இன்றைய காலகட்டத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு, உடனடியாக நீதி கிடைக்க தேசிய மகளிர் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தேசிய மகளிர் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் பெண்களுக்கு உதவும் நோக்கில் இலவச சட்ட சேவை மையத்தினை சென்னையில் உள்ள தனது அலுவலகத்திலேயே அமைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் பிற குற்ற சம்பவங்களில் இருந்து பெண்களைப் பாதுகாக்க 1993 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் செயல்பட்டு வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் இருக்கும் கலச மஹால் கட்டிடத்தின் முதல் தளத்தில் இந்த ஆணையம் இயங்கி வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மறுசீரமைக்கப்பட்ட இந்த ஆணையம் ஒரு தலைவர் மற்றும் ஏழு உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது.
பெண்களைப் பாதுகாக்க உதவும் அரசியல் அமைப்புச் சட்டங்கள் மற்றும் பிற சட்டங்கள், பெண்களின் நலனுக்கு எதிராக மாறும் நிலையில் தாமாக முன்வந்தும் அல்லது புகார்களைப் பெற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் விசாரிக்கிறது. மேலும் உரிய நடவடிக்கை எடுக்க தகுந்த அதிகார அமைப்புகளுக்கு பரிந்துரைத்தும் வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் பெண்களிடம் இருந்து 3,388 புகார்களைப் பெற்று, அதற்கு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் சுமார் 439 புகார்களை நேரடியாக விசாரித்து, பெண்களுக்கு உரிய நிவாரணம் அளித்துள்ளது. நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் 2107 மனுக்களைப் பெற்று, அதன் மீது விசாரணை நடத்தி வருகிறது இந்த ஆணையம்.
பெண்களைப் பாதுகாக்க உதவும் சட்டங்கள் இருந்தாலும், அவை நடைமுறையில் உடனடியாக உதவுவதில்லை. ஆகையால் தான் மாநிலத்தில் உள்ள மகளிர் ஆணையங்களைப் பலப்படுத்திட கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தேசிய மகளிர் ஆணையம் பல்வேறு நிதி உதவியை வழங்கி வருகிறது. இந்த நிதி உதவியின் மூலம் மாநிலங்கள் தோறும் படிப்படியாக இலவச சட்ட சேவை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபடியாக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், தேசிய மகளிர் ஆணையத்திடம் இருந்து ரூ.2 இலட்சம் நிதியுதவியைப் பெற்று, ஜூலை 15 ஆம் தேதி இலவச சட்ட சேவை மையத்தை தனது அலுவலகத்திலேயே அமைத்துள்ளது. இம்மையத்திற்குத் தேவையான கணிணி, மேசைகள், குளிர்சாதனப் பெட்டி, மின்விசிறி மற்றும் நாற்காலிகளும் வழங்கப்பட்டுள்ளது.
இம்மையம் மாநில இலவச சட்டப் பணிகள் ஆணைக்குழுவுடன் ஒருங்கிணைந்துள்ளதால், இதன் வாயிலாகவே வழக்குரைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மதியம் 2:00 மணி முதல் 5:00 மணி வரையில் இலவச சட்ட சேவை மையம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களுக்கு நீதி கிடைக்கவும், அவர்களுக்கு எளிதில் உதவி கிடைக்கவும் நீதித் துறை நிர்வாகத்தின் கீழ், நேர்மையான தீர்ப்பைப் பெற்றுத் தரும் ஒற்றைச் சாளர அமைப்பாக இலவச சட்ட சேவை மையம் செயல்படும்.