-தமயந்தி
சுட்டு விரல் நீட்டி கேசவன் கேட்டான். மனசு நடுங்க வைக்கும் கேள்வி. நெற்றி ஒருமுறை சுருங்கி பிறகு மடங்கி எழும்பிற்று அவனுக்கு. சங்கரி மனசுக்குள் ஒடிந்தாள். முகத்தை எங்கேயாவது ஒளித்து வைக்கிற மாதிரி கேள்வி. எங்கேயாவது மனசை தொலைத்து விட்டால் பரவாயில்லை என்கிற தினுசில். கடவுளே!
"உனக்கென்னடி காதலைப் பத்தி தெரியும்? மூதேவி! மனசு பத்தித் தெரியுமா உனக்கு?"
பிரச்னை ஒன்றுமில்லை. கேசவனின் தங்கை காதலிக்கிறாள். ரேணுகாவுக்கு அப்படி என்ன வயசிருக்கும்? போன மாசம் ப்ளஸ் டூ சேர்ந்த பெண். ரோட்டில் ஒருவனுக்கு காதல் கடிதம் நீட்டி அவன் கொடுத்த தாளை கையில் வாங்கினதை கண்ணால் பார்த்தபிறகு எப்படி கண்டிக்காமல் இருக்க முடியும்... எப்படி? அவன் நல்லவனா? அப்படியே அவன் நல்லவனாக இருக்கும் பட்சம் இதே கேசவனும் மாமியும் ஒத்துக்கொள்வார்களா? ஒத்துக்கொள்ளவில்லை என்றால் ரேணுகா தமிழ் சினிமா பாதிப்பில் தூக்கில் தொங்கி...
படபடத்தது.
இந்த படபடப்புதான் - இதேதான்... இதா? சங்கரி தனக்குத் தானே கேட்டுக்கொண்டாள். இதா? இதுவும்....அப்படியென்றால் வேறென்ன? சுரேஷ்... அவனும்...
சட்டென்று மனசில் நினைவு மொட்டுவிட்டது. ரேணுகாவைவிட நாலைந்து வயதுகூட இருக்கும். பக்கத்து தெரு சுரேஷ் மனசை ஈர்த்தான். சாதாரண காதலில்லை. அவனையே ஆண்டாள் தினுசில் கணவனாய், காதலனாய், ஸ்நேகிதனாய் உருவமைத்து...
"நடக்குமா சுரேஷ்?"
"எங்க வீட்டு நாய்க்குட்டியா?"
சின்ன 'கடி'களுக்கெல்லாம் பெரிசாய் சிரிப்பு வரும்.
"நம்ம கல்யாணம்."
"உங்கழுத்துல தாலினு ஒண்ணு ஏறிச்சிதுனா அது நான் கட்றதாத்தான் இருக்கும் சங்கரி."
யப்பா... அன்றைக்கு ராத்திரி முழுக்க கனவு.
'நீதானே எந்தன் பொன்வசந்தம்' என்று பாடிக்கொண்டிருந்த டிரான்சிஸ்டரை இழுத்து தலைமாட்டில் வைத்துக்கொண்டாள். சுரேஷ் காதருகே வந்து நிமிண்டினான். முகத்தை லேசாய் முகத்தில் சாய்த்து கண் மூடினான். ஸ்பரிசம் பட்டதும் சிலிர்த்தது. லேசாய் சிரிப்பு வந்தது.
"என்னடி ராத்திரி நேரமும் அதுவுமா சிரிப்பு?"
அம்மா அதட்டினாள்.
''ஒண்ணுமில்லம்மா."
சுரேஷிடம் காலையில் அம்மா கேட்டதை பத்து தடவையாவது சொன்னாள். 'என் மனசெங்கும் நீங்கள்தான்' என்று கடிதம் எழுதிக் கொடுத்தாள். மறக்காமல் கீழே 'சங்கரி சுரேஷ்' என்று கையெழுத்திட்டாள்.
ஆனால் இந்தியா 'மாப்'பைத் தேடின கல்யாணி கடிதத்தை டிராவிலிருந்து எடுப்பாள் என்று நினைக்கவில்லை.
