திரையுலகில் அடியெடுத்து வைக்க எம்.ஜி.ஆர் போராடிக் கொண்டிருந்த காலம், அப்போது திரையுலக ஜாம்பவானாய் இருந்தவர் மன்னார்குடி எம்.ஜி. நடராஜபிள்ளை.
அவர் அப்போது 'தட்சயக்ஞம்' (1938) என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். அப்படத்தில் 'தட்சன்' பாத்திரத்தை அவரே ஏற்று நடித்துக் கொண்டிருந்தார். அதற்கு முன்பு மூன்று நான்கு படங்களில் முக்கியமற்ற சிறு சிறு வேடங்களில்தான் எம்.ஜி.ஆர் நடித்திருந்தார்.
'தட்சயக்ஞம்' படத்தில் வலுவான பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு தேடி, நடராஜபிள்ளையைச் சந்திக்க எம்.ஜி.ஆரும் டைரக்டர் ராஜா சாண்டோவும் மன்னார்குடிக்கு வந்திருந்தனர்.
அத்திரைப்படத்தின் ஒத்திகை உள்ளிக்கோட்டை தியாகி சோமசுந்தரத் தேவருக்குச் சொந்தமான சத்திரத்தில் நடந்தது. ஆனால் சூட்டிங் முழுவதும் சென்னையில்தான் நடந்தது. சோமசுந்தரத் தேவர் சிபாரிசில் எம்.ஜி.ஆருக்கு அப்படத்தில் பரமசிவன் வேடம் கிடைத்தது.
ஒருநாள் சூட்டிங்கில் கைலாயத்தில் பரமசிவனாக எம்.ஜி.ஆர் அமர்ந்திருக்கிறார். தட்சனாக நடராஜபிள்ளை. அந்த கைலாயக் காட்சி, மார்கழி மாதத்தில் கடுமையான பனி பெய்யும் நாளில் எடுக்கப்பட்டது. நடராஜபிள்ளைக்கு ஆஸ்துமா வியாதி உண்டு. பனி ஒத்துக் கொள்ளாமல் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அவரைப் பார்க்க எம்.ஜி.ஆர் மருத்துவமனைக்குப் போயிருந்தார். டாக்டர்கள் நடராஜபிள்ளையிடம் கொஞ்சம் பிராந்தி அருந்தினால் மூச்சுத் திணறல் குறையும் எனக் கூறுகின்றனர். அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
"ஐயா! மருந்தாக பிராந்தியை உட்கொள்ளலாமே, ஏன் அதனை மதுவாக நினைக்கிறீர்கள்?" என்று எம்.ஜி.ஆர் கேட்டிருக்கிறார்.
"ராமச்சந்திரா! மருந்தே ஆனாலும் மதுவென்றால் உட்கொள்ள மாட்டான் இந்த காந்நிய வழியில் வாழும் கதர்ச்சட்டை நடராஜபிள்ளை என்று கூறியதோடு, எம்ஜிஆரின் கையைப் பிடித்துக் கொண்டு, "ராமச்சந்திரா நீயும் உன் வாழ்நாளில் மது அருந்தக்கூடாது, புகை பிடிக்கக் கூடாது. இது என் மேல் ஆணை!" என்று கேட்டுக் கொண்டார்.
அதுதான் கடைசிவரை எம்.ஜி.ஆருக்கு வேத வாக்காயிற்று. இந்த நடராஜபிள்ளையின் பெயர் தான் மன்னார்குடியில் உள்ள தஞ்சாவூர் மெயின் ரோடுக்குப் பின்னாளில் வைக்கப்பட்டது. இன்று 'நடராஜபிள்ளை ரோடு' பலருக்கும் தெரியும்.ஆனால் நடராஜ பிள்ளையைத்தான் எவருக்கும் தெரிந்திருக்காது!