பத்திரிகைத் துறையில் நுழைவதற்கெல்லாம் முன்பாக, ஸ்கூல் மாணவனாக இருந்த காலம் தொட்டே நான் கல்கண்டு வாசகன். தமிழ்வாணன் என்னை பிரமிக்க வைத்த மனிதர். ரொம்ப வித்தியாசமான பெயர்! உச்சரிக்கும்போது ஒரு கம்பீரம் இருக்கும். “அதெப்படி? ஒரு கருப்புக் கண்ணாடியை வரைந்து சென்னை என்று மட்டுமே முகவரி எழுதி, தபால் பெட்டியில் போட்டால், அது மிகச் சரியாக தமிழ்வாணனிடம் போய்ச் சேருகிறது? என வியந்திருக்கிறேன்.ஒரு கோடை விடுமுறைக்கு கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்திருந்தேன். ஜன்னல் ஓர சீட்டில் உட்கார்ந்து நான் பயணித்த பல்லவன் பஸ் தி நகர் தணிகாசலம் சாலையில் கறுப்புக் கண்ணாடியும் தொப்பியும் வரைந்த ‘மணிமேகலை பிரசுரம்’ என்ற போர்டைக் கடந்தபோது, ஓர் இனம் புரியாத உற்சாகம். பின்னாளில் அதே தமிழ்வாணனின் தொப்பியையும், கறுப்புக் கண்ணாடியையும் பற்றி நானே பத்திரிகையில் கட்டுரை எழுதுவேன் என்றோ, அவரது வாரிசுகளான லேனா தமிழ்வானன், ரவி தமிழ் வாணன் இருவருடனும் நெருங்கிய நட்பு ஏற்படும் என்றோ எனக்கு சாமி சத்தியமாகத் தெரியாது. .மறைந்துவிட்ட ஒரு சில பிரபலங்கள் பயன்படுத்திய பொருட்கள் இப்போது எங்கே, எப்படி இருக்கின்றன என்பது குறித்த தகவல்களைத் திரட்டி கல்கியில் சில வாரங்களுக்கு “அப்புறம் என்ன ஆச்சு?” என்ற தலைப்பில் மினி தொடர் ஒன்று எழுதினேன். அதில், தமிழ்வாணன் பயன்படுத்திய தொப்பியும், கறுப்புக் கண்ணாடியும் இப்போது எங்கே இருக்கின்றன? என்று அவரது வாரிசுகளிடம் விசாரித்து எழுதிய கட்டுரையும் ஒன்று. அப்பா தமிழ்வாணன் அணிந்த தொப்பியை அவர்கள் குடும்பத்தினர் பாதுகாத்து வருவதாகவும், மலேசியாவைச் சேர்ந்த தமிழ்வாணனின் பரம ரசிகர் ஒருவர் மிகவும் விரும்பிக் கேட்டுக் கொண்டதன் பேரில் கறுப்புக் கண்ணாடியை அவருக்கு நினைவுப் பொக்கிஷமாகக் கொடுத்துவிட்டதாகவும் லேனா குறிப்பிட்டார்.தமிழ்வாணன் குறித்த இன்னும் ஒரு செய்தி. அவருக்கு குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. மீது மிகுந்த மரியாதை. ஆகவே, அவர் எஸ்.ஏ.பி. முன்னால், கறுப்புக் கண்ணாடி அணியமாட்டார். அது மட்டுமில்லை. தமிழ்வாணன் மறைந்தபோது கூட அவருக்கு தொப்பியும், கறுப்புக் கண்ணடியும் அணிவித்திருந்தனர். சினிமாவில் கதைத் திருட்டு பற்றி ஒரு கட்டுரை எழுதியபோது, ரவி தமிழ்வாணன் மிக சுவாரசியமாக ஒரு தகவல் சொன்னார்:. “1965ஆம் ஆண்டில் வெளியான தமிழ்ப் படம் பஞ்சவர்ணக் கிளி. முத்துராமன், ஜெய்சங்கர், கே.ஆர். விஜயா, நாகேஷ், மனோரமா ஆகியோர் நடித்து, டைரக்டர் கே.சங்கர் இயக்கிய படம். இந்தப் படத்தின் கதை, வசனகர்த்தா வலம்புரி சோமநாதன். படம் வெளியானதும், தான் எழுதிய “மணிமொழி நீ என்னை மறந்துவிடு!” என்ற நாவலின் காப்பிதான் ‘பஞ்சவர்ணக் கிளி’ படத்தின் கதை என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தமிழ்வாணன். வழக்கு விசாரணை முடிந்து, இறுதியில், “பஞ்சவர்ணக் கிளி படத்தின் கதையும், தமிழ்வாணனின் கதையும் ஒன்றுதான் “ என்று கோர்ட் தீர்ப்பு அளித்தது. தயாரிப்பாளர், கதாசிரியர் சார்பில், தமிழ்வாணனுடன் பேசி, கதைக்குரிய அன்பளிப்பு என்று பத்தாயிரம் ரூபாய் வழங்கினார்கள்.