தீபாவளி சிறப்பு சிறுகதை - நரகாசுரனின் சிரிப்பு!

Diwali Short Story
Family Celebrating Diwal
Published on

வானத்தில் இருந்து ஒரு மழைத்துளி கார்த்திக்கின் கையில் பட, மேலே நிமிர்ந்து பார்த்தான்...மழை பொழியப் போகிறதா என்று.

"அங்கிள் அங்கிள் வெடி வச்சிருகோம் அங்கேயே நில்லுங்க" என்று தெரு சிறுவர்கள் கூச்சல் போட்டு கார்த்திக்கை எச்சரித்தனர்.

"ஆமா, பெரிய அனு குண்டு வச்சிருக்கீங்க" என்று சலித்துக் கொண்டே கார்த்திக் ஆக்சிலேட்டரை திருக, மாட்டு சாணத்திற்குள் வைக்கப்பட்டிருந்த வெடி வெடித்ததில் சில துளிகள் கார்த்திக் பேண்டில் தெறித்தது.

கார்த்திக், தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் வசிக்கிறான். அருகில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறான். கார்த்திக்கின் காதல் மனைவி பிரியா. இவர்களுக்கு தொடக்கப் பள்ளியில் பயிலும் அமுதா, ரவி என்ற பிள்ளைகள் உள்ளனர்.

கார்த்திக் வீட்டின் உள்ளே நுழைந்ததும் "ச்சை, இந்தப் பண்டிகை வந்தாலும் வந்தது. கண்ட கருமத்திலும் வெடிய வச்சி உயிர எடுக்குகிறானுக" என்று சலித்துக் கொண்டான்.

புத்தகத்தோடு சுவற்றில் சாய்ந்து உக்காந்திருந்த ரவி, அக்கா அமுதாவின் காதில் ஏதோ கிசு கிசுத்தான். "அதுக்கெல்லாம், நாம வேற நல்ல குடும்பத்துல பொறக்கனும்டா ரவி" என்று அமுதா அங்கலாய்த்தாள்.

"ஏய் , என்ன பேச்சு இது கழுதை மாதிரி.." என்று கத்தினான் கார்த்திக்.

உடனே உள்ளிருந்து கலைந்த தலையோடு படு உக்கிரமாய் வெளியே வந்தாள் பிரியா. "என் பிள்ளைய எதுக்கியா திட்டுற? அதுகளே பாவம் பச்ச புள்ளைக, அக்கம்பக்கத்து புள்ளைக வெடி வெடிக்கிறதையும் புது துணி வாங்கிருக்கோம்ன்னு காட்டுனதையும் பார்த்து நொந்து போயி இருக்குக. உனக்கு புதுத்துணியும் வெடி வாங்கி குடுக்கவும் வக்கு இல்லைன்னா எதுக்குயா, கல்யாணம் பண்ணிக்கிட்ட?" என்று ஆவேசமாக கத்தினாள். 

"இங்க பாரு பிரியா, பிள்ளைகளுக்கு புதுத்துணி வாங்கி தாரேன். ஆனா தீபாவளிக்கு என்னால் வாங்கி தர முடியாது. வேணும்னா நியூ இயர்க்கு வெடியும் புது டிரசும் எடுத்துத் தாரேன்" என்றான் கார்த்திக் சாந்தமாக..

"நியூ இயருக்கு டிரஸ் எடுப்பாராம், இவரு ஆயியப்பன் வெள்ளக்காரன் பாரு. இன்னும் அடிமைப் புத்தியே அப்படியே வச்சிருக்கான்." பிரியா முனகினாள். 

இடையில் அமுதாவும் ரவியும் ஓடி வந்து பிரியாவை கட்டிக் கொண்டனர் ."அம்மா அம்மா பிளீஸ் மா, சண்டை எதும் போட தம்மா. நாங்க எதும் கேட்க மாட்டோம் மா. அப்பா பிளீஸ் பா நீங்களும் சண்டை போடதிங்க" என்று குழந்தைகள் கெஞ்சினர்.

