இந்தியர்கள் அதிக நேரம் வேலை செய்கிறார்களா?

work pressure
work pressurehttps://prsay.prsa.org
Published on

தொழில் புரட்சிக்குப் பின்னால், உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 16 மணி நேரம் வேலை என்றிருந்த நிலை, தொழிலாளர் போராட்டத்திற்குப் பிறகு, 1916ம் ஆண்டிற்குப் பிறகு, 8 மணி நேர வேலை என்று மாறியது. காலப்போக்கில், வாரத்திற்கு 40 மணி நேரம் அல்லது 45 மணி நேரம் வேலை என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் மென்பொருள் உருவாக்குபவர்கள் வாரத்தில் எல்லா நாளும் வேலை, நாள் ஒன்றிற்கு பல மணி நேரங்கள் வேலை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

சமீபத்தில், வேலை அழுத்தத்தால், புனே நகரைச் சேர்ந்த அன்னா செபாஸ்டின் என்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம், உற்பத்தித் திறன் என்ற பெயரில், சரியான ஓய்வு இன்றி பணியாளர்கள் மீது வேலை திணிக்கப் படுகிறது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு உலக நாடுகளில், ஒவ்வொரு நாடும் வாரத்திற்கு எத்தனை மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தை வெளியிட்டிருக்கிறது. இந்த புள்ளி விவரத்தின்படி, இந்தியர்கள் வாரத்தில் சராசரியாக 46.7 மணி நேரம் வேலை செய்கிறார்கள். ஆனால், வேலையில் இருப்பவர்களில் 51 சதவிகிதம் பேர், வாரத்தில் 49 மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமான நேரம் வேலை செய்கிறார்கள். வாரத்தில் அதிகமான நேரம் வேலை செய்பவர்களில் முதலிடம் பிடிப்பது, நமது அண்டை நாடான பூடான். அவர்கள் 54.4 மணி நேரம் வேலை செய்கிறார்கள். உழைக்கும் வர்க்கத்தில் 61 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் 49 மணி நேரத்திற்கு மேல் வேலையில் ஈடுபடும் நிலைமை.

ஆசியா கண்டத்தில் உள்ள பல நாடுகளின் நிலைமை, வாரத்திற்கு 46 மணிக்கு மேல் வேலை. சில விவரங்கள் கீழே, அடைப்புக்குறியில், வேலை செய்பவர்களில் வாரம் 49 மணி நேரம் அல்லது அதற்கு அதிகம் வேலையில் ஈடுபடுவர்களின்  சதவிகிதம்:

பாகிஸ்தான் - 46.9 (40%), வங்க தேசம் - 46.9 (47%), இலங்கை - 42.4 (26%), நேபால் - 41 (28%), எமிரேட்ஸ் - 50.9 (39%), கத்தார் - 48 (29%), ஹாங்காங்  - 43 (30%), சைனா - 46.1.

இத்துடன் தொழில் துறையில் முன்னேற்றம் அடைந்த வளர்ந்த நாடுகளின் புள்ளி விவரங்களைப் பார்ப்போம்.

அமெரிக்கா - 38 (13%), கிரேட் பிரிட்டன் - 35.9 (11%), ஆஸ்திரேலியா - 32.3 (12%), கனடா - 32.1 (9%), ஜெர்மனி - 34.2, நியூஸிலாந்த் - 33.0 (15%), பிரான்ஸ் - 35.9 (9%), ரஷ்யா - 39.2 (2%)

இதையும் படியுங்கள்:
சாலையில் அடிபட்டு இறக்கும் விலங்கினங்களைக் காக்கும் வழிகள்!
work pressure

ஆசியா கண்டத்தின் வேலை நேரத்தையும், வளந்த நாடுகளின் வேலை நேரத்தையும் சற்று ஒப்பிட்டுப் பாருங்கள். பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் வேலை நேரம், வாரத்தில் 35 மணிக்கும் குறைவு. அதுவும் 49 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்பவர்கள் 15 சதவிகிதத்திற்கும் குறைவு. ஆனால், ஆசியாவில் பெரும்பாலான நாடுகளில் வேலை நேரம் 46 மணிக்கும் அதிகம். 49 மணிக்கு மேல் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதத்திற்கும் மேலே.

பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா போன்ற ஆசிய நாடுகளில், தங்களுடைய கிளைகளை அமைத்துள்ளார்கள். தங்களுடைய நாட்டில் அதிக வேலை வாங்குவது கடினம். அப்படியே செய்தாலும் அதற்குத் தர வேண்டிய சம்பளமும் அதிகம் என்பதால், இங்குள்ளவர்களை அதிகம் வேலை செய்யும் நிலைக்குத் தள்ளுகிறார்களோ என்று தோன்றுகிறது. இந்தியாவில் அதிக நேரம் உழைக்க வேண்டி இருப்பதால், குடும்பத்தினருடன் கலந்து மகிழ்வதற்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை என்பதும் இந்தியர்கள் அதிகம் அயல் நாடுகளில் வேலை செய்ய விரும்புவதற்கு ஒரு முக்கியமான காரணம்.

கோவிட் தொற்றினால், வீட்டிலிருந்து வேலை என்ற நிலை வந்த பிறகு, பலரும் வாரத்தில் ஏழு நாட்கள் வேலை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இப்போது பல நிறுவனங்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று பணியாளர்களை வலியுறுத்தி வருகிறார்கள். இதனால் மாற்றம் ஏற்பட்டு, வேலையில் இருப்பவர்களின் பணிச் சுமை குறையும் என்று எதிர்பார்ப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com