாராட்டுவிழாவை நடத்தி ஜமாய்த்துவிட்டார் ஆனந்தன். அந்த நிகழ்ச்சியில் மனம் திறந்து சிவாஜி தெரிவித்த சில கருத்துக்கள் தமிழகத்தில் சில சர்ச்சைகளை ஏற்படுத்தின.

இன்னொரு சுவாரசியமான தகவலையும் சொன்னார் ஆனந்தன். கெய்ரோ திரைப்படத் திருவிழாவின் நிறைவு விழாவில், “ சிறந்த நடிகருக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் மிஸ்டர் சிவாஜி கணேசன், இந்தியா” என்று அறிவிக்கப்பட்டபோது, சிவாஜி கணேசன் அரங்கத்தில் இருந்தாலும் அதை அவர் கவனிக்கவில்லை. பக்கத்தில் அமர்ந்திருந்த பத்மினிதான் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து, சிவாஜியிடம் விஷயத்தைச் சொன்னாராம்.

எம்.ஜி.ஆர். ‘நாடோடி மன்னன்’ படம் எடுத்துக் கொண்டிருந்த சமயம், வித்வான் லட்சுமணன் மூலமாக ஆர்.எம். வீரப்பனோடு ஆனந்தனுக்கு அறிமுகம் ஏற்பட்டது. அதன் மூலமாக, அந்தப் படத்தின் ஸ்டில்களைப் பெற்று, எல்லா பத்திரிகைகளுக்கும் வினியோகித்து, படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே, எம்.ஜி.ஆரின் இரட்டை வேட புகைப்படங்களை பத்திரிகைகளில் வெளிவரச் செய்துவிட்டார் ஆனந்தன். அந்த புகைப்படங்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். ரசிகர்கள் திக்குமுக்காடிப் போனார்களாம்.

அது மட்டுமில்லை, இது எம்.ஜி.ஆரையே வியப்பில் ஆழ்த்தியது. இதற்குக் காரணமானவர் ஆனந்தன் என்பதை அறிந்து, அவரைப் பாராட்டிய எம்.ஜி.ஆர். பட ரிலீசின்போது, பத்திரிகையாளர்களுக்கான காட்சிக்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பையும் ஆனந்தன் வசமே ஒப்படைத்தார். அதன் பிறகு பல்லாண்டுகளுக்கு, படத்துக்கு யார் பி.ஆர்.ஓ. என்றாலும், பிரஸ் ஷோவுக்கான ஏற்பாடுகளை ஆனந்தன்தான் செய்யவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் உத்தரவு. அதேபோல, பிரஸ் ஷோ நடந்த மறுநாள் காலை ஆனந்தனுக்கு ஃபோன் செய்து, படம் பற்றி முக்கியமான பத்திரிகையாளர்களின் கருத்து என்ன என்று கேட்டுத் தெரிந்துகொள்வது எம்.ஜி.ஆரின் வழக்கம்.

சினிமா செய்திகளை சேகரித்து பத்திரிகைகளுக்குக் கொடுத்ததால் அவருக்கு “பிலிம் நியூஸ் ஆனந்தன்” என்று பெயர் வந்தது என்று பலரும் நினைப்பார்கள். ஆனால், அதற்குக் கூட ஒரு சுவையான கதை உண்டு. ஒரு புகைப்படக்காரராக பல ஸ்டூடியோக்களுக்கும் சென்று எடுக்கிற புகைப்படங்களையெல்லாம் பிரிண்ட் போட்டு, அழகான ஆல்பங்களில் ஒட்டிவைப்பது ஆனந்தனின் பழக்கம். படமெடுக்க ஸ்டுடியோக்களுக்கு அவர் தன் காரில்தான் போவார். அப்படி ஸ்டுடியோ ரவுண்டு செல்லும்போது, அந்த ஆல்பங்களை தனது காரிலேயே வைத்திருப்பது அவரது பழக்கம்.

