யார் இந்த ‘மனுசி?’ அவள் சொல்லப் போவது என்ன? 'நச்' நேர்காணல் – கோபி நயினார்!
‘அறம்’ படம் வெளியான ஐந்தாண்டுகளுக்குப் பின்பு தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை இயக்கி உள்ளார் கோபி நயினார். இப்படத்தின் ட்ரைலர் வெளியான சில மணிநேரங்களில் பல்வேறு மக்களை சென்றடைந்துள்ளது. படத்தின் ட்ரைலரில் விசாரணை, ஜெய் பீம் படங்களின் சாயல் உள்ளதாக பலர் சொல்கிறாரர்கள். இயக்குநர் வெற்றி மாறன் இப்படத்தைத் தயாரித்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிசியாக இருக்கும் கோபி நயினார் நமது கல்கி ஆன் லைன்காக அளித்த இந்த நேர்காணலில் ஜனநாயகம், அரசியல், தேர்தல் என பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்:-
யார் இந்த மனுசி? அம்மாவா? மனைவியா? காதலியா?
மூன்றாவது உலக நாடுகளில் எங்கெல்லாம் ஜனநாயகத்தின் குரல் நசுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் ஒலிக்கும் ஒரு பெண் குரலாக மனுசியை உருவாக்கி இருக்கிறேன்.
நீங்கள் உலக நாடுகள் என்று சொன்னாலும் உங்கள் படத்தின் கதைக்களம் இந்தியாவில்தானே நடக்கிறது. இந்தியாவில் ஜனநாயகம் நசுக்கப்படுகிறதா?
உண்மையான ஜனநாயகம் என்பது இங்கே இல்லை. நம் நாட்டின் ஜனநாயகம் என்பது எப்படி உள்ளது என்பதைப்பற்றி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், மீனவர்கள், சிறுபான்மையினர் இவர்களிடம் கேட்டுப்பாருங்கள் புரியும்.
தேர்தல்கள் ஜனநாயகத்தின் முகம்தானே?
நம் நாட்டுத் தேர்தல் என்பது, இந்தியா ஜனநாயக நாடாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்திய அரசியலமைப்பினால் உருவாக்கப்பட்ட ஒரு ‘Agenda’ மட்டுமே. நம் நாட்டில் அதிகாரத்தைப் பெற விரும்புபவர்கள் ஜனநாயகத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதிகாரத்திற்கு வந்தபிறகு மக்களுக்கு ஜனநாயகத்தைத் தர விரும்புவதில்லை. மக்கள் மீது அதிகார வர்க்கம் சர்வாதிகாரத்தையே ஏவுகிறது.
உங்களை போன்றே சிந்தனை கொண்டவர் வெற்றி மாறன் என்பதால் ‘மனுசி’ படத்தை வெற்றி மாறனை வைத்து தயாரிக்கிறீர்களா?
ஒரு முறை வெற்றி மாறனை சந்தித்தபோது இந்தப் படத்தின் கதையை பல்வேறு தயாரிப்பாளர்களிடம் சொல்லியதைத் தெரிவித்தேன். இந்தப் படத்தின் கதையை மனதில் வாங்கிக்கொண்ட வெற்றி மாறன், சில நாட்கள் கழித்து, என்னை அழைத்து படம் பண்ணலாம் என்றார். நான் கதை சொல்லிய பல தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தை வியாபாரரீதியாக மட்டும்தான் பார்த்தார்கள். வெற்றி மாறன் மட்டும்தான் இதை சமூகத்திற்குத் தேவையான கலை வடிவமாகப் பார்த்தார். வெற்றி மாறன் இல்லை என்றால் இந்த படம் உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை.
ஜாதி, மதம், இனம் இதையெல்லாம் அறிவியல்பூர்வமாக விளக்குகிறேன் என்று ஹீரோயின் சொல்கிறாரே. இதை விளக்க முடியுமா?
