Interview: "நல்லா உழைக்கணும்; தொழிலை நேசிக்கணும்" - வெற்றிக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? சந்திப்போமா...
சுயதொழில் தொடங்குவது யாருக்குத்தான் பிடிக்காது? ஆரம்பித்துவிட்டாலும், அத்தொழிலைத் தொடர்ந்து நடத்துவது சவாலான விஷயம் தான். 2001ல் சென்னை அடையாறு, கஸ்தூரிபாய் நகரில், ஒரு குடும்பத்தின் இருவர், இணைந்து தொடங்கிய சிப்ஸ் கடை , படிப்படியாக இனிப்பு, கார வகைகள் கடை என விரிந்து, தொடர்ந்து 23 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிற பயணத்தில் நம்மையும் இணைத்த ஒரு சிறப்பு நேர்க்காணல்...
நிறுவனம் உருவாகிய விதம் மற்றும் வளர்ச்சிப் பற்றி கூறுங்கள்.
நான் சூரிய நாராயண சுவாமி. எனது அக்கா கணவர் கார்த்திக்கேயன். சுயதொழில் துவங்குவது மீதான அவரது ஆர்வத்தால், நாங்கள் இருவரும் இணைந்து, சென்னை அடையார், கஸ்தூரிபாய் நகரில், சிறிய அளவில் ஒரு டீ ஸ்டால் தொடங்கினோம். பின்னர், அதிலிருந்து படிப்படியாக விரிவாக்கம் செய்து, சிப்ஸ், ஸ்வீட் வகைகள் தயாரிப்பையும் இணைத்தோம். முழுமையாக மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு, ஐந்து வருடங்கள் ஆகின. தொடர்ந்து, 23 வருடங்களாக இத்தொழிலை சிறப்பாக செய்து வருவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. எங்களது தனித்துவச் சுவையின் காரணமாகவும் மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையாலும் மேலும் இரண்டு கிளைகள் துவங்கியுள்ளோம். கடையின் அடுத்தக் கட்ட வளர்ச்சியாக, சென்னை OMR ல் புதிதாக கிளை துவங்க நடவடிக்கை எடுக்கிறோம். அடுத்த ஒரு வருடத்தில் தொடங்குவோம் என எதிர்பார்க்கிறோம்.
என்னென்ன 'ஸ்வீட்ஸ்'லாம் ரெடி பண்ணுறீங்க?
ஆரம்பத்தில் சிப்ஸ். பிறகு போளி. அப்படி ஒவ்வொன்றாக ஃபேமஸ் ஆகின. சிலருக்கு போளி, சிலருக்கு சமோசா பிடித்திருப்பதால் எல்லாப் பொருட்களும் ஒரே அளவில், ஒரே தரத்தில் தயாரிக்கிறோம். அவரவர் விருப்பத்திற்கேற்ப பொருட்களை விரும்பி வாங்கி செல்கின்றனர். லட்டு, ஜாங்கிரி, பாதுஷா, மைசூர்பாகு போன்ற தென்னிந்திய இனிப்பு வகைகள், பால்(milk) ஸ்வீட்ஸ், காஜீ கத்லி, பெங்காலி இனிப்பு வகைகள், போளி இத மாதிரி நிறைய செய்றோம். காலை 9 மணி முதல் இரவு 9.30 மணி வரை கடையில் பொருட்கள் இருக்கும். ஒரு batch காலியானதும் அடுத்த batch Factory ல இருந்து வந்துட்டே இருக்கும். மாலை நேரத்தில், வடை, சமோசா, பஜ்ஜி போன்ற வகைகள் கிடைக்கும். பள்ளிக் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஸ்வீட்ஸ், காரம் வகைகள் தயாரிக்கும் இடம், முறை, தரம் பற்றி கூறுங்கள்.
