ஜெர்மன் பெயர்களில் சாதி உண்டா?

German citizens
German citizens
Published on

பிறப்பின் அடிப்படையில் வந்து கொண்டிருக்கும் சாதியின் மூலத்தை ஆராய்ந்தால், அது அவர்கள் செய்த தொழிலில் போய் முடியும்.

தொழிலின் அடிப்படையில் சாதி தோன்றி, அதன் தொடர்ச்சியாக, தீண்டாமை, உயர்வு தாழ்வு என அடுத்தடுத்து தடைகள் வந்து கொண்டே இருக்கின்றன.

ஜெர்மன் நாட்டைப் பொருத்தவரையில் தொழில் அடிப்படையில் குடும்ப பெயர்கள், புவியியல் சார்ந்த குடும்ப பெயர்கள் என பல வகைகளில் குடும்பப் பெயர்கள் வகுக்கப்பட்டு மக்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

உதாரணமாக schneid என்பது ஜெர்மன் மொழியில் தையற்கலையை குறிக்கும். இந்த தொழில் செய்தவர்களை Schneider என்று கூறுவார்கள். Helge Schneider என்ற இசைத் துறையில் மிகப் பிரபலமானவரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே!

இது மாதிரி மீன்பிடித் தொழில் செய்பவர்களின் பெயர் Fischer என்றும், நெசவுத் தொழில் செய்பவர்களின் பெயர் Weber என்றும் இருக்கும்.

ஜெர்மெனியை பொறுத்தவரையில் ஒருவரை கூப்பிடும் போது நம் தமிழில் மரியாதையாக அழைப்பது மாதிரி முதலில் அவரின் குடும்பப் பெயர் சொல்லி மரியாதையாக தான் அழைக்க வேண்டும். அவர்கள் விரும்பினால், 'நீ என்று அழைக்கலாம்' என்று அனுமதி தந்தால் மட்டுமே அவரின் First name சொல்லி அழைக்க முடியும்.

ஜெர்மெனியில் குடும்பப் பெயரை பின்பற்றும் நடைமுறை அதிகபட்சம் 300 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

பொதுவாக, ஒரே பெயர் கொண்ட இரண்டு நபர்களை வித்தியாசப்படுத்த நாம் அவரது தந்தையின் பெயரை கேட்பது வழக்கம். அதுதான் இந்த குடும்பப் பெயருக்கான அஸ்திவாரம். நாளாக நாளாக அந்த நபரின் பெயரையும் தந்தையின் பெயரையும் சேர்த்து கூப்பிட ஆரம்பித்தனர்.

தொடக்க காலத்தில் ஒவ்வொரு தலைமுறைக்கும் தந்தைவழிப் பெயர்கள் மாறிக்கொண்டே இருந்தது. அதாவது ஒரு நபரின் பெயர் 'தாமஸ் முல்லர்' என்று வைத்துக்கொள்வோம். இதில் தாமஸ் என்பது அவரின் பெயர்; முல்லர் என்பது அவரின் தந்தை பெயர். இந்த தாமசுக்கு பிறந்த குழந்தைக்கு ஸ்டீபன் என்று பெயர் வைத்தால் அந்தக் குழந்தையின் முழுப் பெயர் 'ஸ்டீபன் தாமஸ்' என்று வரும். தற்போது தென்னிந்தியாவில் நாம் பின்பற்றி வரும் நடைமுறைதான். நாம் இனிஷியல் மட்டும் போடுகிறோம், இங்கே தந்தையின் பெயரையும் சேர்த்து குறிப்பிட்டார்கள், அவ்வளவு தான் வித்தியாசம்.

இதிலேயும் ஒரு சிக்கல். ஒரு குறிப்பிட்ட தலைமுறையை மேற்கோள் காட்ட வேண்டுமானால் என்ன பெயர் சொல்லி அழைப்பது என்ற குழப்பம் வந்தது. அதன் தீர்வாகத் தான் பரம்பரை ரீதியாக குடும்ப நபர்களை குறிப்பிடும் பொருட்டு ஒரே குடும்பப் பெயரை பின்பற்றுவோம் என்ற சட்டம் கொண்டுவந்தார்கள். வடக்கு ஜெர்மெனியின் ஷெல்ஸ்விக்-ஹால்ஸ்டீன் பகுதியில், இத்தகைய சட்டங்கள் 1771, 1820 மற்றும் 1822 இல் இயற்றப்பட்டன. உடனடியாக மக்கள் இந்த சட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை, காலப்போக்கில் மெதுவாக தான் அது நிகழ்ந்தது.

ஜெர்மெனியை பொருத்தவரையில் முதன் முதலில் குடும்பப் பெயர்களைப் பின்பற்றத் தொடங்கியவர்கள் பிரபுக்கள் மற்றும் பணக்கார நில உரிமையாளர்கள் தான்.