இந்த தீர்ப்பு வந்த சில மாதங்களில், பிரபல தி.மு.க. பிரமுகரான ஏ.வி.பி.ஆசைத் தம்பி, தமிழ்வாணனது “மணிமொழி நீ என்னை மறந்துவிடு” என்ற கதை, நான் எழுதிய “ கசந்த கரும்பு ‘ என்ற கதையின் காப்பி என்று வழக்கு தொடர்ந்தார். இரண்டு வருடங்கள் வழக்கு நடந்தது. இறுதியில், இரண்டுகதைக்கும் சம்மந்தம் இல்லை. தமிழ்வாணன் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கத்துடன் வழக்கு போடப்பட்டுள்ளது என்று சொல்லி அவருக்கு நஷ்ட ஈடாக ஐந்தாயிரம் ரூபாய் தரவேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது”..நான் லயோலா கல்லூரியில் படித்தபோது, தமிழ்த்துறையில் ஒரு செமஸ்டருக்குரிய இதழியல் படிப்பை அறிமுகப்படுத்தினார்கள். அப்போது எங்களுக்குப் பாடம் எடுக்க கல்லூரிக்கு வந்தார் லேனா தமிழ்வாணன். ஆக, ஒரு வகையில் அவர் எனக்கு இதழியல் குரு. அப்போது, இதழியல் படிப்பின் ஒரு அங்கமாக நான் தயாரித்த கையெழுத்துப் பிரதியில் எங்களின் ஆசிரியர் என்ற முறையில் “வெரி குட்” என்று எழுதி கையெழுத்து இட்டதும் வகுப்பில் பாரட்டியதும் இன்னமும் எனக்கு நினைவில் உள்ளது.லேனாவிடம் என்னைக் கவர்ந்த விஷயங்கள் பல உண்டு. அவற்றில் முதலாவது நேரம் தவறாமை. அவர், ஒரு டைம் மேனேஜ்மென்ட் ஸ்பெஷலிஸ்ட். நேரம் நிர்வாகம் பற்றி சொற்பொழிவாற்றுகிறார்; புத்தகம் எழுதி இருக்கிறார். பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார். ஆனால், அவர் ஒரு முறை அமெரிக்காவில் ஒருவரை சந்திக்கச் சென்றபோது ஏற்பட்ட காலதாமதம்தான் தன்னை சிறந்த நேர நிர்வாகியாக, பயிற்சியாளராக மாற்றியது என்று கூறினார்.“நான் 1984ல், அமெரிக்கா சென்றிருந்தபோது, ஒரு நாள் காலை பதினோரு மணிக்கு அறுபது லட்சம் பிரதிகள் விற்பனையாகும் “ஃபேமிலி சர்க்கிள்” என்ற அமெரிக்காவின் மிகப்பெரிய பத்திரிகையின் ஆசிரியரை சந்திக்க எனக்கு அப்பாயிண்ட்மென்ட் கிடைத்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக சரியாக பதினோரு மணிக்கு என்னால் அவருடைய அலுவலகத்தைச் சென்றடைய முடியவில்லை. ஏழு நிமிடங்கள் தாமதமாகிவிட்டது. நான் அவர் முன் போய் நின்றபோது, என் காலதாமதத்தைக் காரணம் காட்டி, அவர் என்னை சந்திக்க மறுத்திருந்தாலும், காலதாமதத்துக்காக திட்டி இருந்தாலும் கூட அதை நான் புரிந்து, ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், அவர் “யூ இண்டியன்ஸ்…. என்று ஆரம்பித்து, திட்டியதை, என்னை மட்டுமின்றி என் தாய்நாட்டையே அவமானப்படுத்திவிட்டதாக நான் கருதினேன். அவர் வீசிய கடுமையான சொற்களை இன்றைக்கும் என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அந்த வினாடி, “ இனி வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பத்தில் கூட நேரம் தவறக்கூடாது!” என்று ஒரு வைராக்கியம் ஏற்பட்டது. இன்றுவரை அதை கடைபிடித்து