
வெள்ளையர் ஆட்சியிலிருந்து நம் நாடு சுதந்திரம் பெற்ற நாள் ஆகஸ்ட் 15, 1947.
சுதந்திரமடைந்த அன்றும் அதற்கு முன் தினமும் நம் நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது? சுவையான அந்த நாளின் ஞாபகம் இதோ:
* ஆகஸ்ட் 15 என்பதை நமது சுதந்திர நாளாகத் தேர்ந்தெடுத்தது மெளன்ட் பாட்டன். இதற்கு ஒரு பின்னணி உண்டு. அவரது அதிர்ஷ்ட எண் 15. தவிர இரண்டாம் உலகப்போரில் ஆகஸ்ட் 15, 1945 அன்றுதான் ஜப்பானிய ராணுவம் பிரிட்டன் அணியிடம் சரண் அடைந்திருந்தது. அப்போது நேச நாடுகளின் கமாண்டராக மவுண்ட் பேட்டன் விளங்கினார்.
* என்றாலும் ஆகஸ்ட் 15 என்பது ஒரு முகூர்த்த நாள் இல்லை என்பதால் அன்றைய நள்ளிரவு சுதந்திரம் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டது.
* ஆகஸ்ட் 14 அன்று கராச்சிக்குச் சென்றிருந்தார் மவுண்ட் பேட்டன். காரணம் அன்றுதான் பாகிஸ்தானுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது.
* ஆகஸ்ட் 14 இரவு பதினோரு மணிக்கு உத்தரப் பிரதேச முதல்வரான சுசேதா கிருபாளினி (இந்தியாவின் முதல் பெண் முதல்வர் இவர்தான்) வந்தே மாதரம் பாடலைப் பாடினார்.
* அதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் தலைவர் ராஜேந்திர பிரசாத் தனது உரையைப் படித்தார்.
* அடுத்து பிரதமர் ஜவகர்லால் நேரு மக்களின் கடமைகளை வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் அறிமுகப்படுத்திய மசோதாவை முஸ்லிம் லீக் தலைவரான சௌதாரி காலிக்வாஸமான் என்பவர் வழிமொழிந்தார் (பிற்காலத்தில் அவர் பாகிஸ்தான் சென்றுவிட்டார்).
* 'இன்று நள்ளிரவு உலகம் உறங்கிக் கொண்டிருக்கும்போது, இந்தியா விழித்தெழுகிறது. சுதந்திரம் பெறுகிறது. ஒரு காலகட்டம் நிறைவடையும் அரிய தருணம் இது' என்று தனது உரையில் குறிப்பிட்டார் ஜவஹர்லால் நேரு.
* நள்ளிரவு நெருங்கும்போது டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தன் உரையை ஆற்றினார். அப்போது அவர், இந்தியாவின் தனித்துவமான சாதனை குறித்துப் பெருமையாக பேசினார்.
* சரியாக நள்ளிரவு ஆகும் போது குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் உறுதிமொழியை ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் எடுத்துக் கொண்டார். பிற உறுப்பினர் களும் அவர் கூறியதை திருப்பிக் கூறினர்.
* பாராளுமன்றம் ஒரு மசோதாவை அமல்படுத்தியது. இந்தியா தன்னாட்சி அதிகாரம் பெறுகிறது. அதன் முதல் கவர்னர் ஜெனரலாக மவுண்ட் பேட்டன் விளங்குவார் என்பதுதான் அந்த மசோதா.
* பின்னர் சுதந்திரப் போராட்ட வீரரான ஹன்சா மேத்தா இந்திய தேசியக் கொடியை ராஜேந்திர பிரசாத் கையில் வழங்கினர். இதைத்தொடர்ந்து சுசேதா கிருபாளினி சாரே ஜஹான்சே அச்சா மற்றும் ஜனகன மன ஆகிய பாடல்களைப் பாடினர்.
* ஆகஸ்ட் 15 விடியற்காலையில் செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் நேரு. (செங்கோட்டையில் இந்திய பிரதமர் கொடியேற்றுவது என்ற அந்த பழக்கம் இன்றுவரை தொடர்கிறது). நேருவின் அமைச்சரவை யிலிருந்த 22 அமைச்சர்களும் உறுதிமொழி ஏற்றனர்.
* காந்திஜியின் பெயர் பலமுறை மேற்படி கொண்டாட்டங்களில் உச்சரிக்கப்பட்டது. ஆனால், எந்த அதிகாரப்பூர்வமான நிகழ்வுகளிலும் காந்தி பங்கேற்கவில்லை. ஆகஸ்ட் 15 முழுவதும் அவர் உண்ணாவிரதம் இருந்தார். இந்து, முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி கல்கத்தாவில் பேசினார்.