உணவு வகைகள் செய்வதற்கு தனி இடம்(Factory) உள்ளது. விற்பனை மட்டும் தான் கடையில். ஒரு சில பொருட்கள் மட்டும் தான் விற்பனையகத்திலேயே சுடச்சுட செய்கிறோம். Factoryல் உணவு வகைகளுக்கேற்ப செய்வதற்கு மாஸ்டர்கள் உண்டு. தரமானதாக நல்ல முறையில் செய்கின்றனர். லட்டு, ஜாங்கிரி, பாதுஷா, இதெல்லாம் அதிகம் சேல்ஸ் ஆக கூடிய பொருட்கள். காஜு கத்லி, நெய் மைசூர்பாகு, போளி இதெல்லாம் Signature sweetஆ இருக்குது. தொழில் செய்வதற்கு தேவையான அனைத்து உரிமங்களும் இருக்கின்றன. முறைப்படித் தேவையான எல்லாச் சான்றிதழ்களையும் வாங்கியுள்ளோம். FSSAI, Corporation Licence, Fire Service License போன்ற தரச் சான்றிதழ்கள் உள்ளன.
விளம்பரம் கொடுத்து உங்க கடையை மக்களிடையே பிரபலப்படுத்தியிருக்கீங்களா?
எங்க கடை இவ்ளோ பிரபலமானதற்கு முதல் காரணமே நாங்க விளம்பரப்படுத்தினதுதான். ’அடையார் டைம்ஸ்’ லோகல் பேப்பர்ல நாங்க முதல்ல விளம்பரம் கொடுத்தோம். இப்போ ஏதாவது பண்டிகை தினங்கள் வந்தாலோ, சலுகைகள் தந்தாலோ மட்டுமே விளம்பரப்படுத்துறோம். இப்ப கூட இந்திரா நகர்ல ஒரு பிரான்ச் ஆரம்பிச்சோம் — அதுக்காகவும் நாங்க விளம்பரம் கொடுத்தோம். எங்கள் குழந்தைகள், கடையை பிரபலப்படுத்த சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டும் என்ற யோசனையையும் கூறியுள்ளனர்.
ஒரு மாதத்திற்கு நீங்கள் எவ்வளவு லாபம் ஈட்டுகிறீர்கள்?
முதல் 5 வருடங்களில், இலாபம் அதிகம் கிடைக்கவில்லை. படிப்படியாகத்தான் வருமானம் உயர்ந்து இலாபம் கிடைத்தது. ஒரு மாதத்துக்கு மூன்று லட்சத்திற்கும் கூடுதலாக வருமானம் வரலாம். ஒரு மாசம் லாபம் அதிகமா வரும், ஒரு மாசம் கம்மியா வரும். அதை சரியா சொல்ல முடியாது. கடை வாடகை, வேலையாட்களுக்கு சம்பளம், கடையின் மற்ற செலவினங்கள் போக கிடைக்கும் இலாபத்தை நாங்கள் பயன்படுத்துவோம்.
வாடிக்கையாளர்களை நீங்கள் எப்படி தக்க வைத்துக் கொள்கிறீர்கள்?
உணவுப் பொருள் தயாரிக்கும் போது, ஒரே மாஸ்டரை வைத்து தயாரிக்கனும். கொஞ்சம் சுவை மாறினாலும், வாடிக்கையாளர்கள் கேள்விக் கேட்பார்கள். அதை புரிந்து, ஏற்றுக் கொண்டு, அவற்றை சமாளிக்கும் வகையில், மாஸ்டர்களை மாற்றாமல், தனிப்பட்ட ஃபார்முலா மாறாமல் பின்பற்றினால், சுவை குறையாமல் பொருட்களைத் தொடர்ந்து வழங்க முடியும்.
வாடிக்கையாளர்களுடன் ஏற்பட்ட சிறந்த அனுபவத் தருணங்கள் ஏதேனும் உள்ளதா?
இங்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் நீண்டகால வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். அவர்கள், மற்றவர்களுக்கு எங்கள் கடையைப் பரிந்துரைப்பதால் அதிகம் பேர் வந்து பொருட்கள் வாங்குகின்றனர். பொருட்களின் சுவை, தரம் இவையெல்லாம் மக்களை திருப்திப் படுத்தும் வகையில் இருப்பதால், மக்கள் அனைவரும் தன் உறவினர்களுக்கு ஸ்வீட்ஸ், காரம் வாங்கிச் செல்கின்றனர். எங்களுடன் ஃபோனில் தொடர்பு கொண்டு ’பொருட்கள் சுவையா இருக்கு, எங்கள் வீட்டிற்கு வாங்கினோம், எங்கள் சொந்தக்கார்களுக்கும் வாங்கிச் சென்றோம்’. உங்கள் கடையில் போளி, சமோசா..நல்லா இருக்கு'... இது போன்ற வார்த்தைகள் மகிழ்ச்சியைத் தருது.