பிரியா முகத்தை துடைத்துக் கொண்டு அடுப்படிக்கு சென்றாள். அமுதாவும் ரவியும் பிரியாவின் முந்தானையை பிடித்துக் கொண்டே சென்றனர். முகம் கழுவ சென்ற கார்த்திக் திரும்பி வந்து "பிரியா, பிரஸ் வரைக்கும் போயிட்டு வரேன்"  என்று சொல்லி விட்டு பதில் எதுவும் எதிர்பாராமல் கிளம்பினான்.

"என்ன சார், தீபாவளி வந்தா ஜவுளிக் கடைக்கு போவாம நம்ம பிரஸ்க்கு வந்துடுறிங்க" என்றான் டிசைனர் முருகன். 

"ஏலே, ஓரண்ட இழுக்காம ஒழுங்கா வேலய பாருடா" என்று அதட்டினார் பிரஸ் முதலாளி சூரப்பன். 

"சொல்லுங்க சார், வழக்கம் போல நரகாசுரனுக்கு வீர வணக்கம்! அதானே, இருங்க ரெடி பன்னுவோம்" என்றான் முருகன்.

"முருகா இந்த முறை கண்டன்ட், போட்டோ எல்லாம் புதுசா நச்சுன்னு இருக்கனும். நான் எழுதி தரேன். நரகாசுரன் போட்டோ மட்டும் புதுசா எடு." என்றான் கார்த்திக். 

டிசைனிங் வேலைகள் பரபரக்க , நரகாசுரன் சிரிக்கும் புதிய படத்தை எடுத்தான் முருகன். 

"நாளைக்கு காலைல பேனர் கிடைக்குமா?" என்றான் கார்த்திக்.

எங்கயாவது போயிட்டு வாங்க சார். நைட்டுக்கே முடிச்சிடுவேன். பத்துக்கு பத்து 4 காபி தானே! என்று சொல்லி விட்டு வேலையில் கண்ணாக இருந்தான் முருகன். 

கார்த்திக்கிற்கு கொஞ்ச நேரம் ஊரை சுற்றி விட்டு வரலாம் என தோன்றியது. போகும் வழியில் கடைத்தெருவில் கார்த்தி, கார்த்தி என்ற குரல் கேட்டு திரும்பினான். 

பாலகிருஷ்ணன் காருக்குள் இருந்தவாரே கார்த்தியை பார்த்து "உன் வண்டியை பக்கத்துல நிப்பாட்டிட்டு காரில் ஏறுப்பா," என்றார்.

வண்டியை ஓரம் கட்டிவிட்டு கார்த்திக் காரில் ஏறவும், "சார், இங்க கார் நிறுத்தாதீங்க" என்று செக்யூரிட்டி விரட்டி விடவும் சரியாக இருந்தது.

"கார்த்தி ரயிலடி வரைக்கும் போய் டீ குடிச்சிட்டு வருவோமா?" என்றார் பாலகிருஷ்ணன். 

கார்த்திக்கும் "சரிங்க மாவட்டம், இங்க என்ன துணிக் கடை வாசல்ல?  

"ஓ அதுவா, ஆட்டோகாரன் எவனும் வரலப்பா, பொண்டாட்டி துணி எடுக்க கொண்டாந்து விடுன்னு ஒரே டார்ச்சர். அதான் நானே வந்துட்டேன்" என்றார் பாலகிருஷ்ணன். 

