தற்கால தமிழ் சினிமாவின் இயக்குநர் 'நாயகன்' - மணிரத்னம் பிறந்தநாள் ஜூன் 2!

Director Mani Ratnam
Director Mani Ratnam

அது 1980 களின் காலகட்டம். முதல் தலைமுறை பட்டதாரி இளைஞர்கள் தமிழ்நாட்டின் பல குடும்பங்களிலிருந்து வந்துகொண்டிருந்தார்கள். வாசிப்பு பழக்கத்தால் இவர்களது ரசனை நிறையவே மாறி இருந்தது. குறிப்பாக சினிமாவில். பாலுமகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா போன்றவர்களின் படைப்புகள் இந்த இளைஞர்களின் ரசனைக்கு ஓரளவுக்கு தீனி போட்டன . இருப்பினும் கதை சொல்லும் விதத்தில் தொழில்நுட்பத்திலும் வேறு ஏதோ ஒன்றை இந்த இளைஞர்கள் எதிர்பார்த்தார்கள். இந்த இளைஞர்களின் தேவையைப் புரிந்துகொண்டு படங்களைத் தர புயல்போல தமிழ் சினிமாவில் நுழைந்தவர்தான் மணிரத்னம். அன்றைய 1980களின் இளைஞர்கள் முதல் இன்றைய 2 K இளைஞர்கள் வரை விரும்பிப் போற்றும், சினிமா வட்டாரத்தில் மணி சார் என்று அழைக்கப்படும் டைரக்டர் மணிரத்னத்தின் பிறந்தநாள் நாளை ஜூன் 2.

1985 ஆம் ஆண்டு ‘பகல்’ நிலவு என்ற முதல் படத்தை இயக்கினார் மணிரத்னம்.ஹீரோ முரளி, வில்லன் சத்யராஜ் நடித்த இந்தப் படம் ரெகுலர் வணிகப் படத்தைப் போன்றே இருந்தது. மாறுபட்ட திரைக்கதையிலும், இளையராஜா இசையிலும் ‘பகல் நிலவு’ ஓரளவு வெற்றி பெற்றது. தம்பி மணியின் சினிமா ஆர்வத்தைப் புரிந்துகொண்ட GV என்றழைக்கப்பட்ட ஜி. வெங்கடேஷ்வரன் தம்பிக்காக ‘ஜி. வி பிலிம்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.

" சாரே என் காதலி உங்க மனைவியாகலாம், பச்சே உங்க மனைவி என் காதலியாக முடியாது " என்பது போன்ற பத்தாம் பசலிதனமான வசனங்கள் வந்துகொண்டிருந்த சமயத்தில் "எனக்கு டைவர்ஸ் வேணும், நீங்க தொடறது கம்பிளி பூச்சி ஊறுவதுபோல இருக்கு” என மணிரத்னம் இயக்கத்தில் 1986ல் வெளிவந்த ‘மௌனராகம்’ படத்தில் ஹீரோயின் ரேவதி, ஹீரோ மோகனை பார்த்துச் சொன்னது ரசிகர்கள் பலரை வியப்படையச் செய்தது. பழைய காதல் நினைவுகள், விவாகரத்து போன்ற விஷயங்களைப் பேசிய ‘மௌனராகம்’ இன்றும் பலர் விரும்பும் படமாக உள்ளது.

"நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை, நீங்க நல்லவரா, கெட்டவரா" என பாலகுமாரனின் நறுக் வசனங்கள் கொண்ட மணிரத்னம் இயக்கிய ‘நாயகன்’ வெளியான ஆண்டு 1987. ‘காட் பாதர்’

என்ற மேற்கத்திய படச் சாயலில் வெளியான ‘நாயகன்’ உலகளவில் இன்றுவரை சிறந்த படமாகவும், சிறந்த நூறு இந்தியப் படங்களில் ஒன்றாகவும் போற்றப்படுகிறது. கமலின் சினிமா பயணத்தை நாயகனுக்கு முன்; நாயகனுக்கு பின் என இரண்டாகப் பிரிக்கலாம். மணிரத்னம், கமல், இளையராஜா, கலை இயக்குநர் தோட்டா தரணி இந்த நால்வரும் இணைந்து ‘நாயகன்’ என்ற திரைக்காவியத்தைப் படைத்தார்கள் என்று சொல்லலாம்.

kamal haasan mani ratnam
kamal haasan mani ratnam

1988ல் ‘அக்னி நட்சத்திரம்’, 1989ல் ‘இதயத்தை திருடாதே’,1990ல் ‘அஞ்சலி’ என அடுத்தடுத்த ஆண்டுகளில் மாறுபட்ட கதைக்களத்தில் படம் தந்து இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக மாறினார் மணிரத்னம்.