ஒரு நாள், பாண்டிபஜாரில் தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பரான தேவராஜன் என்பவரை சந்தித்தபோது, அவர், ஆனந்தனின் ஆல்பங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். "நான் 'பிலிம் நியூஸ்' என்று ஒரு சினிமா மாதப் பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கிறேன். நீ எடுக்கும் புகைப்படங்களை என் பத்திரிகைக்குக் கொடு" என்றார் தேவராஜ். பிலிம் நியூஸ் பத்திரிகையின் தீவிர வாசகரான ஆனந்தன், அந்தப் பத்திரிகையின் ஆஸ்தான புகைப்படக்காரர் ஆனார். "ஃபிலிம் நியூஸ் பத்திரிகைக்காக இந்த புகைப்படங்களை பிரத்யேகமாக எடுத்தவர் "பிலிம் நியூஸ் ஆனந்தன்" என்று ஸ்பெஷலாக முக்கியத்துவம் அளித்து, ஆனந்தன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகத் துவங்கின. இப்படியாகத்தான் வெறும் ஆனந்தன், 'பிலிம் நியூஸ் ஆனந்தன்' ஆனார்.

பேசும் படம் பத்திரிகைக்காக, டைரக்டர் ஸ்ரீதரை விதம் விதமான போஸ்களில் ஆனந்தன் ஏராளமான புகைப்படங்கள் எடுத்தார். அப்போது, ‘கல்யாணப் பரிசு’ படம் பற்றி உணர்ச்சி பொங்க நிறைய பேசினார் ஸ்ரீதர். பேச்சு சுவாரசியத்தில், படத்தின் கிளைமாக்ஸையும் சொல்லிவிட்டார். உடனே, "படத்தின் கிளைமாக்ஸ் என்ன என்பது என் பார்ட்னர்களுக்குக் கூடத் தெரியாது. எனவே, அது பற்றி எந்தப் பத்திரிகையாளரிடமும் சொல்லிவிடாதீர்கள்" என்று கேட்டுக் கொண்டார். அதன் படி ஆனந்தன், கல்யாணப் பரிசு கிளைமாக்ஸ் பற்றி படம் ரிலீஸ் வரை யாரிடமும் மூச்சுவிடவில்லை.

இன்று, படம் ரிலீசான மறுநாளே படத்தின் வெற்றி விழா, பிரஸ் மீட், பார்ட்டி என்று கொண்டாடுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் படங்கள் நிஜமாகவே நூறு நாட்கள், 200 நாட்கள் ஓடின. தயாரிப்பாளர்கள், அதை விழா எடுத்துக் கொண்டாடினார்கள். படங்கள் நூறு நாட்கள் ஓடுவதைப் போலவே,சினிமா நட்சத்திரங்கள் நூறு படங்களில் நடிப்பதும் ஒரு சாதனைதானே? அத்தகைய சாதனை நட்சத்திரங்கள் நடித்த நூறு படங்களிலிருந்தும் படத்துக்கு ஒரு ஸ்டில் வீதம் தேர்ந்தெடுத்து, அவற்றைத் தொகுத்து ஒரு ஆல்பம் தயாரித்து, அந்த நட்சத்திரங்களிடம் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர் ஆனந்தன். அந்த நட்சத்திரங்களில் ஜெயலலிதா, கே.ஆர். விஜயா. சிவகுமார் உட்பட பலரும் அடக்கம். ஆனாலும், அந்தப் பணிகளை செய்து முடிப்பதற்குள் அவர் பட்ட கஷ்டங்கள்! அப்பப்பா!

