
போதைப் பொருள் பயன்படுத்துதல், போதைப் பொருள் விற்பனை செய்தல் என்பது உலகளவில் மாபெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. போதைப் பொருளைக் கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எத்தனை நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் கூட, போதைப்பொருளை முற்றுமாக ஒழித்துவிட முடியவில்லை.
தற்போது உடல் மற்றும் மனதை சீரழிக்கும் போதைப்பொருள் புழக்கம் மற்றும் கைது நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் பிரபலமான நடிகர் ஒருவரும் போதை பொருள் உபயோகத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
ஒருவர் போதை பொருளை உபயோகித்ததை எப்படி நிரூபிக்க முடியும்? அதை கண்டறிவதற்கான வழிமுறைகள் என்ன? யாரெல்லாம் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பது குறித்து திரட்டிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒருவர் போதை பொருளை பயன்படுத்தியுள்ளார் என்பதை அவர் உட்கொண்டு 45 நாட்கள் ஆன பிறகு கூட மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறியலாம் . மனித உடலில் போதை மருந்துகளைக் கண்டறிவது பொதுவாக இரத்தம், சிறுநீர், உமிழ்நீர் அல்லது முடி போன்ற உயிரியல் மாதிரிகளை பரிசோதனை செய்யும் மருத்துவ முறைகளை உள்ளடக்கியதாக உள்ளது.
பரிசோதனைகளின் வகைகள்:
சிறுநீர் பரிசோதனை மிகவும் பொதுவான முறைகளில் ஒன்றாகும். இதனால் சமீபத்திய போதைப்பொருள் பயன்பாட்டை எளிதில் அடையாளம் காண முடியும். பயன்படுத்திய அளவு மிதம் என்றால் 3–4 நாட்கள் வரையும் அதிக அளவு என்றால் 7 நாள் வரையும் கண்டுபிடிக்க முடியும். இது பெரும்பாலும் பணியிட சோதனை மற்றும் மருத்துவ மதிப்பீடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
இரத்த பரிசோதனைகளால் சிறுநீர் சோதனைகளை விட மிகவும் துல்லியமாகக் கண்டறிய முடியும். போதை மருந்து இரத்தத்தில் பொதுவாக 12 முதல் 48 மணி நேரம் வரை காணப்படும். அதன் benzoylecgonine என்ற உடலினால் உருவாக்கப்படும் வேதிப்பொருள் சில நாட்கள் வரை இரத்தத்தில் இருக்கும். ஆனால் அவை பெரும்பாலும் அவசரகால சூழ்நிலைகளில் அல்லது துல்லியமான அளவீடுகள் தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தப்படுகின்றன.
எளிதான உமிழ்நீர் சோதனைகளால் சமீபத்திய போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய முடியும் இது இரத்தப் பரிசோதனை போன்ற பிற மருத்துவப் பரிசோதனைகளுக்கு ஒரு சிறந்த மாற்றாக கருதப்படுவதால் சாலையோர உடனடி சோதனை மற்றும் பணியிட பரிசோதனைக்கு மிகவும் உதவுகின்றன.
தலைமுடி பரிசோதனைகள் மூலம் 90 நாட்கள் அல்லது அதற்கு மேலும் போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய முடியும். போதை மருந்துகள் உடலில் சுழலும் இரத்த மூலம் முடியின் வேர் பகுதியில்தான் சேர்கின்றன என்பதால் 3 மாதங்களுக்கு மேலானாலும் முடியின் வேர்க்கால் சோதனை செய்யலாம் . இந்த முறை பெரும்பாலும் குற்ற தடயவியல் விசாரணைகளில் ஸ்பெஷலாக பயன்படுத்தப்படுகிறது.
சோதனைகள் எவ்வாறு செயல்படுகின்றன?
தனிநபரிடமிருந்து ஒரு உயிரியல் மாதிரி (இரத்தம், சிறுநீர், உமிழ்நீர் அல்லது முடி) சேகரிக்கப்படுகிறது. immunoassay or chromatography போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தி பகுப்பாய்விற்காக மாதிரி ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது. சோதனை முடிவுகள் குறிப்பிட்ட மருந்துகள் அல்லது அவற்றின் வளர்சிதை மாற்றங்கள் அமைப்பில் உள்ளதா அல்லது இல்லையா என்பதைக் குறிக்கும் தரவுகளை முடிவுகளாக தரும்.
எங்கு யாருக்கு சோதனை மேற்கொள்ளப்படும்?
போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைக் கண்டறிய அல்லது மருந்து வகைகளை கண்காணிக்க மருத்துவர்கள் இந்த சோதனைகளைப் பயன்படுத்தலாம்.
பெரிய பெரிய நிறுவனங்கள் தங்கள் பணியமர்த்தல் செயல்முறையின் ஒரு பகுதியாக அல்லது போதைப்பொருள் இல்லாத பணியிடத்தை உறுதி செய்வதற்காக இது போன்ற சோதனைகளை நடத்தலாம்.
குற்றவியல் வழக்குகளில் மேற்கொள்ளும் தடயவியல் விசாரணைகளில் ஆதாரங்களை சேகரிக்க காவல் துறை போன்ற சட்ட அமலாக்க நிறுவனங்கள் மருந்து சோதனைகளைப் பயன்படுத்துகின்றன.
குறிப்பிட்ட விளையாட்டுகளில் நியாயமான போட்டியை உறுதி செய்வதற்காக விளையாட்டு வீரர்கள் செயல்திறனை மேம்படுத்தும் ஊக்க மருந்துகளுக்காக சோதிக்கப்படலாம்.
மேலும் விமானிகள் அல்லது வணிக லாரி ஓட்டுநர்கள் போன்ற முக்கிய பணிகளில் உள்ளவர்கள் ,மோட்டார் வாகன விபத்துக்கள் அல்லது படகு விபத்துக்கள் அல்லது பணியிடத்தில் விபத்துக்களில் ஈடுபட்டவர்கள் போன்றவர்களும் இந்த சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
போதைப்பொருள் பயன்பாடு குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக காவல் துறை நாடுவது நல்லது.
வேடிக்கை விளையாட்டாக மகிழ்ச்சியாகத் தொடங்கிய மது மற்றும் போதை பழக்கம் மெல்ல மெல்லப் பழகி அடிமைத்தனமாகி விடுகிறது. இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அந்தப் போதைப் பொருள் இல்லாமல் இருக்க முடியாது. உடலில் ஏற்படுகின்ற இரசாயன மாற்றத்தினால் போதைப் பொருட்களினை உபயோகிக்கின்ற அளவும் கூடி விடுகிறது. போதையால் மாறிப்போன வாழ்க்கை பல குடும்பங்களை சின்னா பின்னமாகிச் சீரழித்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.