உடைகளில் புது டிசைன் மற்றும் ஸ்டைலை உருவாக்குகிற இத்தாலியை பிற நாடுகள் பாலோ பண்ணுவது போல, அவர்களைப் பின்பற்றி வணிகர்கள் குடும்பப் பெயர்களை தாங்களும் எடுத்துக்கொள்ள, மெதுவாக நகரத்தவர்களையும் அது ஒட்டிக்கொண்டது. கடைசியாக கிராமப்புற மக்களும் இந்த நடைமுறையை ஏற்றுக்கொண்டனர்.

இன்றைய காலகட்டத்தில் நமக்கு யாராவது போன் செய்தால் எடுத்து உடனே 'ஹலோ' என்போம். ஆனால் ஜெர்மெனியில் நாம் ஒருவருக்கு போன் செய்கிறோம் என்றால் அவர் ஃபோனை எடுத்தவுடன் முதலில் அவரின் குடும்பப் பெயரைத்தான் சொல்லுவார். அதன் மூலம் நாம் சரியான நபருக்குத்தான் போன் செய்திருக்கிறோம் என்று புரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக நான் என்னுடைய அலுவலகத் தோழி சோனியா சைலர்-க்கு போன் செய்கிறேன் என்றால் அவர் போனை எடுத்து சைலர் என்று தான் சொல்லுவார். இதில் சைலர் என்பது அவரின் கணவர் பெயர். அவரின் குழந்தைக்கும் அந்தப் பெயர் தான் குடும்பப் பெயராக வரும்.

நமது ஊரில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் போது அப்பா பெயர் அல்லது தாத்தா பெயரையும் சேர்த்து வைப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதுபோல ஜெர்மெனியிலும் இந்த நடைமுறை உள்ளது.

நான் முதல் பகுதியில் சொன்ன மாதிரி, ஜெர்மெனியில் பொதுவாக ஒருவருக்கு இரண்டு பெயர்கள் இருக்கும். First name & last name. இதில் first name என்பது அந்தக் குழந்தையின் பெயர் Last name என்பது குடும்பப் பெயர். சிலர் தங்களுடைய முன்னோர்களின் பெயரை குழந்தைகளுக்கு வைக்க விரும்பினால் அந்த first name - உடன் முன்னோர்களின் பெயரையும் சேர்த்துக் கொள்வார்கள். அந்த வகையில் அந்த குழந்தைக்கு மூன்று பெயர் வரும்.

இதையும் படியுங்கள்:
'விடாக்கண்டன்' விக்ராந்த் - பரிதவிக்கும் பாகிஸ்தான் - பஹல்காம் சோகம்!
German citizens

உதாரணமாக ஒரு குழந்தையின் பெயர் Michael Thomas Schmidt என்று இருந்தால் மைக்கிள் என்பது அந்த குழந்தையின் பெயர், தாமஸ் என்பது சேர்த்துக் கொண்ட முன்னோரின் பெயர், ஸ்மித் என்பது குடும்பப் பெயர் ஆகும்.

ஏதாவது ஒரு அப்ளிகேஷன் ஃபார்ம் நிரப்ப வேண்டியிருந்தால் இந்த மூன்று பெயர்களைக் கொண்ட நபர், First name என்ற இடத்தில் 'மைக்கேல்-தாமஸ்' என்று எழுதுவார், last name என்ற இடத்தில் ஸ்மித் என்று எழுதுவார்.

தொழிலை அடிப்படையாகக் கொண்ட குடும்பப் பெயர்கள் இன்னும் சிலவற்றை இங்கு தந்திருக்கிறேன். உதாரணமாக விவசாயம் செய்பவர்களை ஜெர்மன் மொழியில் 'Bauer' என்று சொல்வோம்.

காலப்போக்கில், விவசாயம் செய்பவர்களுக்கு இந்த பெயரே அவர்களின் குடும்பப் பெயராகிப் போனது. கீழே சில குடும்பப் பெயர்களையும் அடைப்புக்குறிக்குள் அதற்கான ஆங்கில வார்த்தைகளையும் குறிப்பிட்டுள்ளேன்.

Bauer (farmer)

Becker (baker)

Fleischer or Metzger (butcher)

Klingemann (weapons smith)

Maurer (mason)

Meier (farm administrator)

Muller (miller)

Schmidt (smith)

Schneider (tailor)

Schulze (constable)

Topfer/Toepfer (potter)

Wagner (carter/cartwright)

Weber (weaver)

ஆக மொத்தத்தில் செய்யும் தொழிலை அடிப்படையாக வைத்து தான் இங்கும் குடும்பப் பெயர்கள் உருவாகி இருக்கின்றன. செய்யும் தொழிலோ, பெயரோ முக்கியமல்ல, மனிதம் தான் முக்கியம் என்று உணர்ந்து கொண்டால் மனிதனை மனிதன் மதிக்கும் பக்குவம் தானாகவே வந்துவிடும். அது ஜெர்மனியில் நிறையவே இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
X Æ A-12: இது ஒரு மர்மமான பெயர். யாருடையது? என்ன அர்த்தம்? எதைக் குறிக்கிறது?
German citizens

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com