எம்.ஆர்.ராதா மிகவும் வித்தியாசமான மனிதர். ஒரு முறை புகைப்படம் எடுக்க ஆனந்தன் அவரது வீட்டுக்குப் போயிருந்தபோது "ரஷ்யா" என்று எம்.ஆர்.ராதா அழைக்க, ஒரு பையன் வந்தான். சற்று குழப்பமாகி, "என்ன சார்! பையன் பேரு ரஷ்யாவா?" என்று கேட்டபோது, " ஏன், பழனி, சிதம்பரம், திருப்பதின்னு இங்கே பசங்களுக்கு பேர் வைக்கிறபோது, நான் ரஷ்யான்னு பேர் வைக்கக்கூடாதா? என்று அவர் லாஜிக்காக பதில் கேள்வி கேட்டார். ராதாவையும், அவர் அன்றைக்குக் கேட்ட கேள்வியையும் என்னால் மறக்கவே முடியாது" என்பார் ஆனந்தன்.

எம்.ஜி.ஆரை சுட்ட விவகாரத்தில் தண்டனை பெற்று, சிறையிலிருந்து விடுதலையானவுடன், எம்.ஆர். ராதா பத்திரிகையாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்தார் ஆனந்தன். ஒரு பத்திரிகையாளர் எம்.ஜி.ஆரை. எம்.ஆர். ராதா சுட்டதைப் பற்றி விவகாரமான கேள்வி ஒன்றைக் கேட்க, ராதா ஏதாவது பதில் சொல்லி அது ஏதாவது பெரிய ரகளையாகிவிடுமோ என்று ஆனந்தன் பயந்தபோது, ராதா அந்தக் கேள்விக்கு வெகு சாதுரியமாக ஒரு பதிலைச் சொல்லி சர்ச்சை எதுவும் ஏற்படுத்த வழியே இல்லாமல் நழுவி விட்டார். ராதாவின் பதில்: " நாங்க சும்மா துப்பாக்கியால விளையாடினோம் அவ்வளவுதான்" என்பதுதான்.

எழுபதுகளில், சினிமாக் கலைஞர்களின் முகவரிகளைத் தொகுத்து “திரைக் கலைத் தொகுப்பு” என்று ஒர் புத்தகம் வெளியிட்டார் ஆனந்தன். அதற்கான செலவுக்காக அவர் வங்கி ஒன்றில் கடன் வாங்கினார். புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள்.

அவர்களில் பலரும் மேடையில் புத்தகப் பிரதியை வாங்கிக்கொண்டு, மைக்கில் "ஆனந்தனுக்கு இந்தப் புத்தகத்துக்காக நான் ஆயிரம் ரூபாய் அளிக்கிறேன்; 2000 ரூபாய் அளிக்கிறேன்; 5000 தருகிறேன் என்றெல்லாம் அறிவித்தார்கள். அவர்கள் மேடையில் அறிவித்தார்களே தவிர, அறிவித்தபடி யாரும் பணம் கொடுக்கவில்லை. ஆனால், மறுநாள் ஆனந்தனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வங்கி மேனேஜர் ஃபோன் செய்து, "பேப்பரில் வெளியீட்டு விழா நியூஸ் பார்த்தேன். நட்சத்திரங்கள் பலர் நிறைய பணம் கொடுத்திருக்கிறார்கள் போல இருக்கே! நாளைக்கே வாங்கின வங்கிக் கடனை அடைத்துவிடுங்கள்!" என்று சொன்னதும், அதிர்ச்சியில் உறைந்துபோனார் ஆனந்தன்.

ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் அந்த ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், சென்சார் ஆகி, ரிலீஸ் ஆகாத படங்கள், விழா கொண்டாடிய படங்கள், அந்த ஆண்டில் நிகழ்ந்த திரைப்பிரபலங்களின் திருமணம், மறைவு உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இவற்றை எல்லாம் தொகுத்து சிறு புத்தகமாக அச்சிட்டு, பத்திரிகையாளர்களுக்கு வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 2016ல் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் மறைந்தார். அவருக்குப் பின் அப்பணியை வேறு யாரும் தொடரவில்லை.

(தொடரும்)

logo
Kalki Online
kalkionline.com