''ம்மா... இத பாரு... சங்கரிக்கா யாருக்கோ லெட்டர் எழுதிருக்கு...' அம்மா கடிதத்தை வாசித்து ரௌத்ரமானாள். அப்பா சுரேஷின் தகப்பனிடம் கத்த, சண்டை முற்றியது. ஊரிலிருந்து மாமன், சித்தப்பன் என்று உறவுகள் அரிவாளோடு களத்தில் இறங்க முதல் முறையாக சங்கரி பயப்பட்டாள். ஒரு உயிர். அதுவும் சுரேஷ் உயிர். கடவுளே, காப்பாற்று.
அவனைக் காப்பாற்றியாக வேண்டும் என்பதற்காகவே அப்பா காட்டிய தெற்றுப்பல் மாப்பிள்ளையை கல்யாணம் செய்ய சம்மதித்தாள். ஆயிரம் மிரட்டல்கள். ஆனால் சங்கரி கேட்டதெல்லாம் ஒன்று. ஒன்று மட்டும்தான்.
"அப்பா... அவர ஒண்ணும் பண்ணிறாதீங்க."
"நான் என்ன பண்ண முடியும்? நீ ஒழுங்கா குடித்தனம் நடத்து. போறும். அதான் என் சந்தோஷம் சங்கரி."
எனக்குச் சந்தோஷம் இல்லையே அப்பா... சங்கரி சொல்ல நினைத்தாள். சொல்லவில்லை. சுரேஷ்... நீ நலமாயிரு. அதுபோதும். கல்யாணம் கட்டி பிள்ளை பெற்று குடும்பம் நடத்தினால்தான் காதலா என்ன? நீ நல்லாயிருக்க வேண்டும் என்று நினைப்பதே காதல்தானே.
மனசு பொத்துக்கொண்டு அழுகை வந்தது.
''சங்கரி..." ஜன்னல் வழியாய் கிசுகிசுப்பாய் குரல் கேட்டது. சங்கரி எட்டிப் பார்த்தாள் . சுரேஷ்.
"எதுக்கு வந்தீங்க சுரேஷ்.. போயிருங்க."
"வா சங்கரி... வெளிய வா."
"வந்தா கொன்னே போட்டுறுவாங்க.. போயிருங்க.''
"கொல்ல மாட்டாங்க. நானிருக்கிற வரைக்கும் கொல்ல விடமாட்டேன் சங்கரி.''
''நடக்காது சுரேஷ்..."
''வா. நேரமாக்காதே."
என்ன தைரியமோ - எங்கிருந்து வந்ததோ சங்கரி வெளியேறினாள். அடுத்த வேளை உடுத்த மாற்றுத் துணியில்லை. ஆனால் தைரியம். அதைவிட காதல். அந்த ராத்திரி நேரம் அடைத்த பிள்ளையார் கோவில் வாசலில் மஞ்சள் கோர்த்த கயிறை சுரேஷ் கட்டும்போது அழுகை வந்தது.
அதற்குள் வீட்டில் பிரளயம் நடந்திருக்கிறது. அரிக்கேன் விளக்கும் டார்ச்சுமாய் ஆள் தேட, சித்தப்பாதான் கோவில் வாசலில் கண்டுபிடித்தார். பார்த்த உடனே அவருக்கு அந்த புது மஞ்சள் கயிறு கண்ணில் தென்படவில்லை. சங்கரியை பலம் கொண்டு இழுத்தார்.
"தொடாதீங்க.. அடுத்தவன் பொண்டாட்டி மேல கைவைக்காதீங்க..." சங்கரி அலறினாள்.
"அடுத்தவன் பொண்டாட்டியா? இனி கேசவன் கட்னாதானடி தாலி."
சொன்னவர் பார்வை கழுத்தில் பட, மஞ்சள் கயிறு மார்பில் தவழ்ந்ததைப் பார்த்தார். "அடப்பாவி மவளே... இதென்ன திருட்டுத் தாலி .. ஏலேய் சண்முகம்... இங்க வா.''
அவர் கத்தின கத்தலில் மறுநிமிஷம் அப்பா கண்முன் நின்றிருந்தார்.
"பாருடா... உன் மக கழுத்தை."
