அந்தக் காலத்தில் எதிர்காற்று முகத்தில் வீச அப்பாவின் மிதிவண்டி எனப்படும் சைக்கிளில் முன்புறம் அமர்ந்து பள்ளி சென்றவர்கள் அநேகம் பேர். அந்த சுகம் நிச்சயம் இந்த காலத்து குழந்தைகளுக்கு கிடைக்காது. ஆனாலும் இன்றும் கிராமப்புறங்களில் சைக்கிளில் செல்லும் அரசு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளும் உடற்பயிற்சிக்காக வென்றே சைக்கிளை ஓட்டும் நபர்களும் உண்டு.
சமீப காலமாக சைக்கிள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவது ஆரோக்கியமான விஷயம். காரணம் உடல் நல ஆரோக்கியம். குறைந்த நேரத்தில் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் அதிக கலோரிகளை குறைக்க முடியும் என்பதும் உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும் என்பதுமே. மேலும் தாறுமாறான பெட்ரோல் விலையும் அதன் புகையினால் எழும் மாசும் சைக்கிள் பக்கம் பலரையும் திரும்ப வைத்துள்ளது எனலாம்.
இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகத்தான் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை இந்நாளை சர்வதேச தினமாக அறிவித்ததைத் தொடர்ந்து உலகளவில் உலக மிதிவண்டி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது. தற்போது சைக்கிள் பற்றிய விழிப்புணர்வு எப்படி உள்ளது? அனைவராலும் சைக்கிள் விரும்பப் படுகிறதா ? கேள்விக்கு பதில் சொல்கிறார்கள் இங்கு.
சுந்தர்மீனாட்சி - சேலம் Buy Cycle (சைக்கிள் அகாடமி நிறுவனர்)
கடந்த 60 வருடங்களாக சேலத்தில் தாத்தா மற்றும் அப்பா நாச்சியப்பன் அவருக்கு பின் நான் என்று மூன்று தலைமுறைகளாக சைக்கிள் கடை நடத்தி வருகிறோம். தற்போது மிதிவண்டிகளை அனைவரும் விரும்பி வாங்க துவங்கியுள்ளனர். காரணம் கொரோனா எனும் பெரும் தொற்று. கொரோனாவுக்கும் முன் இருந்த நிலையை விட தற்போது அனைவரும் அவரவர்களின் உடல் நலத்தில் கவனம் கொள்வதால் உடற்பயிற்சிக்காகவே சைக்கிள்களை வயது வித்தியாசம் இன்றி வாங்குவது பெருகி உள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்றுதான். மேலும் பல விதமான சைக்கிள் வகைகள் இருந்தாலும் இப்போது ஒரு குடும்பத்தில் உள்ள அப்பா மகன் மகள் என அவரவர் உயரத்திற்கு ஏற்ப ஓட்டும்படி சீட் அட்ஜஸ்ட் மற்றும் ரிலீஸ் செய்யும் சைக்கிள் அனைவராலும் விரும்பி வாங்கப் படுகிறது. மேலும் மலையேற்றங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற கீர் வண்டிகளும் தற்போது அதிக அளவில் விற்பனையாகின்றன.
சைக்கிள் கிளப் அநேக இடங்களில் இருக்கும். ஆனால் தமிழ்நாட்டிலேயே சைக்கிள் அகாடமி துவங்கியது நாங்கள் தான். இதன் மூலம் சைக்கிள்கள் பற்றிய அனைத்து விஷயங்களையும் செமினார் மூலம் மாணவர்களுக்கு கற்றுத் தருகிறோம். மேலும் இந்த அகாடமி மூலம் எங்கள் மாணவச் செல்வங்கள் மணாலி டு லே லாங் ட்ரிப் பயணம் செய்து சாதனை படைத்துள்ளார்கள். மாதம்தோறும் தவறாமல் எங்கள் மாணவர்ளை கூட்டிக்கொண்டு ஏற்காடு மலைக்கு ஒன்றரை மணி நேரத்தில் சைக்கிளில் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.
ரா. சே. ராஜன்- சேலம் (சைக்கிள் அகாடமி பயிற்றுநர்)
நான் சிறு வயதிலிருந்தே சைக்கிள் பிரியன். சைக்கிளில் செல்வது அவ்வளவு சுகமாக இருக்கும். தற்போது சேலத்தின் சைக்கிள் அகாடமியின் பயிற்சியாளராக கடந்த நான்கு வருடங்களாக நிறைய பேருக்கு சைக்கிள் பயிற்சிகளை அளித்து வருகிறேன். இன்னும் இதைப் பற்றிய விழிப்புணர்வு அதிகம் வர வேண்டும் என்று நினைக்கிறேன்.
வீட்டிலேயே அப்பாவிடம் கற்றுக் கொள்ளலாம் இதற்கு எதற்கு நாங்கள் செலவழிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் முறையான பயிற்சி என்பது நிச்சயம் சைக்கிளுக்கும் பொருந்தும். சாலையில் எப்படி பயணிப்பது? சைக்கிளில் ஏறும் போது கால்களை எப்படி வைப்பது? முறையாக உட்காருவது எப்படி ?டிராபிக்கான இடங்களில் சைக்கிளை ஓட்டுவது எப்படி போன்ற அனைத்தையும் எங்கள் பயிற்சியில் சொல்லித் தருகிறோம். சாதாரணமாக வீடுகளில் கற்றுக் கொள்வதற்கும் எங்களிடம் பயிற்சி பெற்று சைக்கிள் ஓட்டுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
நான் ஐந்து தடவை இதுவரை மணாலி டு லே (465 கிலோமீட்டர்) தனியாகவும் குழுவோடும் சென்று வந்துள்ளேன். ஒருமுறை பாகிஸ்தான் பார்டர் தொட்டு வந்துள்ளேன் என்பது எனக்கு மிகவும் பெருமைதான். அது மட்டும் இன்றி 2022 ஆம் ஆண்டு மூன்று மாணவ மாணவிகளும் 2023 ஆம் ஆண்டு ஐந்து பேரும் என இடைவெளி இன்றி மணலி to லடாக் சென்றது எங்களின் மிகப்பெரிய சாதனையாகும். இது விரைவில் சாதனை புத்தகத்திலும் இடம்பெறப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பயிற்சி இன்றி சைக்கிளில் இது போன்ற இடங்கள் செல்வது சாத்தியமில்லை. தற்போது சைக்கிளிங் பற்றிய விழிப்புணர்வு உடல் நலம் பொருட்டு அதிகம் இருந்தாலும் எங்களைப் போன்ற பயிற்சியாளர் களுக்கும் தகுந்த அங்கீகாரம் இருந்தால் இனி வரும் காலங்களில் இன்னும் சிறப்பாகும் இந்த சைக்கிளிங் பயிற்சி.