நரகத்தின் நுழைவு வாயில்! போர்க்கைதிகளை 'மனிதப் பிண்டங்களாக' மாற்றிய ரயில் பாதை!

Siam-Burma Death Railway
Siam-Burma Death Railway
Published on

பர்மா - சயாம் இடையிலான தொடருந்துப் பாதை (Burma – Siam Railway) என்பது தாய்லாந்து – பர்மா நாடுகளுக்கிடையே இரண்டாம் உலகப் போரின் போது கட்டப்பட்ட 415 கி.மீ (258 மைல்கள்) தொலைவு கொண்ட ஒரு தொடருந்து வழித்தடமாகும். இந்தத் தொடருந்துப் பாதை, பர்மா தொடருந்துப் பாதை (Burma Railway) என்று அழைக்கப்பட்டாலும், இதனை மரணத் தொடருந்துப் பாதை (Death Railway) என்றேப் பலரும் அழைக்கின்றனர். பெயர் காரணம் என்ன தெரிந்து கொள்வோமா?

இந்தத் தொடருந்து வழித்தடமானது தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்கும் முயற்சியில் ஜப்பானியர்களால் மேற்கொள்ளப்பட்டது. இது மனித வரலாற்றில் மிகவும் துயரம் மிகுந்த ஒரு தொடருந்துப் பாதை முயற்சியாகும். இந்த முயற்சி பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் முடிந்து இருக்கிறது.

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானிய அரசாங்கம், தாய்லாந்து நாட்டிற்கும் பர்மா நாட்டிற்கும் இடையே ஒரு தொடருந்துப் பாதை அமைப்பதற்கு முடிவு செய்தது.

ஆனால், மலைக் காடுகளில் பல பெரிய ஆறுகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடியதால் அந்தத் திட்டம் சாத்தியம் இல்லை எனக் கைவிடப்பட்டது.

இதையும் படியுங்கள்:
சங்க காலம் முதல் இன்று வரை - காலத்தை வென்ற தமிழ் கழுத்தணிகள்!
Siam-Burma Death Railway

1942 ஆம் ஆண்டில், ஜப்பானியப் படைகள் தாய்லாந்து வழியாக நுழைந்து, ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த பர்மாவைக் கைப்பற்றின. ஜப்பானியர் தங்களின் படைகளைப் பராமரிக்க, மலாக்கா நீரிணை மற்றும் அந்தமான் கடல் வழியாக வரவேண்டி இருந்தது. மேலும், நேச நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல்களின் மூலம் தாக்குதல் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. அதனால், ஜப்பானியர்கள் மாற்றுவழியைத் தேடினர். அதற்கு தொடருந்துப் பாதை அமைப்பது மட்டுமே சரியானது என்று நினைத்தனர்.

ஜப்பானியப் படைகள் 1942 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் தொடருந்துப் பாதைத் திட்டத்தைத் தொடங்கின. தொடருந்துப் பாதை அமைப்பதற்கான தளவாடப் பொருட்கள் மலாயாவில் இருந்தும், இந்தோனேசியாவில் இருந்தும் கொண்டு வரப்பட்டன. மலாயாவைப் பொருத்த வரையில் தளவாடப் பொருட்கள் மலாக்கா, சிங்கப்பூர், கோத்தா பாரு, கோலா லிப்பிஸ் பகுதிகளில் போடப்பட்டிருந்த தொடருந்துத் தண்டவாளங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு புதிய தொடருந்துப் பாதைக்குப் பயன்படுத்தப்பட்டன.

இதையும் படியுங்கள்:
பட்டுப் புடவையில் புதைந்திருக்கும் 1000 வருட மர்மம்!
Siam-Burma Death Railway

தொடருந்துப் பாதைக் கட்டுமானத்தில் நரகத்தீ கணவாய் (Hellfire Pass) எனும் பகுதிதான் மிகவும் கடினமான பகுதியாகக் கருதப்படுகிறது. இங்கு பெரும் பாறைகளை வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நரகத்தீ கணவாய் பகுதி காடுகளின் மிகவும் உட்பகுதியில் இருந்ததுடன் கட்டுமான உபகரணங்களின் பற்றாக்குறை காரணத்தினாலும் தொடருந்துப் பாதைப் பணிகள் தாமதமாகின.

ஆஸ்திரேலியர்கள், பிரித்தானியர்கள், டச்சுக்காரர்கள், போர்க்கைதிகள், சீனர்கள், மலாய்க்காரர்கள், தமிழர்கள் என்று மொத்தம் 3,30,000 தொழிலாளர்கள் கட்டாய வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களுடன் ஜப்பானியர்கள், மஞ்சூரியர்கள் என்று 10,000 பேர்களும் பணியாற்றினர். வேலை தொடங்கிய ஆறே ஆறு வாரங்களில் 68 பணியாட்கள் ஜப்பானிய, கொரியக் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். அதில் சிலர் காலரா, வயிற்றுப்போக்கு, பட்டினி, உணவில்லாமையால் இறந்து போயினர்.

