தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் சாலைப் போக்குவரத்தில் பயணிக்கும் பொதுமக்கள் பலரும் 'Zero is Good' என்ற பேனரை நிச்சயமாக பார்த்து இருப்பார்கள். இந்த பேனர் சென்னையில் ஆங்காங்கே வைக்கப்பட்டதற்கு உயிர் காக்கும் உயரிய நோக்கம் தான் காரணம் என்பது உங்களுக்குத் தெரியுமா? வாருங்கள் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் சாலை விபத்துகள் அதிகளவில் ஏற்பட்டு வருவது கவலையளிக்கிறது. கண நேரத் தவறால் இங்கு பல உயிர்கள் பறிபோகின்றன. சென்னை மட்டுமின்றி உலகம் முழுக்க விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம். விபத்துகளை கட்டுப்படுத்த என்ன செய்வது என்று சிந்தித்து சென்னை மாநகரப் போக்குவரத்து துறை 'Zero is Good' என்ற முயற்சியை கையில் எடுத்துள்ளது. இந்த முயற்சியின் மூலம் விபத்துகளை முற்றிலுமாகத் தடுக்க முடியுமா என்றால், நிச்சயமாக பதில் தெரியவில்லை. இருப்பினும் முயற்சிக்கு முழு பங்களிப்பை அளிக்க போக்குவரத்து துறை முடிவெடுத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
பொதுவாக சாலையில் போக்குவரத்து போலீஸாரைக் கண்டாலே பொதுமக்கள் பயப்படுவதும், திட்டுவதுமாகத்தான் இருக்கின்றனர். சாலையில் வாகனம் ஓட்டும் நீங்கள் விதிமுறைகளை பின்பற்றினால் இந்த பயம் தேவையே இருக்காது அல்லவா!
தலைக்கவசம் உயிர்க் கவசம் என்று தெரிந்தும், எத்தனைப் பேர் தலைக்கவசமின்றி வாகனம் ஓட்டுகிறார்கள்? செல்போன் பேசிக் கொண்டு எத்தனைப் பேர் விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள்? போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் எத்தனைப் பேர் விபத்தில் பலியாகின்றனர்? அனைத்து விதிமுறைகளையும் நாம் பின்பற்றினால் நிச்சயமாக நம்மால் விபத்துகளைத் தடுக்க முடியும்.
சென்னையில் ஓடும் பேருந்துகளில் பலவும் அரசுப் பேருந்துகள் தான். ஆகையால் தான் இந்த விழிப்புணர்வை அரசுப் பேருந்துகளான எம்டிசி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடம் இருந்து தொடங்கியுள்ளது சென்னைப் போக்குவரத்து துறை. அடுத்ததாக பள்ளி வாகனங்கள், லாரி ஓட்டுநர்கள், மருத்துவமனைகள், ஐடி ஊழியர்கள், ஆன்லைன் டெலிவரி ஊழியர்கள், மினி பேருந்து சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரிடத்திலும் அடுத்த 20 நாட்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த 20 நாட்களின் முடிவில் ஆகஸ்ட் 26 ஆம் தேதியை சென்னைக்கு விபத்தில்லாத நாளாக கொடுக்க போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ளது.
இதன்படி 'சிக்னல் கம்ப்லையென்ட் டே' அன்று போக்குவரத்து சிக்னலை யாரும் மீறாதபடி நடவடிக்கை எடுக்கப்படும். 'நோ செல்போன் டிரைவிங் டே' அன்று வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசாதபடி நடவடிக்கை எடுக்கப்படும். 'ஹெல்மெட் கம்ப்லையென்ட் டே' அன்று அனைவரும் ஹெல்மெட் போடும்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மூன்று முக்கிய விதிகளை பொதுமக்கள் அனைவரும் பின்பற்றும் படி சென்னைப் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'Zero is Good' விபத்தில்லாத சென்னை மாநகராட்சியை உருவாக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். சென்னை மாநகரின் இந்த உயரிய முயற்சிக்குத் தோள் கொடுப்போம்; விபத்தில்லாத சென்னையை உருவாக்குவோம்.