அலெக்சாவின் ஆதிக்கம்..!

Dominance of Alexa
Dominance of Alexa
Published on

கிராமத்திலிருந்து வந்திருந்த பெரியப்பா, பெரியம்மாவிற்கு ஆச்சரியம், காலையில் 6 மணிக்கு எம் எஸ் குரலில் வெங்கடேச சுப்ரபாதம் ஒலித்தது, எங்கேயிருந்து என்று தான் தெரிவில்லை.

இருவரும் மனம் மகிழ கேட்டனர், சுட சுட காபி தொண்டையில் இறங்க. சிறிது நேரத்தில் அங்கு வந்த அந்த வீட்டு சுட்டிப் பையன்,

"அலெக்சா, டிவியை ஆன் செய்..!" என்று ஆங்கிலத்தில் கூற, எதிரில் இருந்த டிவி உயிர் பெற்று எழுந்துக் கார்ட்டூன் படம் காண்பித்தது. கிச்சனில் இருந்து குரல் வந்தது. "அலெக்சா, ரெட்ய்யூஸ், டிவி வால்யூம் அண்ட் சுவிட்ச் ஆஃப்..!" கட்டளைக்கு ஏற்ப செயல்பட்டது அலெக்சா! மம்மி என்று உள்ளே ஓடினான், பையன். இருவருக்கும் திகைப்பு. அது என்ன அல்லாவூதின் பூதம் போல இருக்கே, கண்ணுக்குத் தென்படவில்லையே என்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். திடீரென்று குரல் ஒலித்தது. அந்த பையனின் பெயரை சொல்லி, ஸ்கூல் போக தயார் ஆகும்படி. ஒரு வழியாக பையனை ஸ்கூல் பஸ்ஸில் அனுப்பினாள், அவள்.

அலெக்சா தயவில் இருவரும் அவர்களுக்கு பிடித்த பாட்டுகள் கேட்டனர். அவள் இட்ட கட்டளைகளுக்கு அலெக்சா அடி பணிந்தது.

அலெக்சா அந்த படப்பாடல் வை என்று ஆங்கிலத்தில் விவரம் கூறிய உடன் அந்த குறிப்பிட்ட பாட்டு ஒலிக்க ஆரம்பித்தது. பெரியம்மாவிற்கு ஆவலை அடக்க முடியாமல், "யார் இந்த அலெக்சா, கண்ணில் படவே மாட்டேன் என்கிறாளே, நாங்க பார்க்க கூடாதா?" என்றார். அதற்கு அவள், சிரித்துக்கொண்டே, "மேலே பாருங்கள், அங்கே...!" என்றாள். அங்கே பார்த்த அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த இடத்தில் வாட்டர் பாட்டில் மாதிரி ஒன்று சிமெண்ட் கலரில் இருந்தது. அங்கே யாரையும் காணோமே?" “அதுதான் அலெக்சா. அங்கே பாருங்கள்” என்று கூறி, அந்த நவீன கருவியை பற்றி இவர்களுக்கு புரிகிறமாதிரி எளிமையாக விளக்கினாள்.

இருவருக்கும் ஒரே ஆச்சர்யம். உடனடியாக பிடித்துவிட்டது, அவளை. அதாங்க அலெக்சாவை.

இதையும் படியுங்கள்:
மனித ரோபோக்களை அடுத்த ஆண்டு களமிறக்கும் எலான் மஸ்க்!
Dominance of Alexa

சிறிது நேரத்தில், அலெக்சா அன்றைய நிகழ்ச்சி நிரல் பற்றி ஒப்பித்தாள். பிறகு டிவியில் குறிப்பிட்ட சீரியல் வைத்தாள். அந்த சீரியலை தினமும் தவறாமல் பார்க்கும் பெரியப்பா, பெரியம்மாவிற்கு டபுள் மகிழ்ச்சி. சீரியல் மிஸ் செய்யாமல் பார்த்தனர். அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது, அலெக்சா குரல் கொடுத்தாள் ஆங்கிலத்தில், ‘இட் இஸ் டைம் பார் லஞ்ச்’ என்று.

சாப்பிட்டு விட்டு டிவி பார்த்துக்கொண்டு இருந்தனர். அந்த சுட்டிப் பையன் பள்ளியில் இருந்து திரும்பிவிட்டான். திடீரென்று அலெக்சா ஆங்கிலத்தில் ஏதோ கூற ஆரம்பித்தாள். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த சுட்டிப் பையன் அலெக்சா ஏன் அப்படி கூறினாள் என்று விளக்கினான். டிவி விளம்பரத்தில் வரும் அலெக்சாவிடம் கேள்வி கேட்டதற்கு, நம்வீட்டு அலெக்சா பதில் கூறுகிறது என்று. அப்புறம்தான் புரிந்தது அலெக்சா என்று குரல் கொடுத்தா போதும், இந்த அலெக்சா பேச ஆரம்பித்துவிடும்; சுறுசுறுப்பா, தன் வேலையை கச்சிதமாக செய்து முடிக்கும் என்று! அதுவும், எதிர் கேள்விகள் ஏதும் கேட்காமல் செய்து முடிக்கும் என்று! அலெக்சா இருவரையும் கவர்ந்ததில் ஆச்சரியம் இல்லை.

அலெக்சாவின் அசத்தலான சேவையில் பயனை அனுபவித்து பழகியவர்களுக்கு, அது இல்லாமல் போனால், வாழ்க்கையில் எதையோ இழந்த மாதிரி ஆகிவிடுகிறது. இன்றைய நவ நாகரீக சொகுசு வாழ்வு வாழ்பவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.

கிராமத்தின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய அவர்களுக்குப் புரிந்தது, அலெக்சாவின் ஆதிக்கத்தினால் எவ்வளவு இழக்கிறோம் என்று.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com