வருகிறேன்” என்றார். இன்னும் சொல்லப்போனால், லேனா தன்னுடைய கைகடிகாரத்தில் நேரத்தை எப்போதும் 15 நிமிடம் கூடுதலாக வைத்துக் கொள்ளுவார். அவர் நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் குறிப்பிடும் ஒரு முக்கியமான பொன் மொழியை நான் இங்கே பகிர்ந்துகொள்வது பொருத்தமாக இருக்கும். Ø ஓர் ஆண்டின் அருமையை உணரவேண்டும் என்றால், ஆண்டுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவனிடம் கேட்கவேண்டும்.Ø ஒரு மாதத்தின் அருமையை உணரவேண்டும் என்றால், குறை பிரசவமாகப் குழந்தை பெற்றெடுத்த தாயிடம் கேட்கவேண்டும்.Ø ஒரு வாரத்தின் அருமையை உணரவேண்டும் என்றால், ஒரு வாரப் பத்திரிகை ஆசிரியரிடம் கேட்கவேண்டும்.Ø ஒரு நாளின் அருமையை உணரவேண்டும் என்றால், ஒரு தினக்கூலித் தொழிலாளியிடம் கேட்கவேண்டும்.Ø ஒரு மணிநேரத்தின் அருமையை உணரவேண்டும் என்றால், விபத்து சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவரிடம் கேட்கவேண்டும்.Ø ஒரு நிமிடத்தின் அருமையை உணரவேண்டும் என்றால், ரயிலைக் தவற விட்டவரைக் கேட்க வேண்டும்.Ø ஒரு விநாடியின் அருமையை உணரவேண்டும் என்றால், சாலை விபத்தினை சந்தித்தவரிடம் கேட்கவேண்டும்.Ø ஒரு வினாடியில் நூறில் ஒரு பங்கான மில்லி செகண்டின் அருமையை உணரவேண்டும் என்றால், ஒலிம்பிக்சில் பதக்கத்தத் தவற விட்ட விளையாட்டு வீரரைக் கேட்கவேண்டும்.பதிப்புலகம் பற்றிய கட்டுரைகள் நிறைய எழுதியதன் மூலமாக எனக்கு அறிமுகமானவர் அவரது தம்பி ரவி தமிழ்வாணன். லேனாவும், ரவியும் அண்ணன் தம்பி என்றாலும், அதற்கும் மேலாக அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்கள். வாராவாரம் ஒரு குறிப்பிட்ட நாளில், இருவரும் சேர்ந்து பண்ணை வீடு, பீச், உணவகம் இப்படி எங்காவது சென்று பிசினஸ், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றியும் விரிவாக மனம் விட்டு பேசுவது பல்லாண்டு கால வழக்கம்,.ஒரு முறை, லேனா வெளிநாடு சென்றிருந்தபோது, ரவி மட்டும் தனியாக அவர்கள் வழக்கமாகச் செல்லும் உணவகத்துக்குச் சென்றபோது அங்கே இருந்த உணவக ஊழியர், “ ஏன் சார் இன்னிக்கு தனியா வந்திருக்கீங்க? உங்க ஃப்ரெண்ட் வரலியா?” என்று கேட்டாராம். சகோதரர்கள், அவருக்கு நண்பர்களாகத் தெரிந்திருக்கிறார்கள். பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது, இருவரும் ஒரே மாதிரியான உடை அணிந்து செல்வதை நான் பல முறை கவனித்திருக்கிறேன்.லேனா தமிழ்வாணன் பல்வேறு நாடுகளுக்கும் சென்று வந்தவுடன், அவற்றைப் பயணக் கட்டுரைகளாக வாசகர்களுக்கு வழங்கிவிடுவார். ரவி தமிழ்வாணனும், சளைக்காமல் அயல்நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்பவர்தான். அவரது பதிப்புலக சாதனைகளைப் பாராட்டி, பல்வேறு அமைப்புகளும் விருதுகள் வழங்கி உள்ளன. இவரது நட்பு வட்டம் உலகளாவியது. இவர் உலகில் தமிழர்கள் எங்கேங்கே இருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று புத்தகக் கண்காட்சி நடத்தி தமிழ் புத்தகங்களை வாசகர்களுக்கு கிடைக்கச் செய்கிறார். “இன்று உலகம் முழுவதிலுமாக தமிழர்கள் பரவி இருக்கின்றனர். அவர்களில் மூத்த தலைமுறையினருக்கு ஓரளவுக்காவது தமிழ் வாசிக்கத் தெரிந்திருக்கிறது. இளைய தலைமுறையினர் தமிழ் பேசினாலும், எழுதப் படிக்கத் தெரியவில்லை என்பதுதான் இன்றைய யதார்த்தம்” என்று சொல்லும்போது அவர் குரலில் வருத்தம் மேலிடும்.