
இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக இருந்தாலும், பங்காளிச் சண்டைக்கு என்றுமே குறைவு கிடையாது. அதிலும் காஷ்மீரை மையமாகக் கொண்ட பிரச்னைகள் தொடர்கதையாக - அனுமன் வாலாக - நீண்டு கொண்டே போகின்றன!
அரசியல் சாசன விதி 370 ஐ நீக்கிய பிறகு சமயம் பார்த்துத் தற்குறி செயல்களில் அந்நாடு ஈடுபடுவதையும், அச்செயல்கள் நியாயத்திற்குப் புறம்பானவை என்பதையும் உலகே அறியும்! பயங்கரவாதத்தைப் பரப்பும் பயங்கர வாதிகளை ஊக்குவிப்பதையும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதையும் அந்நாடு வழக்கமாகக் கொண்டுள்ளது.
அதன் உச்ச கட்டமாக சமீபத்தில் பைசரன் பள்ளத்தாக்குக்கு அருகில் பஹல்காமில் நடந்த தீவிரத்தாக்குதல் ஒரு கொடூரச் செயல்! அப்பாவிகள் 28 பேர் அநியாயமாக உயிர் இழந்துள்ளார்கள்! பலி எண்ணிக்கை கூடுமென்றும் கூறப்படுகிறது. லஷ்கர் இ டைபா சீப் ஹபீஸ் சாயித் வேலையே இது என்றும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் நமது படைகளின்மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளார்கள்! நமது பொறுமைக்கும் எல்லையுண்டே!
நமது இந்திய நாட்டின் 4வது பெரியதும், நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது பெரும் வானூர்தித்தாங்கிக் கப்பலுமான ஐஎன்எஸ் விக்ராந்த் (INS Vikrant (IAC-1)) இப்பொழுது குஜராத் அருகில் நங்கூரம் பாய்ச்சியுள்ளது. விக்ராந்த் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு 'தைரியமானவர்' என்பதே பொருள்!
'எனக்கு எதிராகப் போரிடுபவர்களை நான் தோற்கடிப்பேன்' என்பதே இதன் குறிக்கோள்! சுமார் 23,000 ரூ கோடி செலவில்,14 ஆண்டுகள் கடின உழைப்பில் உருவான உயர்தரக் கப்பல் இது! இதன் வடிவமைப்பு தொடங்கப்பட்டது 1999 ல்.
2009 பெப்ரவரியில் அடிப்பாகம் உருவானது. 2011 டிசம்பர் 29 ல் மிதக்கவிடப்பட்டு 2013ல் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வடிவமைக்கப்பட்ட இதனை நமது பிரதமர் மோடி அவர்கள் செப்டம்பர் 2, 2022 ல், இந்திய கடற்படைக்கு அர்ப்பணித்தார். 263 மீ நீளமும், 25.6 மீ ஆழமும் கொண்ட அழகிய, ஆபத்தான கப்பல் இது! இதன் தளம் மட்டுமே 2.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது! உந்து சக்தியோ மிக அதிகம் கொண்டது.
2 மில்லியன் மக்கள் வசிக்கும் நகருக்குத் தேவையான சக்தியை வழங்கக் கூடிய 8 ரா..ட்..ச..ச.. ஜெனரேட்டர்களைக் கொண்டு இயங்கும் பெருங்கப்பல் இது! மணிக்கு 52 கி.மீ தூரத்தை அனாயாசமாகக் கடக்கும் ஆற்றல் கொண்டது! 4×ஓடோபிரேடா 76 மி.மீ துப்பாக்கி, நிலவான் ஏவுகணை என்று இமைக்கும் நேரத்தில் அடித்துத் தூள் கிளப்பும் போர்க்கருவிகளைக் கொண்டது.
45,000 டன் எடையுடன் பல காத தூரம் பயணிக்கும் பலம் வாய்ந்தது! 1500 க்கும் மேற்பட்ட வானூர்தி மற்றும் கப்பல் ஊழியர்களுடன் இயங்குவது. 35 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்க வல்லது. இவ்வளவு ஹைடெக்கான இது இப்பொழுது அரபிக்கடலில் பாகிஸ்தான் அருகில் நின்று கொண்டுள்ளது.
நமது நாடு எப்பொழுதுமே போரைத் தேடிப் போவதில்லை! ஆனால் நமது குடிமக்களைக் காக்கும் பெரும் பொறுப்பை உதாசீனம் செய்ததும் இல்லை!
செல்லப் பிள்ளை விக்ராந்த் என்ன செய்கிறான் என்று பார்ப்போம்!
நல்லதே நடக்குமென்று நம்புவோம்! அதற்கெனவே பிரார்த்திப்போம்!