பல நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு வரி என்பது பொதுவான சுமையாக இருக்கும். ஆனால், அந்த வரிப்பணம் மூலம்தான் நமக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற வசதிகள் அரசின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இருந்தும் இன்னொரு புறம் எந்த ஒரு தனிநபரிடமும் வருமான வரி எதுவும் வசூலிக்காமல் செழிப்பாய் இயங்கிக்கொண்டிருக்கும் சில நாடுகளும் இருக்கின்றன. எப்படி இந்த நாடுகள் தங்களுக்குரிய வருவாயை உருவாக்குவதற்கும், தங்கள் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் மாற்று வழிகளைக் கண்டறிந்துள்ளன. வாருங்கள் அதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
தனிநபர்க்கென்று வருமான வரி இல்லாத சில நாடுகள்:
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates) (UAE), பஹாமாஸ் (Bahamas), பெர்முடா (Bermuda), மொனாக்கோ (Monaco), புருனே (Brunei), கத்தார் (Qator), குவைத் (Kuwait), ஓமன் (Oman), வனுவாடு (Vanuatu), செயின்ட் கிட்ஸ் (Saint Kitts) மற்றும் நெவிஸ் (Nevis). இந்த நாடுகள் தனிப்பட்ட வருமான வரிகளை சாராமல் தனித்துவமான பொருளாதார ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
அந்த நாடுகள் பின்பற்றும் பொருளாதார உத்திகள்:
இயற்கை வளங்கள்: மத்திய கிழக்கில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் குவைத் போன்ற நாடுகளில் ஏராளமான எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகள் உள்ளன. இந்த வளங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் அவர்களின் நாட்டின் வளர்ச்சிக்கு கணிசமான வருமானத்தை உருவாக்கி தருகிறது.
சுற்றுலா: பஹாமாஸ், பெர்முடா மற்றும் மொனாக்கோ போன்ற நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. இங்குள்ள சுற்றுலாத்துறையானது ஹோட்டல், உணவு, பொழுதுபோக்கு மூலம் கணிசமான வருவாயை அள்ளித்தருகிறது.
நிதிச் சேவைகள்: கேமன் தீவுகள் மற்றும் பெர்முடா போன்ற நாடுகள் அவற்றின் வலுவான நிதித்துறைகளுக்கு புகழ் பெற்றதாகும். இந்த நாடுகள் வங்கி, காப்பீடு மற்றும் முதலீடு போன்ற சேவைகளுக்கு சாதகமான நிலைமைகளை அதில் ஈடுபவர்களுக்கு வழங்குகின்றன, இதனால் உலகெங்கிலும் உள்ள பல வணிகர்கள் மற்றும் தனிநபர்கள் ஈர்க்கப்பட்டு பல வணிகங்களை மேற்கொள்வதன் மூலம் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்துகின்றன.
ரியல் எஸ்டேட் மற்றும் முதலீடுகள்: மொனாக்கோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற இடங்களில், ரியல் எஸ்டேட் மேம்பாடு மற்றும் முதலீடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இங்குள்ள உயர் சொத்து மதிப்புகள் சூழல் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் உலக பணக்காரர்கள் மற்றும் பெரிய நிறுவனங்களை பெரிதும் ஈர்க்கின்றன, இது ஒரு வகையில் அந்நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கிறது.
பொருளாதார குடியுரிமை திட்டங்கள்: செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் போன்ற சில நாடுகள் முதலீட்டுத் திட்டங்களின் மூலம் குடியுரிமையையும் வழங்குகின்றன. இந்தத் திட்டங்களால் முதலீடு செய்பவர்களுக்கு ஈடாக தனிநபர் குடியுரிமையை இந்த நாடுகள் வழங்குகின்றன, இதன் மூலம் ஒரு நிலையான வருவாய் அவர்களுக்கு வருகிறது.
இப்படி தனிநபர் வருமான வரியை உபயோகிக்காத போதிலும், இந்த நாடுகள் பலரையும் ஈர்க்கக்கூடிய வகையிலான வளர்ச்சியை அடைந்துள்ளன. உதாரணமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்கும் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளால் வணிகம் மற்றும் சுற்றுலாவுக்கான உலகின் பிரபலமான இடமாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளது. இதேபோல், மொனாக்கோ, அதன் ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் உயர்ந்த வாழ்க்கைத் தரத்துடன் கூடிய வசதிகளால், பணக்கார குடியிருப்பாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் தொடர்ந்து ஈர்க்கிறது. இப்படி தங்கள் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு பல நாடுகள் தங்களிடம் இருக்கும் வளங்களையும் வசதிகளையும் தேவைக்கேற்ப வெற்றிகரமாகப் பயன்படுத்துகின்றன. தங்களிடம் இருக்கும் இயற்கை வளங்கள், சுற்றுலா, நிதிச் சேவைகள், ரியல் எஸ்டேட் மற்றும் முதலீட்டுத் திட்டங்களை மூலதனமாக்குவதன் மூலம். தனிநபர் வருமானத்தை சாரா சூழலை உருவாக்கி பிற நாடுகளுக்கும் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கின்றன.