- பிரபு சங்கர்
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தாயை விடவும், ‘இவன் எந்நோற்றான் கொல்‘ என்று கேட்கும் தந்தையை விடவும், ஒர் ஆசிரியர் கூடுதலாக மகிழ்ச்சியும், பெருமையும் கொள்ளத்தக்கவர். ஏனென்றால் தாய், தந்தையைப் போல ரத்த சம்பந்தம் இல்லாதவரானாலும், தன்னிடம் பாடம் பயிலும் மாணவனின் உயிர் மற்றும் உடலுக்குள் மனிதத்தை வளர்ப்பவர் அவர். அதனால்தான் அவர் மூன்றாம் இடத்தில் - மாதா, பிதா, குரு, தெய்வம் - வைத்துப் போற்றப்படுகிறார். (இப்போது மாத, பிதா, கூகுள் தெய்வம் என்றாகிவிட்டது வேறு விஷயம்!)
இத்தகைய நல் ஆசானுக்கு ஒரு மாணவன் எவ்வாறெல்லாம் மரியாதை செலுத்தலாம்? தான் சிறப்பிக்கப்படும் போதெல்லாம் அவரை நினைத்துக் கொள்வதோடு, ‘அவரால்தான் இந்த உயரத்தில் இருக்கிறேன்‘ என்று வெளிப்படையாக நன்றி சொல்லலாம். கல்விக்கூட சக நண்பர்களை பல்லாண்டுகளுக்குப் பிறகு சந்திக்க நேர்ந்தாலும், அந்த ஆசிரியரைக் குறிப்பிட்டுப் பேசி வார்த்தைகளால் அர்ச்சிக்கலாம், மானசீகமாக வணங்கலாம். அவர் பெயரில் ஏதேனும் நினைவுச் சின்னம் உருவாக்கலாம்.
இந்த மூன்றாவது அம்சமான நினைவுச் சின்னம் என்பது அவருக்கு சிலையாகவோ, நினைவு மண்டபமாகவோ அமைவதற்கு பதில் ஒரு நூலகமாக அமைந்தால்…?
அடுத்தடுத்து பல தலைமுறையினர் அந்த நூலகத்தைப் பயன்படுத்தும்போதும், அதனால் வாழ்வில் மேன்மை பெறும்போதும், இதற்கு மூலகாரணமானவரை ஒவ்வொருவரும் நினைவு கூர்ந்து வியப்பார்களே, இந்த சந்தோஷப் பெருமையைவிட, அந்த ஆசிரியருக்கு வேறென்ன பேறு வேண்டும்!
இந்த வகையில், ‘கல்விப் பொழுதில் இத்தகைய மாணவ மணிகளை உருவாக்கிப் பெரிதுவந்தவர் இவர்‘ என்ற பெருமை கொண்ட ஒரு நல்லாசிரியரை ஒவ்வொருவரும் தம் நினைவில் இருத்தி மகிழ வைக்கிறது, கும்பகோணத்தில் உள்ள கோபாலராவ் பொது நூலகம். காந்தி பூங்கா எதிரில் டவுன் ஹால் சாலையில் அமைந்திருக்கும் இந்த நூலகம் (தொலைபேசி எண். 04352430536), ஆசிரியர் திரு கோபாலராவ் அவர்களுக்கு அவருடைய மாணவர்கள் சமர்ப்பித்திருக்கும் குருதட்சணை!
நூலகத்திற்குள் நுழையுமுன் கோபாலராவ் பற்றி -
மஹாராஷ்டிரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கோபாலராவ் குடும்பம், வணிகம் புரியும் நோக்கத்தோடு கும்பகோணத்துக்குக் குடி மாறியது. 1832ம் ஆண்டு, கணபதி அக்ரஹாரத்தில் உதித்தார் கோபாலராவ். தன் தந்தையார் மற்றும் உறவினரான தேவாஜி ராவ் இருவரின் பயிற்சியில் ஆங்கிலம், சமஸ்கிருத மொழிகளில் விற்பன்னராகத் திகழ்ந்தார். அவருடைய ஆங்கிலப் புலமையைக் கண்டு வியந்த பிரிட்டிஷார், அவரை அப்போதைய மாவட்ட அரசுப் பள்ளியில் ஆசிரியராக நியமித்தார்கள்.
அந்தப் பள்ளி அரசினர் கலைக் கல்லூரியாக ஏற்றம் பெற்றபோது அங்கே அவரை விரிவுரையாளராக பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்தது. அந்த நியமனத்துக்கு மேன்மேலும் மதிப்பளிக்கும் வகையில் கோபாலராவ் ஆங்கிலம், சரித்திரம், கணிதம் மற்றும் தமிழ்ப் பாட மாணவர்களுக்கு மிகச் சிறந்த ஆசானாகத் திகழ்ந்தார். பின்னாளில் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் மாணவர்களிடையே இவர் மாணிக்கமாகப் பிரகாசித்தார். இவர் காலத்தில் அக்கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராக விளங்கியவர், தமிழ்த் தாத்தா உ.வே. சுவாமிநாத அய்யர்!
1832 ஆண்டு பிறந்த கோபாலராவ், நூற்றுக்கணக்கான மாணவ மணிகளை உருவாக்கித் தந்துவிட்டு 1886ம் ஆண்டு இப்பூவுலகை நீத்தார்.