1991ல் மம்முட்டி - ரஜினியை வைத்து ‘தளபதி’ படத்தைத் தந்தார் மணி. நீண்ட இடைவெளிக்குப் பின்பு ரஜினியின் நடிப்புத் திறமையை வெளிக்கொணர்ந்த படம் ‘தளபதி’. ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’, ‘ராக்கம்மா கையை தட்டு’ பாடல்களில் இளையராஜா ஒரு இசை சாம்ராஜ்ஜியத்தையே நடத்தி இருப்பார். இந்த படத்தில் கிடைத்த வசூலின் ஒரு பகுதியைக் கேளிக்கை வரியாக செலுத்த ‘தளபதி’ படத்தின் தயாரிப்பாளர் ஜி. வெங்கடேஷ்வரன் பணத்தை மூட்டை கட்டி கொண்டு வந்து வருமான வரி அலுவலகத்தில் செலுத்தினார்.

எதுவுமே நிரந்தரமில்லை என்பார்கள். இது சினிமா உலகத்திற்குச் சரியாக பொருந்தும். மணி ரத்னம் படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் இசையும் முக்கியக் காரணமாக இருந்தது. இளையராஜாவுக்கும், மணி ரத்னத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்தார்கள்.

மணிரத்னதிற்கு மட்டுமன்றி தமிழ் சினிமாவிற்கும் ஒரு இளம் இசையமைப்பாளர் தேவைப்பட்டார். காலம் இதை ஏ. ஆர் ரஹ்மான் என்றது. மணிரத்னம் 1992ஆம் ஆண்டு ‘ரோஜா’ படத்தில் 'சின்ன சின்ன ஆசை ' பாடலில் ஏ. ஆர். ரஹ்மான் என்ற ஒரு சிறு பொறி காட்டினார். இந்த பொறி தீபாமாக மாறி, இன்று ஒரு இசை ஜுவாலையாக பிரகாசிக்கிறது. ‘ரோஜா’ முதல் விரைவில் வெளிவர இருக்கும் ‘தக் லைப்’ வரை கடந்த 33 ஆண்டுகளாக மணிரத்னம் -ஏ. ஆர். ரஹ்மான் கூட்டணி தொடர்கிறது.

director mani ratnam
director mani ratnam

மும்பை நகரத்தில் நடந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் 1995ஆம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பம்பாய்’ வெளியிடும் முன்பே பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்தது. மகாராஷ்டிராவில் பிரபல அரசியல்வாதி பால் தாக்கரே தன்னை பற்றி இப்படம் தவறாக சித்தரிக்கிறது. எனவே, ‘பம்பாய்’ மராட்டி மண்ணில் வெளியாக விடமாட்டோம் என முட்டுக்கட்டை போட்டார். படத்தின் தயாரிப்பாளர் ஜி. வெங்கடேஷ்வரன் படத்தை பிரத்யேகமாக பால் தாக்ரேவுக்கு திரையிட்டு காட்டி உங்களை பற்றி படத்தில் எதுவும் தவறாக சொல்லவில்லை என்பதை புரிய வைத்து மஹாராஷ்டிராவில் படத்தை திரையிட வைத்தார். தம்பி மணிக்காக அண்ணன் ஜி. வி மேற்கொண்ட இந்த முயற்சி பலரால் அன்று பாராட்டப்பட்டது.

‘பம்பாய்’ படத்தில் சொல்லப்பட்ட கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாத சில பிற்போக்குவாதிகள் மணிரத்னம் வீட்டு முன் வெடிகுண்டு வீசினார்கள். அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் நடக்க வில்லை. இந்த குண்டு வெடிப்பை கண்டித்து ‘பாட்சா’ பட வெற்றி விழாவில் ரஜினி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பார்க்கப்பட்டது.

