புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டா? அறிஞர் அண்ணா சொன்னது என்ன தெரியுமா?

Reading Books
Reading Books Image credit - pixabay

ஒரு மொழி புத்தகம் இல்லாமல் நிச்சயம் முழுமை அடைவதில்லை. மொழிகள் பல கற்க புத்தகங்கள் இன்றியமையாதவை. அறியாதவற்றை, அறிந்து கொள்ள நல்வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதில் புத்தகத்திற்கு முக்கிய பங்குண்டு. புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

பல அரிய தகவல்கள் தன்னுள்ளே இருந்தாலும், ஆரவாரம் இல்லாமல் மௌனம் காப்பது புத்தகம் மட்டுமே. புத்தகத்தை அடையாளப்படுத்த தலைப்பு மிகவும் அவசியம். நமக்குத் துணையாக என்றென்றும் புத்தகங்கள் இருப்பது நம் பலத்தைக் கூட்டும். ஒரு புத்தகத்தை நாம் படிக்கையில் ஆர்வத்தோடு உள்கருத்துகளை உணர்ந்து, புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளாமல் படிப்பதில் எந்தவித பயனுமில்லை; நம்முடைய அதோடு பொன்னான நேரமும் வீணாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் நம் முன்னோர்கள் அறம் கூறும் நற்கருத்துகளை ஓலைச்சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதி வைத்தனர். அன்று காலத்தால் அழியாத பல காவியங்கள் படைக்கப்பட்டதற்கு துணை நின்றது ஓலைச்சுவடி. இன்று ஓலைச்சுவடிகளின் இடத்தை நிரப்பியுள்ளன காகிதங்கள்.

பல கண்டுபிடிப்புகள் செயல் வடிவம் பெறுவதுடன், செயல்முறைகளை புத்தகம் வழியே உலகறியச் செய்கின்றனர். கவிஞர்களின் படைப்புகள் வெளியிடப்படுவதும் புத்தக வடிவத்தில் தான். "ஒரு நல்ல புத்தகம் ஒரு நல்ல நண்பனுக்கு சமம்" என்பது முற்றிலும் உண்மையே. புத்தகம் படித்ததால், பலரின் வாழ்க்கை நல்வழியில் சென்றிருக்கிறது என்பது ஆணித்தனமான உண்மை.

புத்தக வாசிப்புப் பழக்கம் அனைவரிடத்திலும் வர வேண்டும். எவ்வளவு வேலை என்றாலும் தினந்தோறும் புத்தகம் படிப்பதற்காக சில மணித்துளிகளை நாம் ஒதுக்க வேண்டும். இப்படி நாம் நேரம் ஒதுக்கி படிப்பதால் நிச்சயம் நம் வாழ்வில் நல்மாற்றங்கள் நிகழும். இதுவரை வாசிப்புப் பழக்கம் இல்லையென்றாலும் பரவாயில்லை இனி சபதம் மேற்கொள்ளுங்கள், தினந்தினம் புத்தகம் படிப்பேன் என்று. பிடித்த புத்தகங்களை வீட்டில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். புத்தக வாசிப்பு போல புத்தக சேமிப்பும் நமக்கு பயனுள்ள ஒன்று. கவலைகளை மறக்க, நாள்தோறும் புத்தகம் படிக்கலாம். புத்தகம் படிக்க படிக்க ஆர்வமும் அதிகரிக்கும்; நமக்குள் உத்வேகமும் பிறக்கும்.

இதையும் படியுங்கள்:
என் வாழ்க்கையை மாற்றிய புத்தகம்! 
Reading Books

தமிழகம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட நூலகங்கள் உள்ளன. போட்டித்தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் நிச்சயம் நூலகத்தைப் பயன்படுத்துவார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களில் சிலர் மட்டுமே நூலகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலை மாறி, அனைத்து மாணவர்களும் நூலகத்தை தவறாது பயன்படுத்த வேண்டும். பாடப்புத்தகங்கள் தவிர, அறிவை வளர்க்கும் வகையில் பல புத்தகங்களை நூலகத்தில் தேடிப் படிக்க முன்வர வேண்டும்.

வாழ்வில் வெற்றிபெற்ற சாதனையாளர்களின், சுயசரிதையை படிக்கும்போது, நமக்குள் நம்பிக்கை பிறக்கும். தற்போதுள்ள காலகட்டத்தில், புத்தகங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதால் கைபேசியில் கூட படிக்கலாம். புத்தகம் படிக்க நேரம் இல்லையென்றாலும், ஆர்வம் இருந்தால் பயண நேரத்தில் இணையத்தின் வழியே படிக்கலாம். சில நல்ல உள்ளங்கள் முடித்திருத்தும் கடைகளில் நூலகத்தை அமைத்து, வாடிக்கையாளர்களின் புத்தக வாசிப்பை மேம்படுத்துகின்றனர். அவ்வபோது நடக்கும் புத்தக திருவிழாக்கள், புத்தகப்பிரியர்களுக்கு கிடைக்கும் ஒரு வரப்பிரசாதம்.

வாழ்வின் இறுதி வரை புத்தக வாசிப்பை மேற்கொள்ளுங்கள். வயதான காலத்தில் புத்தகங்களே உங்களுக்கு சிறந்த நண்பனாகவும், துணையாகவும் இருக்கும். "வாழ்வின் அடிப்படைத் தேவைகள் பட்டியலில், அடுத்து புத்தகசாலைகளுக்கு முன்னுரிமை வழங்குவோம்" என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியை மனதில் நிறுத்தி, புத்தக வாசிப்பை மேம்படுத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com