‘இவன் ஆசான் எந்நோற்றான் கொல்‘ என்று பலரும் பாராட்டும்படியாக கோபால ராவின் மாணவர்கள் 1895ம் ஆண்டு ஒரு நூலகத்தை அவர் பெயரிலேயே உருவாக்கி, சிரஞ்ஜீவித்துவ அஞ்சலி செலுத்தினார்கள்.
கோபாலராவ் நூலகம் 128 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான வாசகர்களின் அறிவுப் பசியைத் தணித்து வருகிறது. நூலகத்தைப் பயன்படுத்திக் கொண்டவர்களில் கணிதமேதை ராமானுஜம் குறிப்பிடத் தகுந்தவர். இந்திரா பார்த்தசாரதி முதலான பல எழுத்தாளர்களும் இந்த வாசகசாலை சுகந்தத்தை சுவாசித்து மகிழ்ந்திருக்கிறார்கள். அதோடு தாம் படித்த, தம் சேகரிப்பில் உள்ள நூற்றுக்கணக்கான புத்தகங்களை நூலகத்திற்கு அன்பளிப்பாகவும் அளித்திருக்கிறார்கள்.
சுமார் ஐம்பதாயிரம் புத்தகங்களைக் கொண்டுள்ள கல்விக் கோயில் இது. தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், ஃப்ரெஞ்சு, ஹிந்தி மொழிகள் இப்புத்தகங்களில் தஞ்சமடைந்திருக்கின்றன. அத்தனை புத்தகங்களும் டிஜிட்டல் (பார்கோடு) முறையில் பட்டியலிடப்பட்டுள்ளன. புத்தகத் தலைப்பு, புத்தக ஆசிரியர் என்று கேட்டாலே போதும், கணினித் திரை நொடியில் அந்தப் புத்தகம் சந்தாதாரரால் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறதா அல்லது இருக்கிறது என்றால் எந்த அலமாரியில், எந்த வரிசையில் என்று துல்லியமாகச் சொல்லி விடுகிறது.
இந்த நவீனத் தொழில் நுட்பத்துக்கு மூலகாரணமானவர் நூலகத்தின் தற்போதைய செயலாளர் திரு ஜி. கே. பாலசுப்பிரமணியன். ‘என்னுடைய சக ஊழியர்களின் ஒத்துழைப்போடு கொண்டு வரப்பட்ட திட்டம் இது,‘ என்று மிகவும் அடக்கத்துடனும், பெருந்தன்மையுடனும் சொல்கிறார் ஜி.கே.பி. புத்தகங்கள் மட்டுமன்றி, தினசரிகளும், சஞ்சிகைகளும் சந்தாதாரர்களாகிய வாசகர்களுக்கு அன்றாட தகவல் பசியைத் தீர்த்து வைக்கின்றன.
கல்வித் தெய்வம் கொலுவிருக்கும் இந்த நூலகம் மிகவும் தூய்மையாகவும், ஒழுங்கு நேர்த்தியுடனும் பராமரிக்கப்படுவதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அலமாரிகளில் வைக்கப்பட்டிருக்கும் கச்சிதமான புத்தக வரிசை வாசகர்களைத் தூண்டிலாக இழுக்கிறது. அலமாரியின் எந்தத் தட்டிலும் நூல்களின் ஒழுங்கீன குவியல் கிடையவே கிடையாது. செய்தித்தாள்/சஞ்சிகை பகுதியிலும் அதே ஒழுங்கு கடைபிடிக்கப்படுகிறது. வாசகர்கள் தாம் படித்து முடித்த பிறகு செய்தித் தாளை அதன் தன்மை மாறாமல் மடித்து வைப்பதால், அடுத்துப் படிக்க வருபவர், தான்தான் அதை முதலில் படிப்பவர் என்ற எண்ணம் வருமாறு, புதுக்கருக்கு கலையாமல் விளங்குகிறது!
ஜி. கே. மூப்பனார் போன்ற அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமுதாய நலன் விழையும் ஆர்வலர்களுடன் நூலகத்தின் நூற்றாண்டு விழா (1995) சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது.
நூலகத்துக்கு வார விடுமுறை, புதன் கிழமை. பிற நாட்களில் காலை 9.30 முதல் மதியம் 1, மாலை 4.30 முதல் 8 மணிவரை இயங்குகிறது. மூத்த வாசகர்களின் அவசரத் தேவைக்காக சுகாதார அறையும் பராமரிக்கப்படுகிறது.
இந்த நூலகத்தின் சகோதரியாக ‘ஜனரஞ்சனி சங்கீதாலயா‘ என்ற கலைக்கூடமும் 43 ஆண்டுகளாக செயல்படுகிறது. குறைந்த கட்டணத்தில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம் மற்றும் பரதநாட்டியக் கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்தக் கலைக்கோயிலின் வருடாந்திர உற்சவத்திற்கு சுதா ரகுநாதன், சஞ்சய் சுப்பிரமணியன், வேளுக்குடி கிருஷ்ணன் போன்ற பிரபலங்கள் வந்திருந்து ஆராதனை செய்திருக்கிறார்கள்.
இயலும், இசையும் ஒருங்கே பரிமளிக்கும் ஜீவ சுவாசமாகத் துலங்குகிறது கோபாலராவ் நூலகம்.