உயிரைக் காப்பாற்றும் ஓட்டுநர்கள்!

Drivers
Drivers
Published on

ஒவ்வோரு வேலைக்கும் தனித்துவமான சிறப்புகள் இருக்கும். ஓட்டுநர் வேலையும் உயிரைக் காக்கும் தனிச் சிறப்பைக் கொண்ட வேலை தான். இப்பதிவில் ஓட்டுநர்களைப் பற்றித் தான் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

நமது வாழ்வில் பயணம் என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. கல்வி, வேலை, மருத்துவத் தேவைகள் உள்பட அனைத்திற்கும் பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் உதவி வருகின்றன. இதில் நம்மை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சேர்க்கும் பெருமை என்றும் ஓட்டுநர்களையேச் சேரும்.

ஒன்றல்ல இரண்டல்ல கோடிக்கணக்கான மக்களின் பயணப் பாதுகாப்பை உறுதி செய்பவர்கள் ஓட்டுநர்கள். அவ்வகையில், எந்தச் சூழலிலும் பயணிகளை ஓட்டுநர்கள் கைவிடுவதில்லை. அதிலும் வெயில் காலங்களில் ஓட்டுநர்களின் நிலை மிகவும் மோசமாகவே இருக்கும். கொளுத்தும் வெயில் ஒருபுறம் வாட்டி வதைக்க, என்ஜின் சூடு மறுபுறம் வதைக்கும்.

தன்னை நம்பி இத்தனை பேர் பயணிக்கிறார்கள் என்றால், அவர்களைப் பாதுகாப்பாக கூட்டிச் செல்வதையே ஓட்டுநர்கள் தலையாய கடமையாகக் கருதுகின்றனர். சாதாரண சாலைகளில் ஓட்டுவதை விடவும், மலைப்பகுதிகளில் வாகனங்களை இயக்க சற்று சிரமமாக இருக்கும். இப்பகுதிகளில் இவர்கள் எப்படி வாகனத்தை அருமையாக இயக்குகிறார்கள் என்று பொதுமக்கள் பலரும் ஆச்சரிப்படுவதையும் காண முடிகிறது.

தினந்தோறும் வாகனம் ஓட்டும் போது அதிக இரைச்சல், என்ஜின் சூடு மற்றும் வாகன நெரிசல் ஆகியவற்றை சமாளித்து தான் ஒவ்வொரு நாளையும் ஓட்டுநர்கள் கடக்கிறார்கள். இப்படி இருக்கையில் வண்டி ஓட்டும் போதே ஓட்டுநர்களுக்கு மாரடைப்பு வந்து இறக்கும் செய்திகள் மனதை வருத்துகிறது. இப்படி ஒரு சம்பவம் மிக சமீபத்தில் திருப்பூரிலும் நடந்துள்ளது.

திருப்பூரில் உள்ள வெள்ளகோயில் அருகே பள்ளி வேனை ஓட்டும் போது சேமலையப்பன் என்ற ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும் தன்னை நம்பி வாகனத்தில் பயணிக்கும் பள்ளிக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் விதமாக, வேனை பாதுகாப்பாக சாலையோரமாக நிறுத்தியுள்ளார். அதன் பிறகு, அங்கேயே ஸ்டியரிங் மீது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதையும் படியுங்கள்:
உயிர் காக்கும் கவசமான RCD மின் சாதனம்: உடனே இதைச் செய்யுங்கள்!
Drivers

உயிர் போகும் நிலையிலும் இளம் பிஞ்சுகளின் உயிர் காத்த ஓட்டுநர் சேமலையப்பனை நினைத்து பெருமைப்படாமல் இருக்க முடியாது. இம்மாதிரியான நிகழ்வுகள் நடப்பது இது முதல்முறையல்ல; ஏற்கனவே சில ஓட்டுநர்கள் பல பேருடைய வாழ்வைக் காத்துள்ளனர்.

“உயிரைக் காப்பாற்றுவது மருத்துவர்கள் மட்டுமல்ல; ஓட்டுநர்களும் தான்” என்பதை நம்மால் மறுக்க முடியாது.

இருப்பினும் பொதுமக்களில் சிலர், “இந்த டிரைவர் என்னப்பா பொறுமையா போறார்; வேகமாகவே போக மாட்டாரா” என ஓட்டுநர்களை குறை கூறுவதை அவ்வப்போது பார்க்க முடிகிறது. அவர்கள் பொறுமையாக செல்வதே நம் பாதுகாப்புக்காகத் தான் என்பதை புரிந்து கொண்டால், இதுபோன்ற குறைகளை நம்மால் தவிர்க்க முடியும். ஓட்டுநர் என்றில்லாமல் அனைத்து வேலைகளையும் மதியுங்கள். உழைப்பவர்களுக்கு மதிப்பு ஒன்றே பெரும்பேறு.

வாசகர்களே! உங்கள் உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்களில் யாரேனும் ஓட்டுநர்கள் இருக்கிறார்கள! அப்படி இருந்தால் அவர்கள் பெயரை மறக்காமல் கமெண்டில் பதிவிட்டுச் செல்லுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com