காடுகளில் வாழ்ந்து வந்த மனிதன் இயற்கையைப் பார்த்து பயந்தான். அதனால் இயற்கையையே கடவுளாக கற்பித்தான். கடவுளில் இருந்து வந்ததுதான் மதம். இதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முடியாது . அரசும், மனிதனும் மதம் சார்ந்து இயங்க கூடாது. இதை புரிந்துகொள்ள அறிவியலின் துணை தேவை. இதைத்தான் படத்தில் சொல்லியிருக்கிறேன்.
"நீ நல்லா அரசியல் பேசுறீயே கம்யூனிஸ்ட்டா?" என்ற வசனம் வருகிறது. உங்கள் பார்வையில் கம்யூனிஸ்டுகள் மட்டும்தான் சரியான அரசியல் பேசுவார்களா?
உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அவர் களின் உழைப்பின் வழியாகவும், இந்த உழைப்பின் மூலம் கிடைக்கும் லாபத்தின் வழியாகவும் சரியான விஷயங்களை தரும் அறிவியல் தான் கம்யூனிசம்.
கம்யூனிசம் என்பது அரசியல் கட்சியோ தலைவரோ அல்ல. மனிதகுலத்திற்குத் தேவையான அறிவியல் வழி என்பதை சொல்லியிருக்கிறேன்.
ஆண்ட்ரியா உங்கள் படத்தில் வந்தது எப்படி?
இந்த கதைக்கு ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றவர்களை முதலில் அணுகினேன். பல்வேறு காரணங்களால் இவர்களால் நடிக்க முடியவில்லை. பின்புதான் ஆண்ட்ரியா நடிக்க முன்வந்தார். ட்ரைலரில் போலீஸ் ஸ்டேஷனில் ஆண்ட்ரியா உட்காரும் காட்சியைப் பார்த்திருப்பீர்கள். இந்தக் காட்சியில் ஒரு நாளுக்கு மேல் நடிக்க மாட்டார் என்று நினைத்தேன். என் எண்ணத்தைப் பொய்யாக்கி ஒன்பது நாட்கள் நடித்து கொடுத்தார். ஸ்டூல் மேல் உட்காருங்கள். நான் எடிட்டிங்கில் சரி செய்து கொள்கிறேன் என்று சொல்லியும் கேட்காமல் நான் சொன்ன பொசிஷனில் அப்படியே எந்த சப்போர்ட்டும் இல்லாமல் உட்கார்ந்தார் ஆண்ட்ரியா. மிகவும் டெடிகேடட் ஆர்ட்டிஸ்ட்.
நீங்கள் சிறந்த படங்களை தந்தாலும் மக்களிடம் கொண்டு செல்ல நயன்தாரா, ஆண்ட்ரியா என முன்னணி ஹீரோயின்கள்தானே தேவைப்படுகிறார்கள்?
இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். படம் நன்றாக இருந்தால் மக்கள் எப்போதும் ஆதரவு தந்திருக்கிறார்கள்.
'அறம்' படத்தில் அரசு இயந்திரங்களின் அவல நிலையைக் காட்டியிருப்பீர்கள். இந்தப் படத்தின் மையக்கரு என்ன?
நம் நாட்டில் பாராளுமன்றத்தில்கூட அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. இதே அரசியல் கட்சிகள் எளிய மக்கள் செய்யும் போராட்டத்தை அடக்குகின்றன. இந்த நிலை மாற இங்கே ஜனநாயக உரையாடல் தேவை என்பதை சொல்லி உள்ளேன்.
உங்கள் பதில்கள் சமகால அரசியலை எதிர்ப்பதுபோல தெரிகிறதே...?
நான் ஜனநாயகத்திற்கும், அறிவியலுக்கும் எதிரான அனைத்து விஷயங்களையும் எதிர்க்கிறேன். இது சம காலமாக, கடந்த காலமாக, எதிர்காலமாக இருக்கலாம். இதை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும் என்றும் நம்புகிறேன்.