அப்பா கத்துவார் என்று எதிர்பார்த்தாள். கிட்டே வந்து கட்டிய தாலியை அற்றுப் போடுவார் என்று நினைக்கவில்லை. தாலியை அறுத்து சுரேஷ் முகத்தில் எறிந்தார். "எடுத்துட்டுப் போல நாதியத்த நாயே.."
அன்று பார்த்ததுதான். அதற்குப் பிறகு பார்க்கிற சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. வாய்க்கும் வாய்ப்பைக் கொடுக்கவில்லை. சுரேஷ் என்னானான்? தெரியாது. கேசவனோடு கல்யாணமாகி ஊருக்குப் போனபோது பக்கத்து வீட்டு இந்து சுரேஷை மெட்ராஸில் படிக்க வைக்கிறார்கள் என்று சொன்னதோடு சரி. அதற்குப் பிறகு சுழன்ற சுழலில் சுரேஷ் கொஞ்சம் மறந்தும் போனான்.
இன்று கேசவன் கேள்வியை வீசும்வரை...
ராத்திரி அடுக்களை மேடை துடைக்கும்போது ரேணுகா வந்தாள். 'நான் துடைக்கறேண்ணி' என்று வலிய ஸ்பாஞ்சை வாங்கிக்கொண்டாள்.
"கோபமா ரேணுகா... நான் உங்கண்ணன்ட்ட சொல்லிட்டேன்னு."
"அண்ணன் நம்பலை அண்ணி."
''ஜாக்ரதை ரேணுகா... நல்லவனான்னு தெரியணும்..."
"நல்லவர்தாண்ணி..."
"எப்படித் தெரியும்?"
ரேணுகா பதில் பேசத் தெரியாது நிமிர்ந்து பார்த்தாள். சட்டென்று உள்ளே போனாள். படுக்கப் போகும்போது கேசவன் கூப்பிட்டான்.
"ஏதோ ஒரு பையனோட ரோட்ல பேசிட்டானு உடனேயே காதல்னு முத்திரை குத்திடறதா? அவ க்ளாஸ்மேட்டுங்கா."
"பேசலைங்க. லெட்டர் கொடுத்தா.''
"சும்மாரு.. உனக்கென்ன தெரியும்? பொய் சொல்லாதே."
"நான் ஒண்ணும் பொய் சொல்லல. ரேணுதான்..."
"திருப்பித் திருப்பிச் சொல்லாத... காதல்னா என்னன்னு தெரியுமா நாயே உனக்கு? ரோட்ல பேசினா காதலா?"
காதலென்றால் என்னவென்று எனக்குத் தெரியும் கேசவா. முன்னாலேயே தாலி கட்டி அறுத்தவள்தான். உன்னிடமிருந்து மறைக்கப்பட்ட நிஜம் சொல்லவா? மனசின் ஓரத்தில் ஈரம் கசிந்தது. சுரேஷ்... உன்னைக் கல்யாணம் பண்ணியிருந்தால் மனசும் மனசும் கலந்திருந்திருக்கும். இப்போது இது வெறும் உடலும் உடலும் கலந்த கல்யாணம்.
ராத்திரி முழுக்க பொட்டு தூக்கமில்லை. வருஷக்கணக்காய் மறந்திருந்த காதல் கண்முன் விரித்தாடியது. சுரேஷ் அதற்கப்புறம் என்னவானான்? படித்து முடித்து விட்டு என்ன செய்தான்? கல்யாணம் பண்ணியிருப்பானா? யாரை... என்னை மறந்தா? இதென்ன கேள்வி? நான் கல்யாணம் பண்ணவில்லையா? அதனால் சுரேஷை வெறுத்தா போனேன்?
சுரேஷும் நலமாயிருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள் சங்கரி. உனக்கில்லாத பிள்ளை பாக்கியம் அவனுக்காவது இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்.
திடீரென்றுதான் அந்த எண்ணம் மனசில் உதித்தது. நாளைக்கு தூத்துக்குடி போனால் என்ன... சுரேஷ் நன்றாயிருக்கிறானா என்று விசாரித்து... அப்படியே அம்மாவையும் பார்த்து விட்டு வரலாம்.
