நெல்லையில் ஜாதி தொல்லை குறையுமா? போலீசார் எடுத்த நடவடிக்கை!

Tirunelveli
Tirunelveli
Published on

தமிழகத்தை பொறுத்த மட்டில் ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு குணாதிசயங்களை கொண்டது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் என்று அழைக்கப்படும் நெல்லை மாவட்டம், எப்போதும் பிரச்சினைக்கு உரியதாகவே கருதப்படும். இங்கே வசித்து வரும் மூன்று சமுதாயங்கள் யார் பெரியவர் என்ற போட்டியில், பல்வேறு கொலைகள் அவ்வப்போது இங்கு நிகழ்வது உண்டு. இதற்கு பழிக்கு பழியாகவும் பல கொலைகள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.  மேலும் இங்குள்ள சில பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தாங்கள் என்ன ஜாதி என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் கைகளில் பச்சை, மஞ்சள், சிவப்பு என பல வர்ணங்களில் கயிறுகளை கட்டிக்கொண்டு பள்ளிக்கு வருவதும் உண்டு.

இவையெல்லாம் சில காலத்திற்கு முன்னர் வரை வெளி உலகத்தின் கவனத்திற்கு வராமல் இருந்தது. அதன் பின்னர் அந்த பள்ளிகளில் வந்த சில நல்லாசிரியர்களின் நடத்தை காரணமாக பள்ளி மாணவர்கள் கைகளில் நிறத்தை குறிப்பிட்டு கயிறுகளை கட்டிக் கொண்டு வரக்கூடாது என சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு நிலைமை போனது. மேலும் சில மாதங்களுக்கு முன்னர் பள்ளி மாணவர் ஒருவர் சக மாணவர்களாலேயே கத்தியால் தாக்கப்பட்டார். இந்த அளவுக்கு பயங்கர உஷ்ணமான பூமி நெல்லை மாவட்டம். இதனாலையே முன்னாள் முதல்வர் கருணாநிதி, 'நெல்லை எனக்கு எப்போதும் தொல்லை' என சிலேடையாக குறிப்பிடுவார்.

நெல்லை மாவட்டத்தில் இருக்கும் மூன்று சமூகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் தங்களின் பெயர்களை பிரபலப்படுத்துவதற்காக, தங்களுக்கு கீழ் உள்ள நபர்களை தூண்டி விடுகின்றனர் என்றும் இதனால் தான் இங்கு அதிக கொலைகளும் பழிவாங்கல்களும் நடந்தேறி வருகின்றன என்றும் கூறப்படுகிறது. இதை தொடக்க காலத்திலேயே போலீசார் நடவடிக்கை எடுத்து காணாமல் போகச் செய்திருக்கலாம். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை; யாருடைய அழுத்தமோ தெரியவில்லை, அவர்களால் முடியவில்லை.

இதையும் படியுங்கள்:
திருப்பத்தூர் மாவட்டம் - சொட்டுநீர் பாசன திட்டத்தில் முறைகேடு... விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கைகள் முன்வைப்பு!
Tirunelveli

இந்நிலையில் இன்று திருநெல்வேலி டவுன் பகுதியில் தனியார் பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர் ஆகியோர் உடனான ஒரு ஆலோசனை கூட்டத்தை போலீசார் நடத்தினர். அதில் பல்வேறு ஆலோசனைகள்  பெறப்பட்டன. இறுதியில் போலீசார், கூட்டத்திற்கு வந்திருந்த தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களிடம், தனியார் பஸ்களை இயக்கும் போது பஸ்ஸில் சாதிய உணர்வுகளை தூண்டும் வகையிலான பாடல்களை ஒளிபரப்ப கூடாது. அப்படி ஒளிபரப்பினால் அந்த டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சில தனியார் பஸ்களில் சாதிய உணர்வுகளை தூண்டும் பாடல்கள் ஒளிபரப்பப்படுவது வழக்கமாக உள்ளது என்பதன் காரணமாகவே இந்த எச்சரிக்கை. இதை கேட்கும் அந்த சாதி மாணவர்கள் பஸ்ஸில் உள்ளே அட்ராசிட்டியில் ஈடுபடுவதும் வழக்கமாக உள்ளது. இதை பார்க்கும் மற்ற ஜாதி மாணவர்கள், இதை கண்டிப்பது மட்டுமல்லாமல் தகராறிலும் இறங்குகின்றனர். இதனால் தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு திருநெல்வேலி போலீசார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

இதனால் நெல்லை மாவட்டத்தில் சாதி சண்டைகள் குறையுமா?   

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com