‘கனவு நகரம் காஞ்சிபுரம்’ இப்போது நம் கைகளில்!

நூல் விமர்சனம்
‘கனவு நகரம் காஞ்சிபுரம்’  இப்போது நம் கைகளில்!

‘புஷ்பேஷு ஜாதி, புருஷேஷு விஷ்ணு, நாரிஷு ரம்பா, நகரேஷு காஞ்சி!’ நகரங்களில் காஞ்சிக்குதான் சிறப்பிடம். இந்த நகரத்தின் தொன்மையான மற்றும் பிரபலமான விஷயங்களையும் நமக்கு நினைவூட்டுவதோடு, காஞ்சி பற்றிய அரிதான, தெரியாத விஷயங்களையும் தொகுத்து நூலாக எழுதியிருக்கிறார் திரு  அக்களூர் ரவி.

தொலைத் தொடர்புத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றிய ரவி, 20 ஆங்கில நூல்களை, நூலின் கருத்து சிதையாமல், அக்கறையோடு சுவையாக தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். இதில் பராக் ஒபாமாவின் ‘என் கதை’, இந்தியா என்கிற கருத்தாக்கம், அரசியல் சிந்தனையாளர் புத்தர், முத்துலக்ஷ்மி ரெட்டி போன்றவை அடக்கம். திசையெட்டும் மொழிபெயர்ப்பு விருது பெற்றவர். ‘கனவு நகரம் காஞ்சிபுரம்’ அவரே எழுதிய முதல் நூல். இதனை சந்தியா பதிகப்பகம் வெளியிட்டுள்ளது.

“ஒரு குழந்தை தன் பார்வையில் பட்ட பொருட்களையெல்லாம் இது, அது என்று பொறுக்கி மடியில் சேர்த்துக்கொள்வதுபோல், முடிந்த அளவு சேகரித்து, தொகுத்து இந்த நூலில் பதிவு செய்துள்ளேன்” என்கிறார் நூலாசிரியர் ரவி. “இந்த நூலின் நோக்கம், காஞ்சி பற்றிய பரவலான அறிமுகம் என்பது மட்டுமே” என்று தொடர்ந்தார். அறிமுகமா? அதற்கே இவ்வளவு விஷயங்களா என்று படிக்க படிக்க வியக்க வைக்கிறது.

காஞ்சியின் கலைச் செல்வங்களில் தொடங்கி அரிதான சித்திரகுப்தன் கோயில், ஞானப்பிரகாசர் மடம், காஞ்சிபுரம் இட்லி, 175 ஆண்டுகளாக இருக்கும் ஆண்டர்ஸன் பள்ளி, ஹஸரத் ஹமீத் அவுலியா தர்கா, மகா வித்வான் நாயனா பிள்ளை, லட்சுமிபதி அய்யர் கடை சுண்டல் வரை, படிக்க மிக சுவாரஸ்யமான பலவற்றை அருமையான நடையில் பகிர்ந்திருக்கிறார்.

அதெல்லாம் விடுங்க… பெண்களுக்கு காமாக்ஷியைத் தவிர பிடித்த மற்றொரு அம்சம் பட்டுப் புடவை. இந்த நூலில், நெசவு பற்றி இல்லாமலா? வாழ்வாதாரம் தேடி காஞ்சி சென்றால், தறி நெசவில் ஈடுபட்டு பிழைத்துக் கொள்ளலாம் என்பதைக் குறிக்கும் வகையில் ‘காஞ்சிக்கு சென்றால் காலாட்டிப் பிழைக்கலாம்’ என்பது வழக்கமாயிற்று.

சிறந்த நெசவாளருக்கான தேசிய விருதை 2018ல் பெற்றிருப்பவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு. கிருஷ்ணமூர்த்தி. திரு ரவி இந்த நூல் எழுதுகையில், அவரோடு தொடர்புகொள்ள முயன்றபோது, ஜெய்ப்பூர் வீவர்ஸ் சென்டரில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தாராம். மூன்று நான்கு தலைமுறைகளாக இவர்கள் நெசவுத் துறையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கோயில் காஞ்சிபுரம் இட்லி என்று கோயில் பிரசாதம் பற்றி எழுதத் தொடங்கியவர், ஒவ்வொரு கோயிலின் பிரசாதம் பற்றியும் விவரிகிறார்.

டாக்டர் பட்டுக்கோட்டை சீனிவாசன் அவர்களைப் பற்றி சொல்கையில், ஐம்பது ஆண்டுகளுக்கு முன் காஞ்சிபுரத்தில் மகப்பேறு மருத்துவராக இருந்து, பிரவசம் என்பது புனர்ஜென்மம் என்று நம்பிய காலத்தில், காஞ்சிபுரத்தின் மக்களுக்குப் பிடித்த மருத்துவராக, கூப்பிட்ட குரலுக்கு ஓடியவர் என்றும், அவர் காஞ்சியிலிருந்து பெரும்புதூர் வரை கிராமங்களுக்குச் சென்று மருத்துவம் செய்திருக்கிறார் என்றும் சொற்பமான கட்டணம்  வாங்கிக்கொண்டு, ஒரு நாளைக்கு 300 நோயாளிகள்வரை பார்ப்பார் என்றும் அவர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராய் இருந்ததால், இடையில் சென்னைக்கு அடிக்கடி செல்ல வேண்டியிருக்கும். அதையும் மீறி இந்த சேவைகளை அவர் செய்து வந்தார் என்றும் தன் புத்தகத்தில் சுவாரஸ்யமாக விவரிக்கிறார் ரவி. மேலும்,

19 வயதில் கணவனை இழந்த தன் தங்கையை, (சடங்குகளை எதிர்த்து) தன் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார் சீனிவாசன். இந்தத் தங்கையின் மகன் ஈஸ்வரன்தான். பின்னாளில் டி.கே. பட்டம்மாள் அவர்களை மணந்துகொண்டார். பட்டம்மாள் இசைக்லைஞரானதில் டாக்டர் சீனிவாசனுக்கு பெரும்பங்கு இருந்திருக்கிறது. டாக்டர் சீனிவாசன் இறந்தபோது காஞ்சிபுரமே திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியதாம்.

இதையும் படியுங்கள்:
நவராத்திரியில் எந்த மாதிரி கோலங்கள் போட வேண்டும்?
‘கனவு நகரம் காஞ்சிபுரம்’  இப்போது நம் கைகளில்!

இப்படி இந்த நூலில், தலைமுறை தலைமுறையாக காஞ்சியால் பெருமை அடைந்தவர்களையும், காஞ்சிக்குப் பெருமை சேர்த்தவர்களையும் காஞ்சியின் தொன்மையும், சிறப்பும் தரும் ஆலயங்களும் சிற்பங்களும் பற்றியும் தன் நூலில் வர்ணித்திருக்கிறார்.

எங்கெல்லாமோ பயணம் செய்து பல ஊர்களைப் பார்த்திருப்போம். நம்ம ஊரான காஞ்சியைப் பற்றிப் படிக்கையில், அடுத்து நான் படித்த அத்தனை விஷயங்களையும் நேரிடையாகப் பார்த்து உணரும் வாய்ப்பைத் தேடுகிறேன். தெளிவான, அழகான நூலை எழுதிய ரவி அவர்கள் இன்னும் இதுபோன்ற நூல்களை நமக்குப் பொக்கிஷமாக்க வாழ்த்துக்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com