இங்க வேலை பாக்குறவங்க எல்லாருமே வட இந்தியர்களா? தமிழர்களா?
பத்து வருஷத்துக்கு முன்னாடி எல்லாமே தமிழர்கள் தான் வேலை பார்த்துட்டு இருந்தாங்க. இப்போ இந்த மாதிரி வேலைக்கு வரதுக்கு யோசிக்கிறாங்க. தமிழர் பசங்க இருக்காங்க. எங்களுக்கு யாரு வேலைக்கு கிடைக்கிறாங்களோ அவங்கள நாங்க வேலைக்கு எடுத்துக்கறோம்.
உங்களைப் போல புதிதாக வர விரும்பும் வணிகர்களுக்கு நீங்கள் என்ன ஆலோசனை கொடுப்பீர்கள்?
நல்லா உழைக்கணும். நம் தொழிலை நாம் முதலாக நேசிக்க வேண்டும். அப்போதுதான், தொழில் நன்றாக நடத்த முடியும். உணவின் சுவை மாறக் கூடாது. வாடிக்கையாளர் என்ன விரும்புகிறார்கள் என தினமும் கேட்க வேண்டும். அவர்களின் கருத்துகளை ஏற்றுக் கொண்டு, அதற்கேற்றபடி நம்மை திருத்திக் கொண்டு செயல்பட்டால் வெற்றி பெற முடியும்.
கங்கா ஹாட் சிப்ஸ் கடையின் வாடிக்கையாளரின் கருத்து:
எனது பெயர் குணாவதி. கோட்டூர்புரம். நான் இந்த கடைக்கு ஒன்பது வருஷமா வரேன். எனக்கு இந்த கடையில ரொம்ப பிடிச்சது போளி, சின்ன சமோசா. என் குழந்தை பிரட், கேக், ஜிலேபிலாம் இந்த கடையில விரும்பி சாப்பிடுவான். ரொம்ப காரமில்லாம.. எண்ணெயாகவும் இல்லாம வீட்டுல செஞ்ச மாதிரியே இருக்கு.
கங்கா ஹாட் சிப்ஸ் கடையில் பணி புரிபவரின் கருத்து:
எனது பெயர் பிரசன்ன குமார். இங்க 6 வருடங்களா வேலை பாக்குறேன், BBA படிச்சிருக்கேன். பொருட்கள் தயாரிக்கும் போதும், விற்பனையின் போதும், பொருட்களின் தரம் குறையாமலிருக்கவும் உணவு பாதுகாப்பிற்காகவும் தினமும் தொப்பி (Disposable Bouffant Cap), கையுறைகள் பயன்படுத்துகிறோம். எங்க முதலாளி நல்ல குணம் கொண்ட மனிதர். வெளியூர்களிலிருந்து வேலை பார்க்க வருபவர்களுக்கு தங்குவதற்கு வீடு, மூன்று வேளை சாப்பாடு வசதி செஞ்சி கொடுக்குறாங்க. சரியான தேதிகளில் சம்பளம். காலை 9 மணி முதல் இரவு 9 மணிக்கு வேலை முடியும். ஒரு மணி நேரம் பிரேக் தருவாங்க. எங்களுக்கு தேவைப்படும் போது எங்களுக்கு வேண்டிய உதவிகளை பண்ணுவாங்க. மொத்தத்தில், வேலைப் பார்ப்பவர்களுக்கு அனைத்து சலுகைகளையும் சலிக்காமல் கொடுக்கும் நல்ல வேலை தளம்.
உழைப்பிற்கு முன் மாதிரியாக இருந்த இருவரை பற்றி பார்த்தோம். தொழில் முழுமையடைவதற்கும் அடுத்தத் தலைமுறை வரை நீடிப்பதற்கும் அதன் மீது வைத்திருக்கும் அன்பும் சகிப்புத் தன்மையும் தான் மூலக் காரணமாயிருக்கிறது என்பது இவரின் பேச்சின் மூலம் தெரிய வருகிறது. வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்கு, அவர்களின் நிறை, குறைகளை உடனுக்குடன் கேட்டு பூர்த்தி செய்யும் போது நம் தொழில் மீதான நம்பகத் தன்மையை குறையாமல் காக்க முடியும் என்ற அறிவுரைகள், புதிய தொழில்முனைவோர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளன.