மின்னணு வாக்குப்பதிவு vs வாக்குச்சீட்டு: தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?

Electronic Voting vs Ballot
Electronic Voting vs Ballot

தொகுதி பக்கமே வராத அரசியல்வாதிகள் தேர்தல் வந்துவிட்டால் போதும், ஒருவர் பின் ஒருவராக படையெடுத்து வருவார்கள். வாக்குறுதிகளை அள்ளி விடுவார்கள். ஆனால், அதில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்பது யாருக்கும் தெரியாத புதிராகத் தான் இருக்கும்.

தற்போது பொதுமக்கள் ஓட்டளிக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சில ஆண்டுகளாகவே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பழையபடி வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படுமா என்பது கேள்விக்குறி தான். இதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு தான் என்றாலும், பலரும் வாக்குச்சீட்டு முறை தான் நம்பகத்தன்மை நிறைந்தது என கருத்து தெரிவிக்கின்றனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் போதுமான நம்பகத்தன்மை இல்லை என்றும், இதில் முறைகேடுகள் நடக்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் 100% நம்பகத்தன்மை வாய்ந்தது என தேர்தல் ஆணையம் கூறுகிறது. உலகம் முழுக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்னேறி வரும் காலக்கட்டத்தில், வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்தி தேர்தல் நடத்தினால், தேர்தலை நடத்த பல நாட்கள் ஆகும் என்பது தேர்தல் ஆணையத்தின் மற்றுமொரு கருத்தாகும். 

தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது தான் சாலச் சிறந்தது என்றும், இதில் முறைகேடுகள் ஏதும் நடக்க வாய்ப்பே இல்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் நேரம் மிச்சமாவதோடு, வேலைப்பளுவும் குறைகிறது. முன்னதாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகளை நிரூபித்துக் காட்டுங்கள் என தேர்தல் ஆணையம் விட்ட சவாலை எந்தக் கட்சியும் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
வாக்காளர்களே! அடையாள அட்டையின் வரலாறு தெரியுமா?
Electronic Voting vs Ballot

சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற பொதுநல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதற்கு வாய்ப்பில்லை என தீர்ப்பு வழங்கி அந்த மனுவையும் தள்ளுபடி செய்தது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியே பார்கோட் ஒன்றை வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பில் இருந்து நாம் ஒன்றை மட்டும் உறுதியாக புரிந்து கொள்ள முடியும். அதாவது, இனிமேல் வாக்குச்சீட்டு முறை என்பது கனவிலும் இருக்காது. தேர்தலில் இனி என்றுமே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்படும். இதனை எதிர்த்து வரும் எதிர்க்கட்சியினருக்கு இது நற்செய்தியாக அமையாது. அதனால், இது பற்றிய விவாதங்களும், கருத்துகளும் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கும்.

20 வருடங்களுக்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை அறிமுகப்படுத்திய காங்கிரஸ் கட்சியே அதனை எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தால் வாக்குப்பதிவு இயந்திரங்களை திரும்பப் பெறுவது பற்றி பரிசீலனை செய்யலாம் என பாஜக மேலிடம் ஏற்கனவே தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com