இது நியாயமா? இப்படிப்பட்ட சம்பவம் நடக்கலாமா?

TN Bus
TN BusImg Credit: ABP Live
Published on

பொதுவாக கை கால்கள் நன்றாக இருக்கும் நாமே, ஒரு சில இடங்களில் தடுமாறி விடுகிறோம். குறிப்பாக கால்கள் மரத்து போதல், கைகள் மரத்து போதல் போன்ற நிகழ்வுகளின் போது நம்மால் ஒரு ஸ்டெப் நடக்கவோ, ஏதேனும் பொருட்களை எடுக்கவும் முடியாத நிலை காணப்படுகிறது. அதேபோல இரவு நேரத்தில் மின்தடை ஏற்பட்டால் கண்கள் நன்றாக தெரியும் நமக்கே அவ்வளவு கடினமாக உள்ளது. தற்காலிகமான இதுபோன்ற ஊனங்களையே நம்மால் சமாளிக்க முடியவில்லை. ஆனால் பிறவியிலேயே மாற்றுத் திறனாளிகளாக இருக்கும் நபர்கள் எந்த அளவுக்கு கஷ்டப்படுவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு நாம் பெரிய அளவில் உதவி செய்யத் தேவையில்லை. அவர்களை அவர்கள் போக்கில் விட்டு விட்டாலே போதும். ஆனால் நம்மில் சிலர் இது போன்ற மாற்றுத்திறனாளிகளிடம் தங்களின் வீரத்தை காட்டி பின்னர் அதற்கான தண்டனையை பெற்று வருகின்றனர். இப்படிப்பட்ட சம்பவம்  தான் வேலூர் மாவட்டத்தில்  நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த திப்பசமுத்திரம் பகுதி சேர்ந்தவர் ராமதாஸ். மனைவி விசாலாட்சி. இருவரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். வேலூரில் இருந்து திருப்பத்தூர் டெப்போவைச் சேர்ந்த டிஎன் 23 என் 27 52 என்ற பதிவை கொண்ட அரசு பஸ்ஸில் 16ஆம் தேதி பயணித்து உள்ளனர். பஸ் டிரைவராக செந்தில்குமார் என்பவரும் கண்டக்டராக பிரபு என்பவரும் பணியில் இருந்துள்ளனர். பள்ளிகொண்டா ஸ்டாப் வந்ததும், மாற்றுத் திறனாளி தம்பதியர் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது டிரைவர் செந்தில்குமார் அவர்களைப் பார்த்து எவ்வளவு நேரமாக இறங்குவீர்கள்? என அவமரியாதையாக பேசியதுடன், பஸ்சை திடீரென இயக்கினார். இதில் ராமதாஸ் தட்டு தடுமாறி கீழே இறங்கி விட்டார். ஆனால் விசாலாட்சி பஸ் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்தார். இதனால் அவரின் கால்களில் காயம் ஏற்பட்டது.

Ramadoss and Visalakshi
ராமதாஸ் மற்றும் விசாலாட்சி

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் மற்றும் அந்தப் பகுதியில் இருந்தவர்கள் ஓடிச் சென்று விசாலாட்சியை அமர வைத்தனர். மேலும் அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை தட்டி கேட்டனர். சிலர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

இதன் காரணமாக போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து டிரைவர் செந்தில்குமார், கண்டக்டர் பிரபு ஆகியோரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து துறை வேலூர் மண்டல பொது மேலாளர் கணபதி உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்:
நெல்லையில் ஜாதி தொல்லை குறையுமா? போலீசார் எடுத்த நடவடிக்கை!
TN Bus

இப்படி மாற்றுத்திறனாளி தம்பதிகளை காயம் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட அரசு பஸ் டிரைவர் உடலளவில் நன்றாக இருந்தாலும், மன ரீதியான மாற்று திறனாளி ஆகத்தான் நாம் பார்க்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் மனம் புண்படும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது. அவர்களுக்கு  நம்மை விட ஏதாவது திறமைகள் கூடுதலாக இருக்கும். அதனால் தான் அவர்கள் மாற்றுத்திறன் படைத்தவர்கள் என்பதை குறிப்பிடும் விதமாக மாற்று திறனாளிகள் என அழைக்கப்படுகின்றனர்.  இப்படிப்பட்டவர்களை நோகடிக்கும் மனிதர்களை என்ன செய்து திருத்துவது? அவர்களாகவே திருந்தினால் தான் உண்டு.                       

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com