அவரது கடல் கடந்த புத்தகக் கண்காட்சி அனுபவம் குறித்தும் பேட்டி கண்டிருக்கிறேன். “தமிழர்கள் அதிகமாக வாழும் இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமில்லாமல் உகாண்டா, கென்யா, தென் ஆப்ரிக்கா என சில ஆயிரம் தமிழர்கள் வசிக்கும் நாடுகளுக்கும் சென்று தமிழ்ப் புத்தகக் கண்காட்சிகள் நடத்தி இருக்கிறேன். கல்கி, மு. வ., கண்ணதாசன், தமிழ்வாணன், சுஜாதா, ரமணி சந்திரன் ஆகிய தமிழ் எழுத்தாளர்களின் தீவிரமான வாசகர்கள் இன்னமும் உலகம் எங்கும் இருக்கிறார்கள். இந்த தலைமுறை எழுத்தாளர்களான ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் இருவருக்கும் இளைய தலைமுறை வாசகர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்” என்று கூறினார்.“இலங்கையில் காகிதத் தொழிற்சாலைகள் கிடையாது. எனவே, இறக்குமதி செய்த காகிதத்தில், புத்தகங்களை அச்சிட்டு, வெளியிடுவதற்கு மிகவும் அதிகமாக செலவு ஆகும். இதன் காரணமாக, பல ஈழத்து எழுத்தாளர்கள், கவிஞர்களின் படைப்புக்களை நாங்கள் இங்கே அச்சிட்டுக் கொடுத்திருக்கிறேன்; அவர்களின் சுமார் ஐநூறு புத்தகங்களை மணிமேகலை பிரசுரம் மூலமாகவே வெளியிட்டிருக்கிறேன். அந்த வகையில் பார்த்தால், புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக வெளியீட்டுக்காக இலங்கைக்கு மட்டும் 60 முறை போயிருக்கிறேன். கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் மட்டும் 20 புத்தக வெளியீட்டு விழாக்கள் நடத்தி இருக்கிறேன். அதே போல லண்டனில் ஒரே மேடையில் பதினான்கு புத்தகங்களை வெளியிட்ட நிகழ்ச்சியும் மறக்க முடியாத ஒன்று” என்கிறார் ரவி தமிழ்வாணன்.அவரது மியன்மார் அனுபவம் இதோ: “1964 முதல் மியன்மாரின் (பர்மா) ராணுவ ஆட்சி தமிழ்ப் புத்தகங்களுக்கு தடை விதித்தது. தமிழ்ப் புத்தகங்களை, பர்மிய மொழியில் மொழி பெயர்த்து, அவர்களுக்கு அனுப்பிவைத்து, அனுமதி பெற்று, அதன் பின்னரே அங்கே தமிழ்ப் புத்தகங்களை விற்பனை செய்ய முடியும். ஆனால், அது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால், அந்நாட்டில் தமிழ் மக்கள் நிறைய வசித்தாலும் கூட, அங்கே தமிழ்ப் புத்தகங்கள் விற்பனை செய்ய முடியாத நிலைமை நிலவியது. ராணுவ ஆட்சி மாறி, ஜனநாயகம் மலர்ந்ததும், நான் புத்தகத் திருவிழா ஒன்றை நடத்த முயற்சி எடுத்தேன். ஒரு சிவராத்திரியன்று, ரங்கூன் நகரின் பெரிய சிவன் கோவிலில் விடிய, விடிய தமிழ்ப் புத்தகக் கண்காட்சி கோலாகலமாக நடந்தது. இது, பர்மியத் தமிழர்களை நெகிழச் செய்தது”தந்தை தமிழகத்துக்குள்ளே எட்டடி பாய்ந்தார். மகன்கள் உலகமெங்குமாக எட்டுக்கு எட்டாய் 64 அடி பாய்ந்து கொண்டிருக்கிறார்கள்! (தொடரும்)