
போதைப்பொருள் கலாச்சாரம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. பணக்காரர்கள், இளைஞர்கள் மற்றும் சினிமா துறையை குறிவைத்து இந்த போதைப்பொருள் புழக்கம் திரைமறைவில் நடந்து வருகிறது. போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கு கானல் நீராகவே போகிறது. சினிமா துறையில் போதைப்பொருள் பயன்பாடு பல ஆண்டுகளாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் இந்தி நடிகர் சஞ்சய் தத் தான் முதன் முதலில் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.
அதன்பின்னர் இந்த பழக்கம் பரவலாக இருந்தாலும் அதிகரிக்கவில்லை. ஆனால் தற்போது சினிமா உலகையும் போதைப் பொருளையும் பிரிக்க முடியாது என்பது போல் ஆகிவிட்டது. சினிமா பிரபலங்கள் இடையே சமீபகாலமாக போதைப்பொருள் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. சினிமா துறையில் பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பார்ட்டி என்பது சர்வசாதாரணமாகிவிட்டது.
மிகப்பெரிய நட்சத்திர விடுதிகள், ரிசார்டுகளில் நடக்கும் சினிமா பார்ட்டிகளில் அதிக அளவு போதை பொருள் புழக்கம் இருப்பதாக தொடர் புகார்கள் வருகின்றன. பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பல பிரபலங்கள் போதை பொருட்களை பயன்படுத்தி சிக்கி இருக்கின்றனர்.
புகழின் அழுத்தங்கள், படத்தோல்வி, வெற்றி, விருந்துகள் மற்றும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை ஆகியவை திரைப்பட துறையினரிடையே மதுப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
சில வருடங்களுக்கு முன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் போதை பொருள் வழக்கில் சிக்கினார். அதற்கு பிறகு தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளராக வளம் வந்த கேபி சவுத்ரி போதை பொருள் வழக்கில் சிக்கினார். அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர் நடிகைகள் சிக்கியதாக சொல்லப்பட்ட நிலையில் அதற்கு பிறகு இந்த விவகாரம் அப்படியே அடங்கிப் போனது.
தற்போது பிரபல பாடகி ஒருவர் நடத்திய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் போதை பொருட்கள், வெளிநாட்டு மதுபானங்கள் பயன்படுத்தப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்திருக்கிறது.
அது வேற யாரும் இல்லீங்க...'ஓ' சொல்றியா மாமா' என்ற பாடலை தெலுங்கு மொழியில் பாடிய பாடகி மங்லி தான். இவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் போதைப்பொருள் பயன்படுத்தினாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ தமிழில் விஜய்யுடன் 'பீஸ்ட்', கார்த்திக் சுப்புராஜின் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'மற்றும் தெலுங்கில் வெளியான தசரா படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர். சமீபத்தில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார்.
அவ்வப்போது பரபரப்பான செய்திகளில் அடிபடும் சாக்கோ சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். மேலும் கோர்ட்டில் அவர் போதைப் பொருளில் இருந்து விடுபட விரும்புவதாக கூறியதால் போதை மறுவாழ்வு மையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே அதாவது 10 ஆண்டுகளுக்கு முன்னர் படப்பிடிப்புத் தளத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை ஒருவர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டாம் சாக்கோவின் பரபரப்புக்கு அடங்குவதற்குள் திரைப்பட இயக்குநர்கள் காலித் ரெஹ்மான் மற்றும் அஷ்ரப் ஹம்சா ஆகியோர் உயர் ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான திலீஷ் போத்தன், திரைப்படத் துறையில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
அதேபோல் கடந்த ஆண்டு இறுதியில் போதைப் பொருள் கடத்துபவர்களுக்கு துணையாக இருந்ததாக கூறி மன்சூர் அலிகானின் மகன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடிகைகளுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து விசாரித்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, மலையாள திரையுலகமே நிலைகுலைந்து போனது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டன. இதில் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது இரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் அவர் கொக்கைன் என்ற போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த், பிரசாத் என்பவரிடம் இருந்து ரூ.12 ஆயிரம் மதிப்பிலான ஒரு கிராம் போதைப் பொருளை 40 முறைக்கு மேல் வாங்கிப் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
பிரதீப் நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவிற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக கூறப்படும் நிலையில் அவரிடம் போலீசார் விசாரணை நடந்த உள்ளதாக கூறப்படுகிறது.
திரையுலகில் போதைப்பொருள் கலாசாரம் தலைதூக்கியிருப்பது வெட்ட வெளிச்சமாகி வரும் நிலையில், தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டிருப்பது தமிழ் திரைவுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.