"தீபாவளிக்கு துணி எடுக்க போறீயளா? என்ன நாயம் இது? அதுவும் நம்ம போயி? என் பொண்டாட்டி கூட தான் ரகளை அடிச்சா. நான் கண்டுக்கவேல்லையே! நமக்கு கொள்கை தான் முக்கியம். மாவட்டம். உங்க கிட்ட இருந்து நா எதிர்பார்க்கல இத" என்று வருந்தினான் கார்த்தி.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; காதலுக்கு ஜே!
Diwali Short Story

"கார்த்தி.. உன்ன விட அதிக கொள்கை பிடிப்புள்ளவன் நானு. 5 வருஷம் முன்னாடி பக்கத்து வூட்டு புள்ளைக கிட்ட, என் மகன் போயி எனக்கு கொஞ்சம் வெடி கொடுடான்னு கெஞ்சிக் கிட்டு இருந்தான். அத பார்த்து என் பொண்டாட்டி அழுது என் கூட சண்டை போட்டு புள்ளைகளையும் கூட்டிட்டு அப்பா வீட்டுக்கு போயிட்டா. ஊர் உலகமே சந்தோஷமா இருந்த அன்னைக்கு நான் மட்டும் அனாதையா கெடந்தேன். அப்பறம் நான் சமாதானம் பன்னி கூட்டியாந்தாலும் தீபாவளி, பொங்கல் மட்டும் இல்ல, புள்ளைக பொறந்த நாளுக்கு கூட அப்பா வீட்டுக்கு போறத மாமூலாக்கிட்டா. நான் என்ன கெஞ்சினாலும் மசிய மாட்டா. 'உன்ன கட்டினதுக்கு நான் கஷ்டப்படுறதே போதும் என் புள்ள யாரையும் பார்த்து ஏங்கிடக் கூடாதுன்னு' சொல்லுவா. இப்படியே 5, 6 வருசம் போச்சு. புள்ளைக வளர ஆரம்பிச்சதும் நம்மள எதுவும் கேட்கிறதுல. "உன்ட்ட கேட்டா எதுவும் கத சொல்லுவ , நான் தாத்தா கிட்டயே கேட்டுக்கிறேன்னு" சொல்லுதுங்க. என்னய வீட்டில அந்நியனா தான் பார்க்கிறாங்கன்னு புரிஞ்சிக்கிட்டன். போன வருஷம் பொங்கலுக்கே பொண்டாட்டி புள்ளைகள சமாதானம் பன்னி உங்க இஷ்டப்படியே செயறேன்னு சொல்லி இங்கேயே தங்க வச்சேன். நமக்கு உடன்பாடோ? இல்லையோ? அவங்க சந்தோஷத்தை வேடிக்க பார்ப்போம். அவ்வளவு தான்."

"நீங்க சொல்றது சரியில்ல மாவட்டம். நான் ஏத்துக்க மாட்டேன்" என்றான் கார்த்திக். 

"நீ ஒன்னும் ஏத்துக்க வேணாம். அங்க பாரு லெனின் குடும்பத்தோட ஜவுளி எடுத்துட்டு போறதை" என்று காட்டினார் பாலகிருஷ்ணன்.

கார்த்திக் ஒருமுறை ஏறிட்டு பார்த்தான்.

"லெனின் மட்டுமா, நம்ம கட்சி தலைவரே தீபாவளி கொண்டாடிட்டு தான் இருக்காரு. கேட்டா என் பேரக் குழந்தைகளின் மகிழ்ச்சியில் தலையிட மாட்டேன்னு சொல்லுவாரு. சரி எதுவானாலும் என் கடமை... நரகாரசுனுக்கு வீரவணக்கம் வைக்க வந்துடுவேன்" என்று கிளம்பினான் பாலகிருஷ்ணன்.

அன்று இரவு கார்த்திக் வீட்டுக்கு போகும் வழியில், பட்டாசுக் கடையை பார்த்ததும் திடீரென்று வண்டியை நிறுத்தி விட்டு "அண்ணே அந்த பெரிய கம்பி மத்தாப்பு, என்ன விலை?" என்று கேட்டான்.

வண்டி கவரில் இருந்த நரகாசுரன் சிரித்துக் கொண்டிருந்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com