தூத்துக்குடி போகிறேன் என்றதும் கேசவன் முகம் மாறினான். அம்மா வீட்டுக்குப் போவது அவனுக்குப் பிடிக்காத விஷயம்.
"சாயந்திரம் வந்துடுவேன்."
"சரி."
ரேணுகா முகத்தை திருப்பிக்கொண்டாள். மாமி சட்டென்று சமையலறைக்குள் புகுந்தாள். பஸ்ஸில் ஏறி உட்காரும் வரை அந்த பகைப் பார்வை மனசில் ஊஞ்சலாடியது. எதற்காக இத்தனை காழ்ப்புணர்வு? ஏன்? ரேணுகா வாழ்வு நலமாயிருக்க வேண்டும் என்று நினைப்பது தவறா?
நான் இப்போது சுரேஷை விசாரிக்கப்போவது மட்டும் தவறில்லையா என்ன? தவறா? நியாயமாகப் பார்த்தால் கேசவனோடு வாழ்க்கை நடத்துவதுதான் தவறு. இப்போது என்ன சுரேஷோடு வாழவா போகிறேன்? நலமாயிருக்கிறானா என்று விசாரிக்கக் கூட மறந்ததைக் கேட்க நினைப்பது தவறா என்ன?
மரக்கடைகிட்டே போகும்போது எதிரே வரும் சிறுமியிடம் சுரேஷ் விலாசம் கேட்டால் "எங்கப்பாவா?" என்று சொன்னால் எப்படியிருக்கும்? அதுவும் "என் பெயரும் சங்கரிதான் ஆண்ட்டி" என்று சிரித்தால்...
மனசுக்குள் சிலிர்த்தது மனசு... மனசு... மனசு... கடவுளே! விதியே மனசுதானா? பஸ்ஸிலிருந்து இறங்கி நேரே மரக்கடை தெருவிலிருந்த பெட்டிக் கடையில் பேப்பர் வாங்கினாள்.
"இங்க சுரேஷ்னு ஒருத்தர் மெட்ராஸ்ல படிச்சிட்டிருந்தாரே... அந்த வீடு" பெட்டிக் கடைக்காரரை விசாரித்தாள்.
"அவராம்மா? கல்யாண விஷயமா?"
"கல்யாணமா?"
"இந்தத் தெருல கல்யாணமாகாம இருக்கறது அவர்தான்ம்மா. அதனால ஏகப்பட்ட சம்பந்தக்காரங்க விசாரிச்சு வருவாங்க. அதான் கேட்டேன்."
"கல்யாணமாகலையா?" குரல் உடைந்து வார்த்தை சிதறியது.
"ஆகலம்மா. அந்தத் தம்பி ஏதோ காதல் தோல்விங்குது."
ஏதோ காதல் தோல்வி இல்லை. நான்தான் அது. நான் புருஷன், குடும்பம் என்றிருக்க அவன் இறந்துபோன நினைவுகளுக்குத் தாலி கட்டிக் கொண்டு...
பெட்டிக்கடை கம்பை கைத்தாங்கலாய் பிடித்துக்கொண்டாள். வேறொன்றும் தோன்றவில்லை. அம்மா வீட்டுக்கு போகத் தோன்றவில்லை. எதுவும் தோன்றவில்லை. இத்தனை நாள்... இத்தனை வருஷம் உயிராய் காதலித்த சுரேஷ் எப்படியிருக்கிறான் என்று விசாரித்தாயா நீ? நினைவூட்டின ரேணுவுக்கு நன்றி சொல். அவளுக்கு நல்வழி காட்டு. காத்திருக்கச் சொல். அவசரப்பட்டு உன்னை மாதிரி ஓடிப் போகச் சொல்லாதே. எதிர்த்துப் போராடச் சொல். போராட்டமும் நேசமும் கலந்தது காதல் என்று சொல். எதுவும் அவளுக்குப் பிடிபடவில்லையென்றால் - உன் கதையைச் சொல்.
மனசு கட்டளை இட்டுக்கொண்டிருந்தது!
பின்குறிப்பு:-
கல்கி 18 ஜூன் 1995 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்