
சுதந்திர இந்தியாவில் ஒரே ஒரு வாக்காளருக்கு மட்டும்தான் அவரின் இறுதி சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டது. வேறு எந்த ஒரு வாக்களிக்கும் வாக்காளருக்கும் கிடைக்காத பெருமை அவருக்கு மட்டுமே கிடைத்தது. அவர்தான் இமாச்சலப் பிரதேசம் கல்பா பகுதியை சேர்ந்த ஷியாம் சரண் நேகி . அவருக்கு ஏன் அந்த மரியாதை?
பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவின் முதல் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 1952, ஜனவரி - பிப்ரவரியில் நடைபெற்றது. எனினும், அந்த சமயத்தில் ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டத்தில் கடும் மழையும், பனிப்பொழிவும் இருக்கும் என கருதப்பட்டதால் அங்கு முன்கூட்டியே, அதாவது 1951, அக்டோபர் 25ம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அன்றைய தினம் நடத்தப்பட்ட வாக்குப்பதிவில், கின்னோர் மாவட்டத்தின் கல்பா கிராமத்தைச் சேர்ந்த ஷியாம் சரண் நேகி முதல் வாக்காளராகச் சென்று வாக்களித்து தனது ஜனநாயக் கடமையை ஆற்றினார். இதன்மூலம், சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
அது முதல், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் என ஒவ்வொரு தேர்தலிலும் ஷியாம் சரண் நேகி தவறாமல் வாக்களித்து வந்தார். அவர் மட்டும் அல்ல நேகியின் மனைவி ஹிரா மணியும் கடைசி வரை தவறாமல் வாக்களித்து வந்தார். அரசியல்வாதிகள் மீது நேகிக்கும் சில வருத்தங்கள் இருந்தபோதும் "வாக்களிப்பது என் கடமை " என்று கடைசி வரை தவறாமல் தேர்தல்களில் வாக்களித்து வந்தார்.
இமாசலபிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் உள்ள கல்பாவில் ஜூலை 1917 இல் பிறந்த பள்ளிக்சக்கூட ஆசிரியரான நேகி, 1951 ல் நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் தன் 34 வயதில் முதன் முதலாக வாக்களித்தார் 17 வது முறையாக 2019 ம் ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தலில் இவர் வாக்களித்தார். அப்பொழுது அவரின் வயது 102. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்துள்ளார். நூறு வயதை கடந்த இவர், தனது இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தலில், தான் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு வாக்களித்தார்.
2022:ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி, ஷியாம் சரண் நேகி முதல்முறையாக தனது உடல் நிலை சரியில்லாத நிலையில் தனது வாக்கினை தபால் வாக்காக செலுத்தினார். இது அவர் வாக்களித்த 34வது பேரவைத் தேர்தல் வாக்காகும். அன்றைய தினம், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அனைவரும் அவரது வீட்டிற்கு வந்திருந்தனர். ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னோரி ட்ரம் இசை இசைக்க, மாநிலத்தின் தனித்துவமான தொப்பியை அணிந்து கொண்டு ஷியாம் சரண் நேகி வாக்களித்தார். இதையடுத்து அவரது விரலில் மை தடவப்பட்டது. வாக்களித்ததற்கான அந்த அடையாளத்தைக் காட்டியவாறு அவர் புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகி இமாச்சலப் பிரதேசம் கல்பாவில் 2022 ம் ஆண்டு நவம்பர் 5 அன்று தனது 106 வது வயதில் காலாமானார். அப்போது அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
2010 ஆம் ஆண்டில், அப்போதைய இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா, தேர்தல் ஆணையத்தின் வைர விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேகியின் கிராமத்திற்கு அவரைக் கௌரவிக்கச் சென்று அவரை வணங்கி அவரிடம் ஆசி பெற்றார்.
அவர் 2014 ஆம் ஆண்டு முதல் மாநிலத் தேர்தல் அம்பாசிடராக இருந்தார். தொழிலில் ஆசிரியரான இவர், 1951 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்துள்ளார், வாக்களிப்பதற்கான வாய்ப்பை தவறவிட்டதில்லை.
2014 ஆம் ஆண்டில், கூகுள் இந்தியா தேர்தல் விழிப்புணர்வு டாகுமெண்டரி எடுத்து வெளியிட்டது , அதில் நேகி சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் பங்கேற்பதைப் பற்றி கூறினார், மேலும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை பார்வையாளர்களுக்கு நினைவூட்டினார். வாக்களிப்பில் அவசியத்தை வலியுறுத்தி "சனம் ரே" என்ற இந்திப் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
"ஷியாம் சரன் நேகி சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் மட்டுமல்ல, ஜனநாயகத்தில் விதிவிலக்கான நம்பிக்கை கொண்ட மனிதர்" என்று தேர்தல் ஆணையம் கூறியது. "நாட்டிற்கு அவர் செய்த சேவைக்கு நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்."என்று அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. இந்த பெருமை வேறு எந்த இந்திய வாக்காளருக்கும் கிடைக்காத பெருமை.