இதையும் படியுங்கள்:
Shocking! எறும்பை சட்னி செய்து சாப்பிடும் மக்கள்! - எங்கே? ஏன்? முழு விவரம்!
Siam-Burma Death Railway

இத்தொடருந்துப் பாதைக் கட்டுமானத்தின் போது, தொழிலாளர்கள் அனுபவித்த கொடுமையான நிலைமைகள் மற்றும் அதிகமான உயிர் இழப்புகளின் காரணமாக, அந்தக் கணவாய்க்கு ‘நரகத்தீ கணவாய்’ எனப் பெயர் வந்தது. இது தவிர, உடல் மெலிந்து நலிந்து போன போர்க் கைதிகளும்; ஆசியத் தொழிலாளர்களும்; கைவிளக்குகளைப் பயன்படுத்தி உழைக்கும் காட்சிகள், நரகத்தின் காட்சிகள் போல அமைந்து இருந்ததாலும் ‘நரகத்தீ கணவாய்’  (Hellfire Pass) என்று பெயர் வைத்து அழைக்கப்பட்டது.

இத்தொடருந்துப் பாதையின் கட்டுமானத் துறையில் வேலை செய்தவர்கள் அடிமைகளை விட படு மோசமான, கொடூரமான முறைகளில் நடத்தப்பட்டனர். அவர்களின் குடியிருப்பு வசதிகளும் ஆரோக்கியமற்றவையாக இருந்தன. அவர்கள் பரிதாபத்திற்குரிய மனிதப் பிண்டங்களாக வாழ்ந்தனர்.

இதையும் படியுங்கள்:
ஆச்சரியம், ஆனால் உண்மை!பால்பாயிண்ட் பேனாவுக்குப் பின்னால் இருக்கும் வரலாறு!
Siam-Burma Death Railway

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புள்ளிவிவரப்படி, இப்பாதைக் கட்டுமானத்தில் 3,30,000 பேர் ஈடுபட்டனர். இவர்களில், ஆசியத் தொழிலாளர்கள் 90,000 பேர், பிரித்தானியர்கள் 6,318 பேர், ஆஸ்திரேலியர்கள் 2,815 பேர், டச்சுக்காரர்கள் 2,490 பேர், அமெரிக்கர்கள் 356 பேர், 100க்கும் குறைவான கனடியர்கள், நியூசிலாந்துக்காரர்கள் என்று மொத்தம் 1,06,000 பேர் இறந்து போயினர். இதனால் இந்தத் தொடருந்துப் பாதையினை சயாம் மரணத் தொடருந்துப் பாதை என்று அழைக்கின்றனர். இதில் ஜப்பானியர்கள் உயிரிழப்பு குறித்தத் தகவல்கள் எதுவும் இல்லை.

இரண்டாம் உலகப்போர் ஒரு முடிவிற்கு வந்ததும் போர்க்கைதிகளின் முகாம்களில் இருந்த கல்லறைகள் அல்லது இடுகாடுகளில் புதைக்கப்பட்டிருந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. 415 கி.மீ நீளம் கொண்ட தொடருந்துப் பாதைத் தொடரில் பல இடுகாடுகள் இருந்தன. அந்த இடுகாடுகள் மூன்று நிலையான இடுகாடுகளாக சீர்செய்யப்பட்டு போர்க்கைதிகளின் உடல்கள் மறு அடக்கம் செய்யப்பட்டன.

இதையும் படியுங்கள்:
உலகம் அழியும்போதெல்லாம் தோன்றிய மர்மப் பெட்டி! - அது என்ன, யார் வைத்தது?
Siam-Burma Death Railway

காஞ்சனாபுரியில் முக்கியமான கல்லறை (Kanchanaburi War Cemetery) இருக்கிறது. இங்கு 6,982 போர்க்கைதிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். சூங் காய் எனும் இடத்தில் மற்றொரு கல்லறை (Chungkai War Cemetery) இருக்கிறது. இதில் 1,750 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். மியான்மாரின் தான்பியுசாயாட் (Thanbyuzayat) எனும் நகரில் 3,617 போர்க்கைதிகளின் கல்லறை இருக்கிறது. இந்த மூன்று கல்லறைகளையும், பொதுநலவாய போர்க் கல்லறைகளின் ஆணையம் (Commonwealth War Graves Commission) பராமரித்து வருகின்றது. அமெரிக்க வீரர்களின் உடல்கள் அமெரிக்காவிற்கே எடுத்துச் செல்லப்பட்டன

குவாய் ஆற்றுப் பாலத்தைப் பற்றி 1957 ஆம் ஆண்டில், ‘Bridge on the River Kwai’ எனும் திரைப்படம் எடுக்கப்பட்டது. இதே தலைப்பில் ஒரு நூலும் எழுதப்பட்டுள்ளது. மலேசிய எழுத்தாளர் சண்முகம் அவர்கள் இந்த மரண ரயில் பாதை அமைத்த ஜப்பானியர்களால் தமிழர்கள் அடைந்த கொடுமைகளை நாவல் வடிவில் ஆவணப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com