அண்ணன் ஜி வி அவர்களைப் பிரிந்து தனியாக ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களை இயக்கினார் மணி. ‘ரோஜா’, ‘பம்பாய்’, ‘தில் சே’ என அரசியல் கலந்த படங்கள் தந்துகொண்டிருந்தவர் மீண்டும் காதல் பக்கம் திரும்பினார்.1990களின் இறுதியில் தமிழ் நடுத்தர குடும்பங்களில் காதல் திருமணங்கள் மெல்ல எட்டி பார்த்துக் கொண்டிருந்தது.

இதையும் படியுங்கள்:
பாகுபாட்டுக்கு ஆளாகும் பெண்கள்: நவீன உலகில் சமத்துவம் நிலைக்குமா?
Director Mani Ratnam

காதல் ஒரு சராசரி நடுத்தரக் குடும்பத்தில் நுழைந்தால் ஏற்படும் பிரச்னைகளை இளமை துள்ளலுடன் 'அலைபாயுதே ' படத்தில் சொன்னார் மணி. மாதவன் - ஷாலினி நடிப்பில் 2000மாவது ஆண்டில் வெளியான ‘அலைபாயுதே’ மிகப் பெரிய வெற்றி பெற்றது.

2001 ஆம் ஆண்டுக்கு பின் வெளியான ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘கடல்’, ‘ஆயுத எழுத்து’, ‘இராவணன்’ போன்ற மணிரத்னம் இயக்கிய படங்கள் பெரிய வரவேற்பைப் பெற வில்லை. 2015ஆம் ஆண்டு வெளியான ‘ஓ காதல் கண்மணி’ மட்டும் ஓரளவு வெற்றி பெற்றது.

director mani ratnam
director mani ratnam

காதல், குடும்பம், அரசியல் என பல்வேறு தளங்களில்படம் தந்து கொண்டிருந்த மணி ரத்னம் தமிழ் சினிமா ஜாம்பவான்கள் பலர் உருவாக்க வேண்டும் என நினைத்து கனவாகவே இருந்த கல்கி அவர்களின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, ‘பொன்னியன் செல்வன் -1’, ‘பொன்னியன் செல்வன் -2’ என இரண்டு பாகங்களாக திரைப்படம் எடுத்து இந்திய, உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். மணியின் இந்தக் கனவுக்கு லைக்கா நிறுவனமும் கை கொடுத்தது.

‘நாயகனு’க்கு பின் கமல் -மணி ரத்னம் கூட்டணியில் ‘தக் லைப்’ படம் இந்தாண்டு வெளியாக உள்ளது. இந்தப் படத்தைப் பற்றி தினம் ஒரு அப்டேட் வந்துகொண்டிருக்கிறது.

தற்கால தமிழ் சினிமாவின் இயக்குநர் நாயகனாக வலம் வரும் மணிரத்னம் மீது சிலர் அதிருப்தி கொண்டுள்ளனர். மணி அவர்களுக்கு ஒரு பெரிய அடையாளம் கிடைக்க அண்ணன் ஜி. வி அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. மணிரத்னம் தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய பின்பு அண்ணன் ஜி. வி நிறுவனத்திற்கு படம் இயக்கவில்லை. ஜி. வி வெவ்வேறு டைரக்டர்களை வைத்து படம் இயக்கி தோல்வி கண்டார். இந்தப் படங்களை எடுக்க வாங்கிய கடனை அடைக்க முடியாமல் ஏற்பட்ட மன அழுத்ததால்தான் கடந்த 2003ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும், அச்சமயத்தில் மணிரத்னம் தன் அண்ணனுக்காக ஒரு படம் இயக்கியிருந்தால், இதைத் தவிர்த்திருக்கலாம் என்றும் ஊடகங்களும், சினிமா பிரபலங்களும் இன்றுவரை சொல்லி வருகிறார்கள்.

ஆறு முறை தேசிய விருது பெற்றவர் மணிரத்னம். பல்வேறு விமர்சனங்கள் இவரின் படைப்புகள் மீது வைக்கப் படுகின்றன. இருப்பினும் இந்திய சினிமாவின் பெருமை மிகு, மதிப்பு மிகு அடையாளமாக வலம் வருகிறார் மணிரத்னம். இன்னும் பல்வேறு வெற்றி படைப்புகளைத் தர மணியின் பிறந்தநாளில் வாழ்த்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com